அமெரிக்காவின் கண்ணை உறுத்தும் இந்தியா - EU ஒப்பந்தம்; ஐரோப்பிய நாடுகளைக் கடுமையா...
"Helicopter விபத்து குறித்த பயத்தில் கேட்டேன்; ஆனா பின்னாடி வேற அரசியல்" - விசிக MLA பாலாஜி பேட்டி
'லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது சட்டப்பேரவைச் சபாநாயகர் அப்பாவுவிடம் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் புகார் கொடுத்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
2023 ஆம் ஆண்டே மாவட்ட ஆட்சியரால் இந்தக் கோவளம் சுற்றுலாச் சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி 12 ஆம் தேதி அமைச்சர் தா.மோ. அன்பரசனால் துவக்கி வைக்கப்பட்டது இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இது குறித்து எஸ். எஸ். பாலாஜியிடம் பேசினோம்.

''அந்த நிறுவனம் கோவளத்தில் முதல் தடவையாக இந்தச் சுற்றுலாவைத் தொடங்கினப்ப மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவே என்னுடைய சில சந்தேகங்களை கலெக்டர் கிட்ட கேட்டேன். விமான விபத்துகள் குறித்த அச்சத்தில்தான் கேட்டேன். விமானப் போக்குவரத்து ஆணையரக அனுமதி வாங்கியதா சொல்றாங்கனு பதில் சொன்னார். பிறகு மாவட்ட நிர்வாகம்தான் சீல் வச்சது.
ஹெலிகாப்டர் இயக்க லைசென்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையரகம் கொடுத்திருக்கலாம். ஆனா ஹெலிபேடு அமைக்கறது மாதிரியான விஷயங்களில் மாநில அரசுக்குச் சில அதிகாரங்கள் இருக்கு. மாநில அரசில் ஒரு அங்கமா நான் இருக்கேன்.
அதாவது இநந்த் தொகுதியின் மக்கள் பிரதிநிதி நான். அந்த அடிப்படையில் நான் கேட்கும் சந்தேககளுக்குப் பதில் சொல்ல வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. அதுவும் நான் சம்பந்தப்பட்ட அந்தத் தனியார் நிறுவன பிரதிநிதிகள் கிட்ட நேரடியா பேசியதே இல்லை. அதிகாரிகள்கிட்டதான் கேக்குறேன்.
பைலட்டுக்கு லைசென்ஸ் இருக்கானு கேக்கறார். லைசென்ஸ் இல்லாம ஹெலிகாப்டர் இயக்குவாங்களானு ஒரு எம்.எல்.ஏ.வுக்குத் தெரியாதானு எகத்தாளமா பேசியிருக்கார் அந்தக் கம்பெனி நபர். பைக்கையோ காரையோ ஒட்டிட்டு வர்றவங்களை நிறுத்திதான் லைசென்ஸ் இருக்கா கேக்கறாங்க போக்குவரத்து காவலர்கள். லைசென்ஸ் இல்லாமலா காரை ஓட்டிட்டு வருவோம்னு அவங்ககிட்ட கேப்பிங்களா?
என் மீது புகார் தந்தவங்க பேசிய போது இன்னும் சில விஷயங்களைக் கவனிச்சேன். அதாவது எதுக்கு எம்.எல்.ஏ.வுக்குப் பதில் சொல்லணும்கிற தொனியில பேசுறாங்க. எந்த அரசின் திட்டமாக இருக்கட்டும், உள்ளூர் அளவுல மக்களின் பிரதிநிதி நான். நான் கேக்காம யார் கேப்பாங்க?

சபாநாயகர் கிட்டப் போய் புகார் தந்திருக்காங்க. நானே சட்டசபையில கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரணும்னுதான் இருந்தேன்.
முதல்வர் கவனத்துக்கும் விஷயம் போயிடுச்சு. அதனால இந்த விவகாரத்துல நல்ல தீர்வு கிடைக்கும்'' என்றவர், மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்தார்..
''இந்த விவகாரத்துல நிறைய உள் அரசியல் இருக்குமோனு சந்தேகம் எனக்கு ஆரம்பத்துல இருந்தே இருந்தது. இப்ப அது வலுவாகியிருக்கு. சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யாருங்கிறதை நீங்க இணையத்துலயே பார்க்கலாம். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் வேறோரு நிறுவனத்தில் பார்ட்னர்ஷிப்பில் இருந்திருக்கிறார் பா.ஜ.க வின் வினோஜ் செல்வம்.
திருப்போரூர் திமுக ஒன்றியச் செயலாளர் இதயவர்மனும் என் மீது புகார் தந்த செல்வக்குமாரும் நெருங்கிய கூட்டாளிகள். அடிக்கடி துபாய் போயிட்டு வர்றாங்க. இவர்களுடன் பா.ம.க-வைச் சேர்ந்த அருணும் சேர்ந்திருக்கார். இதயவர்மன் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் கூட.
எனக்கு கெட்ட பெயரை உண்டாக்கிட்டா இந்த முறை தொகுதி திரும்பவும் தன் பக்கம் வந்திடலாம்னு செய்கிறாரா தெரியல.
நான் இந்த ஐந்தாண்டுகளில் எந்தவித கெட்ட பெயரையும் வாங்காம இருக்கிறது இவங்க கண்ணை உறுத்துது. அதனால தேர்தல் நேரத்துல இப்படியொரு பிரச்னையைக் கிளப்பியிருக்காங்களோனு தோணுது'' என்கிறார்.















