`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி ...
T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!
பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் அணியின் இந்த முடிவிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், "பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.

ஐசிசி கண்டனம்
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல.
ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று சொல்வது நியாயம் இல்லை. இது நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது.
டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வது மட்டுமன்றி இதில் பல சிக்கல்களும் இருக்கின்றன.
பாகிஸ்தான் அணிக்கு ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன?
இந்தியாவுக்கு எதிரான போட்டியை விளையாடாமல் புறக்கணிக்க முடிவு செய்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி ஆடவில்லை என்றால் அந்தப் போட்டிக்கான 2 புள்ளிகள் அப்படியே இந்தியாவுக்கு வழங்கப்படும். இது அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பாதிக்கும்.

பல கோடி ரூபாய் வரை இழப்பு
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வருவாயை ஈட்டக்கூடிய ஒரு போட்டியாக இது இருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மூலம் மட்டும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்குபெறவில்லை என்றால் ஸ்பான்சர்கள், டிக்கெட் விற்பனை எல்லாம் சேர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம்.
புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும்!
மேலும் ஐசிசி வழங்கும் நிதியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும். இதனால் உள்நாட்டு கிரிக்கெட், வீரர்களின் ஒப்பந்தங்கள், மைதானங்கள், இளம் வீரர்கள் பயிற்சி எல்லாமே பாதிக்கப்படும்.
டி 20 உலகக்கோப்பைக்கு ஒளிபரப்பு உரிமை பெற்றிருக்கும் நிறுவனம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு கோரலாம். அப்படி கோரினால் அதுவும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
தவிர ஐசிசியை எதிர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் எதிர்வரும் ஐசிசி மற்றும் டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்படும் சூழலும் உருவாகும்.

ஐ.சி.சிக்கும் வருமான இழப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புபோல ஐசிசி-க்கும் வருமான இழப்புகள் ஏற்படும்.
ஏற்கெனவே ஐ.சி.சி தொடர்களை விட மற்ற லீக் போட்டிகளில்தான் அதிக வருமானம் வருவதாக முக்கிய கிரிக்கெட் போர்டுகள் நினைக்கின்றன.
2020 கொரோனா சமயத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 உலகக்கோப்பை தொடர் நடந்திருக்க வேண்டும்.
ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு டி20 உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை நடத்துவதுதான் தங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என நினைத்தது.
ஐ.சி.சியிடம் முறையிட்டு உலகக்கோப்பையை தள்ளியும் போட்டது. உலகக்கோப்பையின் நிலை இதுதான்.
வருவாய்க்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் போட்டி
இப்படியொரு நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போதுமே வருவாய்க்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும்.
இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீரும். அந்தப் போட்டியைக் காண உலகின் பல நாடுகளிலிருந்தும் பயணம் செய்து வருவார்கள்.
தோனி இன்னமும் ஐ.பி.எல் இல் ஆடிக்கொண்டிருக்க, அவர் மூலம் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வணிகம்தான் காரணம்.
அதேதான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் சுவாரஸ்யமிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

குட்டிக்குட்டி நாடுகளுக்கும் பயன்படும்!
ஆனால், இன்னமும் அந்தப் போட்டியைக் காண ஒருவித ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது.
அதனால்தான் போட்டியை ஒளிபரப்புச் செய்யும் சேனல் இந்தப் போட்டியை மையப்படுத்தி அதிக விலைக்கு விளம்பர ஸ்லாட்களை விற்றிருக்கும்.
இப்படி வரும் வருமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஐ.சி.சிக்கும் மட்டுமல்ல. குட்டிக்குட்டி நாடுகளுக்கும் பயன்படும்.
கிரிக்கெட்டை உலகளவில் பரவலாக்க வேண்டுமென்றே டி20 உலகக்கோப்பையில் 20 நாடுகளை ஆட வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்தார்கள்.
தோல்விகரமான ஐ.சி.சி தொடர்
அப்படி ஆடும் குட்டிக்குட்டி நாடுகளுக்கு ஐ.சி.சி மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் முக்கியம்.
ஐ.சி.சிக்கு வருமானம் ஈட்டித்தர இந்தியாவும், பாகிஸ்தானும் ஆடும் போட்டிகளும் முக்கியம்.
2007 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையை தோல்விகரமான ஐ.சி.சி தொடர் என்பார்கள்.

இது ஒரு சங்கிலி விளைவு
அதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று அந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிராக ஒரு போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை.
இதனால் அந்தத் தொடரின் வருமானம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. ஆக, இது ஒரு சங்கிலி விளைவு.
நடைபெறாமல் போகும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் கிரிக்கெட் மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதன் வளர்ச்சி மட்டுப்படலாம்.




















