செய்திகள் :

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

post image

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அன்றைய தினம் உலகம் முழுக்க இருக்கும் வள்ளலாரின் பக்தர்கள் வடலூருக்கு வந்து, ஏழு திரைகள் நீக்கிக் காட்டப்படும் ஜோதியை தரிசித்துச் செல்வார்கள். அன்றைய தினம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அங்கு அன்னதானம் வழங்கப்படும்.

அதற்காக கடந்த 25 ஆண்டுகளாக அரிசியையும் காய்கறியையும் வழங்கி வரும் கடலூர் காய்கறி வியாபாரி பக்கீரான், இந்த ஆண்டு 18,000 கிலோ காய்கறி மற்றும் 100 அரிசி மூட்டைகளை சத்தியஞான சபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா

இதுகுறித்து பக்கீரானிடம் பேசியபோது, ``அது 2001-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வள்ளலாரின் தீவிர பக்தரான என்னுடைய நண்பர் சிவபெருமாள், `நீங்க ரொம்ப கஷ்டப்படறீங்க. தைப்பூசத்திற்கு சத்தியஞான சபைக்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுங்க.

கண்டிப்பாக நீங்க நல்லா இருப்பீங்க' என்று சொன்னார். உடனே 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தேன். அவர் சொன்னதைப் போல நான் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக அல்ல. பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதைத் தவிர வேறு கொடுப்பினை என்ன இருக்க முடியும் ?

அதற்காக அந்த அரிய வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அடுத்த ஆண்டு 10 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 25 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 50 மூட்டைகள் என எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வந்தேன்.

`வள்ளலார் மூட்டிய நெருப்பு மதங்களைக் கடந்து எரியும்..!’

ஆரம்பத்தில் நண்பர் சிவபெருமாள் சொன்னதைப் போல கஷ்டத்தில் இருந்து மீண்டும் விட்டேன். அப்போது சபையில் இருந்து, `நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க ?' என்று என்னைக் கேட்டபோது, நான் காய்கறி வியாபாரம் செய்வதாகச் சொன்னேன்.

அதற்கு, `ஐந்து வருஷத்துக்கு தேவையான அரிசி எங்ககிட்ட இருக்குது. அதனால நீங்க காய்கறியை கொடுங்க. மகிழ்ச்சியா ஏத்துக்குவோம்' என்று கேட்டனர். அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வந்தேன்.

கடந்த ஆண்டு 25 டன் காய்கறிகளை அனுப்பினேன். என்னைப் போல பலரும் தைப்பூசத்திற்கு காய்கறிகளைக் குவித்ததால், இந்த ஆண்டு காய்கறிகளைக் குறைவாக கொடுங்கள் என்று சபையில் கூறினார்கள்.

சத்தியஞான சபைக்கு ஏற்றப்படும் காய்கறிகள்

அதனால் இந்த ஆண்டு 18 டன் காய்கறிகள், 100 மூட்டை அரிசி, 7,000 தண்ணீர் பாட்டில்கள், மளிகைப் பொருட்களை அனுப்பினேன். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கருத்து சாதாரணமானது கிடையாது.

பசியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பசிக்கு சாதியோ மதமோ தெரியாது. வள்ளலாரின் சிந்தனைக்கும், இந்த சமூகத்திற்கு அவர் காட்டிய வழிக்கும் முன்னால், நான் செய்வது ஒன்றுமே கிடையாது.

வள்ளலாரின் பக்தர்கள் நாடு முழுவதும், நாடு கடந்தும் அன்றாடம் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வருகிறார்கள். அந்த வகையில் வள்ளலார் மூட்டிய நெருப்பு, மதங்களைக் கடந்து இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் எரியும்" என்று நெகிழ்கிறார்.

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க

மனைவிக்கு பக்கவாதம்; சைக்கிள் ரிக்‌ஷாவில் 300 கி.மீ பயணம் - 70 வயது முதியவரின் காதல்!

ஒடிசாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு சிகிச்சை கொடுக்க 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல பணமில்லாமல் சைக்கிள் ரிக்‌ஷாவில் அழைத்து சென்றது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற... மேலும் பார்க்க

அவசர நிலை முதல் அயோத்தி வரை: இந்திய வரலாற்றைக் குரலால் செதுக்கிய மார்க் டல்லி காலமானார்!

தெற்காசியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளரும், பிபிசி (BBC) செய்தி நிறுவனத்தின் இந்திய முகமாகப் போற்றப்பட்டவருமான மார்க் டல்லி (90), டில்லியில் நேற்று காலமானார். அக்டோபர் 24, 1935-ல் கொல்கத்தாவில் பிறந்... மேலும் பார்க்க

எம்ஜிஆர் பிறந்தநாளிலேயே உயிர்நீத்த தீவிர ரசிகர் - யார் இந்த `எம்ஜிஆர்' இசக்கி?

தென்காசி மாவட்டம், கடையம் அருகில் அமைந்துள்ளது பாப்பான்குளம் கிராமம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இசக்கி, அவர் தி.மு.கவில் இணைந்த போது தி.மு.கவில் இணைந்தார். பின்னர், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கிய... மேலும் பார்க்க

`10 ரூபாய்க்கு பசி தீரும் அளவுக்கு சாப்பாடு!' - நெகிழ வைக்கும் சேலம் தம்பதியின் கதை

விலைவாசி போற நிலைமையில, 10 ரூபாய்க்கு சாப்பாடுனு யாராவது சொன்னா எப்படி இருக்கும். அதெல்லாம் சாத்தியம் இல்லனு சொல்லுவோம்... 10 ரூபாய்க்கு ஒரு தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாப்பாடு கொடுத்து வர்ராங்கானு... மேலும் பார்க்க