T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓ...
"அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு நான் என்னப் பண்ணப்போறேன்" - `மிளிரும்' தூய்மைப் பணியாளர் பத்மா
சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பத்மா. ஜனவரி 11-ம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தபோது 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பை ஒன்றைக் கண்டெடுத்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தான் கண்டெடுத்த பையை ஒப்படைத்தார். ஏழ்மையான சூழலிலும் பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. முதல்வர் உட்பட பலரும் பரிசுத் தொகை வழங்கி பத்மாவை ஊக்கப்படுத்தினர்.

இதனையடுத்து, சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் மை ஸ்டாம்பில் பத்மாவின் புகைப்படத்துடன் சில தினங்களுக்கு முன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தூய்மைப் பணியில் இருந்த பத்மாவை நேரில் சந்தித்துப் பேசினோம்.
"20 வருஷமா தூய்மைப் பணியாளரா வேலை செய்றேன். என் வீட்டுக்காரர் ஆட்டோ ஓட்டுறாரு. எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. நானும், என் வீட்டுக்காரரும் பள்ளிக்கூடம் பக்கம்கூட ஒதுங்குனதில்ல. அதனால பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்னு நினைச்சோம். பொண்ணு பிளஸ் டூ வரை படிச்சுது. அப்புறம் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். பையன் பி.காம் முடிச்சுட்டு வேலைக்குப் போறான்.

ரெண்டு பேர் வருமானத்துலதான் குடும்பத்தை நடத்திட்டு இருந்தோம். சொத்து, சுகம்னு எதுவும் கிடையாது. அதனால ஒரு நாளும் லீவ் போட மாட்டேன். சம்பளம் போயிரும்ல. என் வேலைதான் எனக்கு எல்லாம். குப்பை அல்லுறேன்னு ஒரு நாளும் முகம் சுளிச்சதில்ல. எல்லோரும் ஒரு வேலை பார்த்தாதான சமூகம் சமமாக இருக்கும். படிச்சவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலையை செய்றாங்க. படிக்காத நான் எனக்குத் தெரிஞ்ச வேலையை செய்றேன். இதுல அசிங்கப்படவோ, அவமானப்படவோ என்ன இருக்கு. தூய்மைப் பணியாளர் இல்லனா நாடு சுத்தமா இருக்குமா? போலீஸ்காரங்களுக்கு யூனிஃபார்ம் போட்டா கெத்து மாதிரி எனக்கும் என் யூனிஃபார்ம் கெத்துதான்" பெருமையைக் கடத்துக்கிறது பத்மா அக்காவின் முகம்.
"தினமும் காலையில சமைச்சு, பிள்ளைகளுக்கு கொடுத்துட்டு வேலைக்கு வந்துருவேன். என் வீட்டுக்காரர் ராணியை இறக்கி விடுற மாதிரி வந்து ஆட்டோல இறக்கி விட்டுப்போவாரு. என் வேலையில நான் யாரையும் குறை சொல்லமாட்டேன். மக்கள் குப்பையை பிரிச்சு போடலனாக்கூட நான் பிரிப்பேன். எரிச்சல் படமாட்டேன். குப்பையா கெடக்குற தெருவை, கூட்டி சுத்தம் செஞ்சு, திரும்பி பார்க்கும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க. அந்த நிறைவு போதும்" என்ற பத்மா அக்காவிடம், நகையை மீட்டது பற்றிக் கேட்டோம்.

"நிறைய பேர் எங்களுக்கு சாப்பாடு தருவாங்கம்மா. சிலர் எங்க கையில கொடுக்க சங்கடப்பட்டுகிட்டு ரோட்டுல ஓரமா வெச்சுட்டுப் போவாங்க. அன்னைக்கும் ஒரு பை அப்படித்தான் இருந்துச்சு. சாப்பாடு இருக்குனு நினைச்சு அந்தப் பையை நான் எடுத்துட்டு கிளம்பிட்டேன். ஆட்டோல ஏறி பார்த்தேன். பை முழுக்க நகை இருந்துச்சு. சாப்பாடு இல்லையேனு ஏமாற்றம் ஒரு பக்கம். இம்புட்டு நகையை யாரு விட்டதுனு பயம், பதட்டம் ஒரு பக்கம்.
நேரா எங்க ஆபிஸரைப் பார்த்தேன். அவரு போலீஸ்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. நகையை பறி கொடுத்தவங்களும் அங்க வந்திருந்தாங்க. நகையை அவங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்" என்ற பத்மா அக்காவிடம் நகையை திரும்பி கொடுக்கும் எண்ணம் எப்படி வந்துச்சுக்கா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

"அது நான் சம்பாதிக்கலேலம்மா. சம்பாதிச்சவங்க மனசு எவ்வளவு தவிச்சிருக்கும். அடுத்தவங்க சம்பாதிச்ச அந்த நகையை நான் வெச்சி என்ன பண்ணப்போறேன். சுய சம்பாத்தியத்துல போட்டுருக்க இந்த மஞ்சக் கயிறு போதும் எனக்கு. நகையை எடுத்துக் கொடுத்ததுக்கு நிறைய பேர் பரிசுகள் கொடுத்தாங்க. அதுவே நான் எதிர்பார்க்காதது தான். இப்போ போஸ்ட் ஆபிஸ்ல என் போட்டோ வெச்சு ஸ்டாம்ப் வெளியிட்டுருக்காங்க. ஸ்டாம்ப் வெளியிட்ட அன்னைக்கு காலையில, போஸ்ட் ஆபிஸ்ல இருந்து போன் பண்ணாங்க. நான் போனேன். என் போட்டோ வெச்ச ஸ்டாம்ப் கொடுத்தாங்க. அது என்ன, ஏதுனு ஒன்னும் புரியல. வெளிய வந்தா எல்லாரும் கொண்டாடுறாங்க. சந்தோஷம் ஆகிப்போச்சு. என் வீட்டுக்காரருக்கு அம்புட்டு பெருமை. அந்த நகையை நான் எடுத்துட்டு போயிருந்தா என் வீட்டுக்காரர் முகத்துல பயம்தான் இருந்திருக்கும். இந்த சந்தோஷத்தை அவரு முகத்துல பார்த்திருக்க முடியுமா சொல்லுங்க. நேர்மை தான் நம்ம சம்பாத்தியம்" என்று எதார்த்தமான வார்த்தைகளுடன் விடைபெறுகிறார் பத்மா!



















