திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்ப...
``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி
சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்துக்கு இன்னும் ஆளும் பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சீன ஊடுருவல் குறித்த விவாதத்தின்போது ராகுல் காந்தி, நரவானே எழுதிய புத்தகம் தொடர்பாக காரவன் இதழில் வெளியான செய்திக்கட்டுரையை மேற்கோளிட்டு பேச முயன்றார்.
அதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் படிக்கவே விடவில்லை. மேலும், சீனா ஊடுருவல் குறித்துப் பேச அனுமதியும் மறுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``பிரதமருக்கு இன்று மக்களவைக்கு வரும் துணிச்சல் இருக்காது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர் வந்தால், (முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற) இந்தப் புத்தகத்தை நானே நேரில் சென்று அவரிடம் வழங்குவேன். அப்போதுதான் அவர் இதைப் படிக்க முடியும்.
நாட்டின் உண்மையை இந்த தேசமும் தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் இப்படி ஒரு புத்தகம் இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம். லடாக் விவகாரம் குறித்து முழுமையான விவரங்களை அவர் இதில் அளித்துள்ளார். மக்களவையில் இந்தப் புத்தகத்தை மேற்கோள் காட்டக் கூடாது என்று என்னிடம் கூறப்பட்டது. இந்தப் புத்தகத்தில் முக்கியமான வரி "ஜோ உசித் சம்ஜோ வோ கரோ" (எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்) என்பதுதான்.

இந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது. சீன டாங்கிகள் இந்திய எல்லையின் கைலாஷ் மலைத்தொடருக்குள் அத்துமீறி வந்தபோது, அந்த டாங்கிகள் மீது எதிர்த்தாக்குதல் நடத்த அப்போதைய தளபதி நரவானேவும், நம் ராணுவமும் தயாராக இருந்தன. சீனப் படைகள் உள்ளே நுழைந்தால், அனுமதி இல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடி ராணுவத்துக்கு வழங்கியிருந்த உத்தரவு என்பதால், ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே, ராஜ்நாத் சிங் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறி, 'இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார். முதலில் ராஜ்நாத் சிங் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராஜ்நாத் சிங் என மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில், ராணுவத் தளபதி நரவானேவின் அழைப்பை ஏற்ற ராஜ்நாத் சிங், `நான் மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்' எனக் கூறியிருக்கிறார். அத்துமீறி நம் எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துவிட்டது எனக் கூறியதற்குப் பிறகு பிரதமர் மோடி, `எது சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்' என்ற செய்தியை அளித்திருக்கிறார்.
இதன் பொருள், 'என்னால் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது. ராணுவத் தளபதியிடமே நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார். இந்த சம்பவத்தை விளக்கியிருக்கும் நரவானே, அந்த இக்கட்டான சூழலில், ஒட்டுமொத்த அரசாங்கமும் தன்னைத் தனித்து விட்டுவிட்டதாகவும், தனக்குத் துணையாக யாரும் இல்லை என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்" என்றார்.












