அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையா...
திருப்பாலைவனம் அருள்மிகு பாலீஸ்வரர்: சோழர் திருப்பணி செய்த கோயிலில் கோலாகலக் கும்பாபிஷேகம்!
முதலாம் ராஜேந்திர சோழன் தன் கடல்போன்ற படைகளை நடத்தி கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாடித் தமிழகத்துக்குத் திரும்பினான்.
அப்படித் திரும்பும் வழியில் பொன்னேரியை அடுத்த பாலை மரங்கள் அடர்ந்திருந்த அந்த வனத்தில் ஓய்வெடுக்கத் தீர்மானித்தது அவன் படை. அதுவரை ஒளிவீசிய சூரியன் மேகங்களுக்குள் சென்று மறைந்தான்.
அந்தச் சூழலே கொஞ்சம் இருள் கொண்டது. மழை வருமோ என்று கண்களை இடுக்கி கை கொண்டு வெளிச்சம் மறைத்து வானைப் பார்த்தனர் வீரர்கள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஒரு மரத்தின் அடியில் நின்ற யானைகளும் குதிரைகளும் வீரர்களும் மட்டும் மயங்கிவிழுந்தனர். மற்ற வீரர்களுக்குள் பதற்றம் பரவியது. அந்த இடத்தில் என்னவோ இருக்கிறது என்று அஞ்சினர். செய்தி மன்னர் காதுக்குப் போனது.
மன்னன் ஓடோடி வந்தான். காட்சியைக் கண்டு பதறினான். 'அந்த மரத்தில் என்ன இருக்கிறது... ஒருவேளை மரத்தின் அடியில் ஏதேனும் மர்மம் ஒளிந்திருக்கலாம். அதை அறிந்துகொள்ள உடனே அந்த மரத்தை வெட்டுங்கள்' என்றான்.

வீரர்களின் கோடாரி மரத்தைப் பிளந்தது. அடுத்தகணம் மரத்துக்குள் இருந்த லிங்கத் திருமேனி ஒன்று வெளிப்பட்டது. அதே நேரம் சூரியனும் மேகத்தில் இருந்து வெளிப்பட்டு வெளிச்ச மழை பொழிந்தான். வெள்ளை நிறத்தில் இருந்த லிங்கத் திருமேனியில் பட்டு ஈசன் சூரிய கோடி பிரகாசநாக ஜொலித்தார்.
மன்னனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்தப் பிறவியின் பயன் அடைந்ததுபோல் மகிழ்ந்தான். லிங்கத் திருமேனியை முழுமையாகவும் பத்திரமாகவும் மீட்டு அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்தான். அங்கே மாபெரும் ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கவும் உத்தரவிட்டான். அந்தத் தலத்தில் சிறப்புகள் என்னென்ன என்று அவன் அடியார்களை அணுகிக் கேட்டபோது அவர்கள் சொல்லிய தகவல் அவனைச் சிலிர்க்க வைத்தது.
தலபுராணம்
சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனம்தான் அந்தத் திருத்தலம். பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் முதலில் வந்தது. அதை அள்ளி உண்டு தேவர்களைக் காத்தார் நீலகண்டன். பாலை மரங்கள் அடந்த வனத்துக்கு அமிர்தத்தோடு வந்து அமர்ந்த இந்திரன் அதை அருந்தும் முன்பு ஈசனை வழிபட விரும்பினான்.
அதற்காக தன் வசம் இருந்த அமிர்தத்தை அள்ளி லிங்கம்போல் பிடித்து வைத்து அதற்கு சிவபூஜை செய்தான். ஈசனும் அந்த அமிர்ந்த லிங்கத்தில் குடியேறி அவன் பூஜைகளை ஏற்றார். தேவர்கள் அனைவரும் அதேபோன்று வழிபட ஈசன் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசி புரிந்தார். அப்போது இந்திரனும் தேவர்களும் ஈசனிடம் தங்கள் மன விருப்பத்தை சமர்ப்பித்தனர்.
இதே பாலை மரத்தடியில் கலியுகம் முடியுமட்டும் அமர்ந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஈசனும் மனமுவந்து அருளி, அவர்களின் வேண்டுகோள்படி அந்தத் தலத்திலேயே குடிகொண்டார்.
அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில்கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.

திருத்தல மகிமைகள்
பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும் பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று. மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
இங்கு ஈசனுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதி அபிஷேகங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன. அதையும் உடனுக்குடன் துணியால் தொட்டுத் துடைத்துவிடுகின்றனர். இந்த ஈசனின் நெற்றியில் சூட்டப்பட்டிருக்கும் வெள்ளிப் பட்டையில்தான் சந்தனம் சாத்துகின்றனர். அதேபோல், பக்தர்கள் தரும் தேனை, ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகிக்கின்றனர்.
ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தன்று, அன்னத்தை ஆவுடையாருக்கு மட்டுமே சாத்தி பூஜிக்கின்றனர். லிங்க பாணத்தின் முன், மேற்பகுதியில் மரத்தை வெட்டும்போது கோடரி பட்ட தழும்பு இப்போதும் திருமேனியில் இருக்கிறது.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பெரிய பிராகாரத்துடன் அமைந்திருக்கும் கோயில் இது. சிவனின் கருவரைக்கு எதிரே வாசல் இல்லை. கல்லாலான சாளரம் உள்ளது. அதற்கும் அப்பால் நந்தியும், கொடிமரமும் அமைந்துள்ளன. சிவனுக்கு வலப்புறம் ஸ்ரீலோகாம்பிகை குடிகொண்டிருக்கிறாள்.
இருவரின் சந்நிதிகளுக்கு நடுவே ஸ்ரீஆறுமுகப்பெருமானின் சந்நிதி உள்ளது. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.
நடராஜர், காசி விஸ்வநாதர், பைரவர், சூரியன், சந்நிதிகளும் இங்குள்ளன. இந்த ஆலயத்திள் அருளும் கதவிற்கணபதி வரப்பிரசாதியானவர். பல ஆண்டுகளுக்குமுன், கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக்கொண்டு எரிந்ததாம். கதவு முழுதும் எரிந்தும், அதில் சிற்ப வடிவமாக இருந்த இந்தக் கணபதிக்கு மட்டும் ஒன்றும் நேரவில்லை. எனவே, இவருக்கு இந்தப் பெயர் நிலைத்துவிட்டது.
பொருள் களவுகொடுத்த அன்பர்கள், எதையாவது தொலைத்துவிட்டு அது திரும்பக் கிடைக்கவேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், இந்தப் பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக் கொண்டால், அந்தப் பொருள்கள் விரைவில் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. அவ்வாறு கிடைத்துவிட்டால், இந்தப் பிள்ளையாருக்கு ஏழு தேங்காய்களை உடைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
வாசுகி நாகம், வழிபட்ட ஈசன் இவர் என்பதால் உள் பிராகாரத்தில் உள்ள வாசுகியின் சந்நிதியில் வேண்டிக்கொண்டால், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவை நிவர்த்தியாகின்றன என்கின்றனர் பக்தர்கள். வெளிப்பிராகாரத்தில் தல விருட்சமான பாலை மரத்தடியில் நாகர் சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

இப்படிப்பட்ட அற்புதச் சிறப்புகள் உடைய பாலீஸ்வரர் திருக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. பெரும் பொருட்செலவில் ஆலயத்தில் பழைமை மாறாமல் புதுப்பித்திருக்கிறார்கள்.
பையூர் கோட்ட வேளாளர் மரபினர் இந்தப் பணியைச் சிறப்புடன் நடத்தி முடித்திருக்கிறார்கள். யாக சாலை 45 யாக குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த யாகசாலை பூஜையில் 150 சிவாசார்யர்கள் ஈடுபட்டு மிகவும் சிறப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் முத்தாய்ப்பான வைபவமான கும்பாபிஷேகம் நாளை (30.1.26) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இதில் சிவ பக்தர்கள் திரளாக வந்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாலீஸ்வரர் அமிர்ந்த ரூபமானவர். அவரை ஒருமுறை தரிசித்தாலே மனப் பிணி விலகும். உடல் நலம் பெருகும். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று பாலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள் வாழ்வில் வளமும் நலமும் உண்டாகும்.
எப்படிச் செல்வது ? : சென்னையை அடுத்த பொன்னேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில், பழவேற்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது திருப்பாலைவனம். பொன்னேரியிலிருந்து பஸ் வசதி உண்டு.




















