விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய ...
நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" - வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்
தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்குக் கண்டனங்கள் எழுந்தன.
குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய – திராவிட யுத்தம்தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரையே 'ஒரு மண்ணு' என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக் கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரைத் 'தெலுங்கன்' என்றும் 'திருட்டு திமுக' என்றும் மிக கேவலமாக, அநாகரிகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.
அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமைதான் சீமான்.
இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் ஏற்கும்; பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவைத் தொடர்ந்து திமுக எம்.பி ஆ. ராசா, "'அரைவேக்காடு'களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் 'தேவையற்ற கைதை' கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள். இந்தத் 'தடுமாற்றம்' தன்னால் வந்ததல்ல; ’வேலை’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!" என்று வன்னியரசை விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















