கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும்...
`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!
சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை உடல்நலம் காரணமாக பயணம் செய்ய முடியாது. பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக சொன்ன அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவதும் சந்தேகம் என்று அறிவித்துள்ளார். அவரின் முடிவுக்கு என்ன காரணம்?

4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம்!
பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, நேற்றைய செய்தியாளர் சந்திப்பு பட்ஜெட் பற்றியது. அதில் பட்ஜெட் தான் முதன்மையாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 'நீங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே' என்று கேட்டனர்.
அதற்கு தான் அண்ணாமலை, 6 தொகுதிகளின் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக கூறினார். அந்தக் கேள்விக்கும், அவரின் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பட்டு வருவது உண்மை.
இந்த 2 ஆண்டுகளில் அவருக்கு எவ்வளவோ கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அப்போதெல்லாம் மறுக்காமல் அண்ணாமலை அதை செய்தார். தந்தைக்காக கட்சிப் பணிகளில் இருந்து விடுவிக்க சொல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன.

ஆனால் அது 4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டிய விவகாரம். அதை அவர் தலைப்புச் செய்தியாக சொல்லியிருக்கக் கூடாது. பட்ஜெட், அமெரிக்கா வரி குறைப்பு என்று தேசியளவுக்கு பல்வேறு முக்கிய விவகாரங்கள் உள்ளன. அவைதான் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
`அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார்'
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போதுதான் பிரச்னைகளை ஓரளவுக்கு சரி செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவை அனைத்தையும் அண்ணாமலை திசை திருப்பிவிட்டுள்ளார். முன்னாள் மாநிலத் தலைவரான அவருக்கு 6 தொகுதிகளை கொடுத்து தற்போதைய மாநிலத் தலைமை மட்டுப்படுத்துவதாக எல்லாம் அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
இதேபோல முன்னாள் மாநிலத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனுக்கு 5 தொகுதிகள் தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
இது சுற்றுப் பயணத்திற்காக போடப்பட்ட பொறுப்புதான். அதில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்குமே 3-7 தொகுதிகள் தான் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஏராளமான பணிகள் உள்ளன. அண்ணாமலை தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான முகம் என்பதால் கட்சி நிச்சயம் அவருக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கும்.

2024 நாடாளுமன்ற தேர்தலின்போது மொத்த தமிழ்நாடும் அண்ணாமலையின் பொறுப்பில் தான் விடப்பட்டது. அதில் அண்ணாமலை என்ன சாதனை செய்தார். கூட்டணி தொடங்கி அப்போதெடுத்த பல முடிவுகள் தவறு என்பதால்தான் இந்த தேர்தலுக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாஜகவை பொறுத்தவரை கட்சிதான் முதன்மையானது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இங்கு ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய முடியாது. அண்ணாமலை தொடர்ந்து அந்தத் தவறை செய்து வருகிறார். இதை அமித் ஷா உள்ளிட்டோர் விரும்பவில்லை.

ஏற்கெனவே திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அமித் ஷாவின் டெல்லி ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தபோதே அவர் கடும் கோபமடைந்தார். தற்போது அமித் ஷாவின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது.
அண்ணாமலையின் கோபத்திற்கு காரணம் இந்த 6 தொகுதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவருக்கு தேசிய அளவில் முக்கியமான பதவி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை வழங்கவில்லை.

நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு தேசிய பொறுப்புகள் போடும் பணி நடந்து வருகிறது. இதில் அண்ணாமலையின் பெயர் பரிசீலனையில் இருந்து பிறகு நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது அவரின் ஈகோவை சீண்டிவிட்டது.
கட்சி தன்னை ஓரம் கட்டுவதற்கு முன்பு, நான் விலகியதுதான் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காகவே செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தமே இல்லாமல் இதனை அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜகவில் விரிசல் என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி – டிடிவியை இணைத்த அமித் ஷா சொந்தக் கட்சி விஷயத்தில் கோட்டை விட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால் டெல்லி தலைமை அதிருப்தியாகியுள்ளது. தேசியளவிலான பதவி, எம்எல்ஏ சீட் என்று அவருக்கு அடுத்தடுத்து காத்திருந்த பதவிகள் எல்லாமே இனி கானல் நீராகிவிடவும் வாய்ப்பு இள்ளது. ” என்றனர்.













