T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" - பாகிஸ்தானு...
`குடும்பத்தோடு இருக்க பணம் கொடுக்க வேண்டும்' - 89 வயதில் மும்பை ரயிலில் நெக்லஸ் விற்கும் மூதாட்டி
மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் ஏறி இறங்குவது என்பது மிகவும் சவாலான காரியம். சில பயணிகள் தாங்கள் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தில் இறங்க முடியாமல் அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
மத்திய ரயில்வேயை விட மேற்கு புறநகர் ரயிலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருக்கும். மேற்கு ரயில்வேயில் சர்ச்கேட் முதல் விரார் மற்றும் தகானு வரை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் போரிவலி, வசாய், நாலாசோபாரா ரயில் நிலையங்களில் தான் அதிக அளவில் பயணிகள் ஏறி இறங்குவர்.
அது போன்ற கடுமையான கூட்ட நெரிசலில் யாசகம் கேட்பவர்கள், வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோர் ரயில்களில் வருவதுண்டு. அது போன்ற புறநகர ரயிலில் 89 வயது மூதாட்டி ஒருவர் கைகளினால் செய்யப்பட்ட பிரேஸ்லெட் விற்பனை செய்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

அவர் பயணிகளுக்கிடையே புகுந்து வியாபாரம் செய்யும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவை பயணி ஒருவர் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
அந்த மூதாட்டி ரயிலில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பயணி உங்களது பெயர் என்னவென்று கேட்டார். அதற்கு அப்பெண் தனது பெயர் கமலா பென் மேத்தா என்று கூறினார். உடனே அவரிடம் உங்களது வயது என்னவென்று கேட்டதற்கு, அவர் தனக்கு 89 வயதாகிறது என்று தெரிவித்தார். மேற்கொண்டு அப்பெண்ணிடம் பேசியபோது, `தனது குடும்பத்தோடு சேர்ந்து வசிக்க பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்றும், தான் நாலாசோபாராவில் வசிப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஒரு பயணி தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில்,''எண்பத்தொன்பது வயதுப் பெண் மும்பை புறநகர் ரயிலில் மதியம் ஏறி, வளையல்கள் விற்றுக் கொண்டிருந்தார். நான் அனைத்தையும் வாங்க விரும்பினேன் ஆனால் என்னிடம் குறைந்த பணம் இருந்ததால் வாங்க முடியவில்லை.
அவர் தனது குடும்பத்தோடு தங்குவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் அவருடைய முகவரியைக் கொடுக்கவில்லை''என்று குறிப்பிட்டுள்ளார். புறநகர் ரயிலில் வழக்கமாக பயணம் செய்யும் செய்யும் பெரும்பாலான பயணிகளுக்கு அந்த மூதாட்டியை தெரிந்திருக்கும்.
60 ஆண்டு பயணம்
விலே பார்லேயில் இருந்து நாலாசோபாரா வரை தினமும் பிற்பகல் நேரத்தில் பிரேஸ்லெட் விற்பனை செய்து வருகிறார். அந்த மூதாட்டி திருமணமான சில மாதங்களில் தனது கணவனை இழந்துள்ளார். அதன் பிறகு குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல் கடந்த 60 ஆண்டுகளாக இது போன்று புறநகர் ரயில்களில் வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பெண்ணின் மனவுறுதியும் அர்ப்பணிப்பும் இணையத்தில் பலரின் இதயங்களைத் தொட்டுள்ளது.
ஒருவர் தனது பதிவில், “நாலாசோபாராவிலிருந்து பயணம் செய்வது எளிதான காரியம் அல்ல, இளைஞர்களுக்குக் கூட அது கடினம். அது போன்ற ஒரு நிலையில் வியாபாரம் செய்யும் மூதாட்டிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், இது ஒரு மகத்தான செயல். சூழ்நிலை மனிதர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. அந்தப் பாட்டியை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொருவர் தனது பதிவில், ''மூதாட்டி பொருட்களை விற்றுவிட்டு, ரயிலில் இருந்த மற்றொரு யாசகம் எடுக்கும் பெண்ணுக்கும் சிறிது பணம் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார். சிலர் அந்த மூதாட்டியிடம் நாங்கள் பொருட்கள் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.!

















