மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - எ...
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி அமைந்த ஓர் அற்புதக் கோயில்தான் கழுகுமலை.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தின் மகிமைகள் ஏராளம். வாருங்கள், கழுகுமலை குறித்த புராண இதிகாச தகவல்களையும் அங்கு அருள்பாலிக்கும் முருகனின் சிறப்பையும் பரிகார சிறப்பையும் அறிந்துகொள்வோம்.
ராமாயண காலத்தில் இதன் பெயர் கஜமுக பர்வதம். சடாயுவை ராவணன் கொன்றான். ராமபிரானே அவருக்கு மகன் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார்.
சடாயுவின் சகோதரன் சம்பாதி. செய்தியறிந்து ஓடிவந்து ராமபிரானைச் சந்தித்து வணங்கினான். சகோதரனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைக் கூடச் செய்ய இயலாத பாவியாகிவிட்டேனே என்று புலம்பினான்.

ராமன் அவனைத் தேற்றினார். கஜமுக பர்வதத்தில் கோயில்கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தொழுது பாவங்கள் தீர வழிகாட்டினார். கழுகு சம்பாதி, வந்து வழிபட்ட மலை இது என்பதால் இதற்குக் கழுகுமலை என்ற பெயர் ஏற்பட்டது.
கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்துபாடிய அண்ணாமலைச் செட்டியார், இந்த ஊரை வீதிதோறும் ஆதிமறை வேதங்கள் முழங்கிய ஊர் என்று குறிப்பிடுகிறார். செல்வச் செழிப்பும் இயற்கை வளமும் கொண்டு சிறந்து விளங்கிய ஊர் என்று தன் காவடிச் சிந்தில் போற்றிப் புகழ்கிறார் அண்ணாமலை.
இங்குள்ள கழுகாசலமூர்த்தி ஆலயம் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 300 அடி உயரம் உள்ள மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இந்த ஆலயம் முழுவதும் சிற்பங்களும் ஓவியங்களும் காண்போர் கண்ணைக் கவரும்.
இந்த ஆலயத்தில் தரிசனம் செய்ய ஒரு முறையை வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். முதலில் இந்தக் கோயிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் வணங்க வேண்டும். பின்பு வலதுபுறமாக தட்சிணாமூர்த்தியை வணங்கி அபிஷேகத் தீர்த்தம் வழியும் கோமுகியை அடைந்து தீர்த்தத்துளிகளைத் தொட்டுத் தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும்.
பிறகுதான் மற்ற சந்நிதிகளை அடைந்து வழிபடலாம் என்கின்றனர் பக்தர்கள். அபிஷேகத்தீர்த்தம் நம் ஆத்மாவைத் தூய்மை செய்து ஆண்டவன் தரிசனத்துக்கு நம்மை தயார்படுத்தும் என்பது இதன் தாத்பர்யம்.
இங்கு முருகப்பெருமானின் கருவறை சந்நிதி சற்று உயர்ந்த மேடையில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் முருகன் ஒரு தலையோடும் ஆறு கரங்களோடும் அருள்பாலிக்கிறார். கருவறையில் முருகனோடு வள்ளி - தெய்வயானை ஆகியோர் முருகனுக்குப் பக்கவாட்டில் இருபுறமும் நேருக்கு நேர் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளனர்

முருகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். மயில் வலதுபுறமாகத் தன் தலையைத் திருப்பியவாறு காட்சி தருகிறது. பக்தர்கள் சொல்லும் குறையைக் கேட்டு ஓடிவந்து காப்பதற்குத் தயாராக மயில் அவ்வாறு வலப்புறம் பார்த்தவாறு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அடியவர்கள்.
இங்கு நரசிம்ம மூர்த்திக்கும் சந்நிதி உள்ளது. நரசிம்மர் இங்கு யோக நரசிம்மராக வீற்றிருக்கிறார்.
கழுகுமலை என்றதும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி வைபவமே நினைவுக்கு வரும். மாறுபட்ட உருவத்தில் சூரர்களைச் செய்து விரதமிருந்து அதைச் சுமந்துகொண்டு பக்தர்கள் ஆடிவரும் அழகே தனி.
வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். திருவிழாக்காலங்களில் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி தாங்கியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பரிகாரச் சிறப்பு
கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள்.
அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
கழுகாசல மூர்த்தியை வழிபாடு செய்துவிட்டு கோயிலோடு ஒட்டியிருக்கும் மலையையும் சென்று காணவேண்டும். சமணர்காலக் கலை கொட்டிக்கிடக்கும் இடம் கழுகுமலை. இங்குதான் எழில்மிகு வெட்டுவான் கோவில் உள்ளது.
பாதி முடிந்த நிலையிலிருந்தாலும் இதன் கம்பீரமும் அழகும் காண்பவரைப் பிரமிப்பூட்டுபவை. இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் தங்கி கல்விப்பணி செய்ததற்கான சிற்ப ஆதாரங்கள் மலைமீது உள்ளன.

வெட்டுவான்கோவில் இப்படி முடிவற்று நிற்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பெரும் தச்சன் ஒருவன் மலையின் உச்சியில் வடித்துக்கொண்டிருக்கும்போது அவன் மகன் மலையின் நடுப்பகுதியில் சிற்ப வேலைகளைச் செய்யத் தொடங்கினான்.
தனக்குப் போட்டியாக யாரோ வந்துவிட்டார்கள் என்று பொறாமை கொண்ட தச்சன் தன் உளியை ஒலிவந்த திசை நோக்கி எறிந்தான். அந்த உளி தச்சனின் மகன் மீது பட்டு அவன் உயிர் துறந்தான் என்னும் பெருந்தச்சனின் கதை இங்கு சொல்லப்படுகிறது.
ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும்.





















