"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல...
"நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பேசினார்கள்; ஆனால்.." - Fitness பயணம் குறித்து கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் அதிரடியான லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில், இயக்குநர் மிஷ்கினுடன் இவர் நடிக்கும் 'சத்யவான் சாவித்ரி' படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தன்னுடைய ஃபிட்னெஸ் பயணம் குறித்து ஒரு காணொளியைப் பதிவிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அதில் அவர், பிட்னெஸ் பயணத்தில் எதிர்கொண்ட விஷயங்கள் பற்றி, அது அவருக்கு எத்தகைய நம்பிக்கையைக் கொடுத்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "என்னுடைய பிட்னெஸ் பயணம் குறித்து நான் இதுவரை எங்கும் விரிவாகப் பேசியதே இல்லை. ஆனால், அதுதான் எனக்குப் மிகப்பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.
ஒவ்வொரு நாளும் என்னுடைய உடலைப் பற்றியும், என்னைப் பற்றியும் புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். கடந்த 2013-ம் ஆண்டு நான் ஒரு நடிகையாக அறிமுகமாகும்போது எதைப் பற்றியும் பெரிய புரிதல் இல்லாத ஒரு சாதாரணப் பெண்தான்.
பலரைப் போலவே, ஜிம்மிற்கும் நமக்கும் ஒத்துவராது என்றுதான் நானும் நினைத்தேன். என்னுடைய உடலுக்கு உண்மையாகவே என்ன தேவை என்கிற அடிப்படையான விஷயங்களை நான் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், 2018-ல் 'மகாநடி' திரைப்படத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு இடைவெளியில், 'ஏன் நாமும் முயற்சி செய்து பார்க்கக் கூடாது?' என்கிற யோசனை தோன்றியது.
உடனடியாக டயட் உணவு முறையோடு சேர்த்து, ஹெச்.ஐ.ஐ.டி (HIIT) மற்றும் கார்டியோ (Cardio) பயிற்சிகளில் இறங்கினேன். அடுத்த 9 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்தேன். அதை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்ட நேரத்தில்தான், மக்கள் என்னை 'பலவீனமாக' இருக்கிறேன் எனவும் நான் 'அறுவை சிகிச்சை' செய்துகொண்டேன் என்றும் பேசினர்.
ஆனால், என்னுடைய முகம் உட்பட அனைத்தையுமே நான் எப்போதுமே இயற்கையான முறையில்தான் பராமரித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது, என்னுடைய இத்தனை உழைப்பைப் பற்றியும் இப்படி சுலபமாகப் பேசியதைக் கேட்டபோது கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
அதன்பிறகு, 2020-ல் நான் யோகா செய்யத் தொடங்கினேன். அது என்னுடைய வாழ்க்கையையே மாற்றியது. எனக்குள் ஒரு நல்ல சமநிலையைத் தன்னம்பிக்கையை மற்றும் என்னை நானே சரியான முறையில் கவனித்துக்கொள்ள தேவையான வழியையும் அது எனக்குக் கொடுத்தது.
இப்போது என்னுடைய தினசரி உடற்பயிற்சியில் ஸ்ட்ரென்த் டிரைனிங் மிகவும் முக்கியமான பங்காக இருக்கிறது. அதோடு யோகா, அனிமல் ஃப்ளோ (Animal flow), கார்டியோ மற்றும் கேலிஸ்தெனிக்ஸ் (Calisthenics) பயிற்சிகளையும் சேர்த்துச் சமமாகச் செய்து வருகிறேன்.
நிஜமாகவே இப்போதுதான் நான் மிகவும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்போது என்னுடைய உடலுக்கு நான் கொடுக்கும் அன்பும், கவனிப்பும் என்னை இன்னும் சிறப்பாகத்தான் மாறும் என்று எனக்குத் தெரியும்.

ஒரு காலத்தில் 'நமக்கு இதெல்லாம் செட் ஆகாது' என்று நினைத்த விஷயம், இப்போது என்னுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இன்று என்னை இந்த இடத்தில் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஆனாலும், சிலர் என்னிடம் வந்து, 'நீ குண்டாக இருந்தபோதுதான் நன்றாக இருந்தாய்' என்று தங்களது கருத்துகளைச் சொல்லிட்டுப் போகிறார்கள். சமீபகாலமாக எனக்குச் சில உடல்நல மற்றும் மனரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டது உண்மைதான்.
இந்த ஃபிட்னெஸ் பயணம் எனக்கு ஒன்றை மட்டும் தெளிவாக நினைவூட்டுகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு சூழலில் நான் உடையவோ, சில காலம் ஓய்வெடுக்கவோ வேண்டியிருந்தால் கண்டிப்பாக அதைச் செய்வேன். ஆனால், எப்போதுமே நான் என் முயற்சியைக் கைவிட மாட்டேன் என்பதை இந்தப் ஃபிட்னெஸ் பயணம் கற்றுத் தந்திருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.














