செய்திகள் :

நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்!

post image

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!

முதல் அத்தியாயம் : நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! 

தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதள வீடியோக்கள், வைரலாகும் பிரசார காணொலிகள் எல்லாம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டுத் தேர்தல் தொடர்பான செய்திகளும், தலைவர்களின் பிரசார செய்திகளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகத்தின் வழியாக மக்களைச் சென்றடைந்தன. அதுதான் வானொலி. 

இந்தியா சுதந்திரம் அடையும் காலத்திற்கும் முன்பே, வானொலி மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறியிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வானொலி ஒளிபரப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், முக்கிய செய்திகளை அறிய மக்கள் வானொலியை கவனமாகக் கேட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போர் செய்திகள், அரசியல் அறிவிப்புகள் போன்றவை வானொலியிலேயே முதலில் கேட்டன.

1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியாவின் சுதந்திர அறிவிப்பும், ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையும் வானொலியின் மூலமே கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தது. சுதந்திரத்திற்குப் பின், அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புச் சேவை, தமிழ் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மொழிகளில் விரிவடைந்தது. இதனால், வானொலியை நம்பி செய்திகள் கேட்கும் பழக்கம் வலுப்பெற்றது. அதுவே, பின்னாளில் தமிழகத் தேர்தல்களில் அரசியல் குரல்கள் வானொலியின் வழியே மக்களிடம் எளிதாகச் சென்றடைய காரணமாக அமைந்தது.

வானொலி

தேநீர்க் கடையில், கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தில், நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த வானொலிப் பெட்டியிலிருந்து வரும் கரகரப்பான குரல்தான், தலைவர்களின் உரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. பல ஆண்டுகளாக வானொலிதான் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்தது. தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் மக்கள் ஒன்றாக உட்கார்ந்து ரேடியோ கேட்டு, அரசியலை அறிந்துகொண்ட காலம் அது. பார்த்ததைவிட கேட்டதன் மூலமாகவே அரசியலை அறிந்துகொண்ட காலம் அது. 

சுதந்திரத்துக்குப் பிறகான ஆரம்ப ஆண்டுகளில், அதாவது 1950-கள் தொடங்கி,  ஆல் இந்தியா ரேடியோதான் — மக்களிடையே அதிக நம்பகத்துக்குரிய, பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஊடகமாக இருந்தது. செய்தித்தாள்கள் அடுத்த நாள் காலையில்தான் வந்து சேரும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு நேரில் சென்றவர்கள்தான் தலைவர்களின் உரையைக் கேட்க முடியும். ஆனால் வானொலி, தூரங்களைக் கடந்து மக்களிடம் தேர்தல் செய்திகளைக் கொண்டு சேர்த்தது. 

தேர்தல் தொடர்பான சிறப்புச் செய்தி ஒலிபரப்புகள் அனைவரது கவனத்தையும் ஒரே நேரத்தில் ஈர்த்தன. செய்தி ஒலிபரப்புக்கு சில நிமிடங்கள் முன்னரே தெருக்கள் அமைதியாகிவிடும். வீடுகளில் கூச்சலிடும் சிறுவர்களை அதட்டல் போட்டு அமைதியாக்குவார்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்கள்.

இளைஞர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், தங்களது அன்றாட வேலைகளை, தேர்தல் செய்திகளைக் கேட்பதற்கு ஏற்ப, தங்களது வேலைகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் அமைத்துக்கொண்டனர். மீறி ஏதேனும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும், செய்தி ஒலிபரப்பாகும் நேரத்தில் அதனைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு கேட்டனர். 

வானொலி
வானொலி

தேநீர்க் கடைகளில் ரேடியோவின் ஒலி உரத்து ஒலிக்கும். அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து கொண்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி செய்திகளையும்கூட கவனமாகக் கேட்டனர். ஏனெனில், வானொலி செய்தி அதிகாரப்பூர்வமானது மட்டுமல்ல நம்பகமானதும் தவிர்க்க முடியாததும்கூட. தேர்தல் காலங்களில் ரேடியோவில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிக முக்கியமானதாக உணரப்பட்டது.

1962 பொதுத் தேர்தலிலிருந்து, அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகப் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு சில தினங்கள் முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு , ஒவ்வொரு நாளும் 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் என்ற நேரக்கட்டுப்பாட்டுடன் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த உரைகள், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒலிபரப்பப்பட்டன. கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை வானொலியின் மூலம் மக்களிடம் விளக்க முடிந்தது. கடும் விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தக் கட்டுப்பாடுகள், தலைவர்களை தெளிவாகவும் நேர்மையாகவும் பேச வலியுறுத்தின. இதன் மூலம், வானொலி தமிழக தேர்தல்களில் ஒரு அதிகாரப்பூர்வமான பிரச்சார மேடையாக உருவெடுத்தது. வானொலியில் நன்றாக அமைந்த ஒரு உரை, மக்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பொதுக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், வீடுகள், சமையலறைகள், அலுவலகங்கள் போன்ற தனிப்பட்ட இடங்களுக்குள் நேரடியாக நுழைந்ததாலே அந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் மக்கள் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகவுமே அரசியல் பேச்சுகள் மாறின.

வானொலி
வானொலி

வானொலி வழியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், மக்களுடனான அதன் நெருக்கமான தன்மைதான். ஸ்டுடியோக்களில் மைக்கின் முன் நின்று பேசிய தலைவர்களுக்கு முன் ஆரவாரமான கூட்டங்கள் இல்லை. கைத்தட்டல்கள் இல்லை. முகபாவனைகள், காட்சியமைப்புகள், நாடகத்தன்மை போன்ற எதுவும் இல்லை. அங்கு முக்கியமானது குரல் மட்டுமே — அதில் இருக்கும் தெளிவு, மொழி, கருத்தின் நேர்மையின் அடிப்படைகளிலேயே வாக்காளர்கள் தலைவர்களையும், அவர்கள் சார்ந்த கட்சிகளையும்  மக்கள் மதிப்பிட்டனர்.

கட்சிகளின் நிலைப்பாடுகள், அரசியல் கொள்கை வேறுபாடுகள், வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகளுக்கான பதிலடிகள் போன்றவற்றை தலைவர்களின் வானொலி உரை மூலம் மக்கள் புரிந்துகொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக கிராமப்புற மக்களுக்கு, இந்த வானொலி ஒலிபரப்புகளே மூத்த அரசியல் தலைவர்களின் குரலை நேரடியாகக் கேட்கக் கிடைத்த ஒரே வாய்ப்பாக அமைந்தன. 

தேர்தல் காலங்களில் அரசியல் செய்திகளையும் தலைவர்களின் உரைகளையும் வானொலியில் கேட்பது என்பது தனிப்பட்ட செயலாக இல்லை. அது ஒரு கூட்டு அனுபவமாக இருந்தது. கிராமங்களில், ஒரு வானொலிப் பெட்டியைச் சுற்றி பலர் கூடி அமர்ந்து உரைகளையும் செய்திகளையும் கவனமாகக் கேட்டனர்.

ஒலிபரப்பு முடிவடைந்ததும் உடனடியாக அது குறித்த எதிர்வினைகள், கருத்துகள் எழுப்பப்பட்டு விவாதிக்கப்படும். நகர்ப்புற வீடுகளில், முக்கிய உரைகள் ஒலிபரப்பாகும் போது அமைதி காக்கப்பட்டது. குழந்தைகள் இடையூறு செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர் அல்லது அறிவுறுத்தப்பட்டனர். அந்த அளவுக்கு அந்த நேரத்தில், வானொலி ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது.

வானொலி
வானொலி

தமிழக அரசியல் கலாச்சாரத்தில் மொழிக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அந்த மரபை வானொலி மேலும் வலுப்படுத்தியது. நல்ல பேச்சாற்றல் கொண்ட தலைவர்கள்,வானொலியில் தனிப்பட்ட வகையில் முன்னிலை பெற்றனர். தமிழ்மொழி மீது அவர்களுக்கு இருந்த புலமை, இலக்கியக் குறிப்புகள், எதுகை மோனை வடிவிலான பேச்சு, வாக்கியங்களின் ஓட்டம் போன்ற அனைத்தும், தலைவர்களின் உரைகளை மக்கள் மனதில் நிற்கச் செய்தன.

காட்சிகள் இல்லாத நிலையில், அவர்கள் சொல்லும் உவமைகள் மற்றும் சொற்கள் கேட்பவர்களின் மனதில் காட்சிகளாக உருவானது. வானொலியில் கேட்ட ஒரு வலிமையான வாக்கியம், பல நாட்கள் அது குறித்து மக்களிடையே பேசுபொருளானது. பேருந்துகள், பள்ளிகள், சந்தைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அது குறித்து மீண்டும் மீணடும் சிலாகித்துப் பேசப்பட்டது.  

தலைவர்களின் உரைகள் மட்டுமல்ல, தேர்தல் காலங்களில் வானொலி பல முக்கியத் தகவல்களுக்கும் முதன்மை ஊடகமாக இருந்தது. தேர்தல் அறிவிப்புகள், பிரச்சார அட்டவணைகள், வாக்குப்பதிவு நாளுக்கான வழிமுறைகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் ஆகியவை வானொலியின் வழியே மக்களிடம் சென்றடைந்தன.

நேரலை தொலைக்காட்சி இல்லாத காலத்தில், நிகழ்நேர தகவல்களை மக்களுக்குக் கொண்டு சென்றது வானொலியே. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் வானொலி ஒலிபரப்புகள் அதிக பதற்றத்துடன் கேட்கப்பட்டன. ஒவ்வொரு இடைவெளியும், அறிவிப்பாளரின் குரலில் வெளிப்படும் மாற்றமும் கூட, மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.மக்களுக்கு, அவர்களது மனம் கவர்ந்த கட்சி அல்லது தலைவர் அல்லது வேட்பாளரின் வெற்றி தோல்வி குறித்த முதல் தகவலைச் சொன்னது வானொலிதான்.

ரேடியோ

வானொலி இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று — அதன் மீது இருந்த நம்பிக்கையும் நம்பகத்தன்மையும்தான். அகில இந்திய வானொலி, கட்டுப்பாடு கொண்ட, பொறுப்பான, அதிகாரப்பூர்வமான ஊடகமாக மக்கள் பார்வையில் இருந்தது. கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் குறித்து பத்திரிகைகள் வெவ்வேறு கருத்துகள், விமர்சனங்களை வெளியிட்டபோதும், வானொலிச் செய்திகள் நடுநிலையுடன் வழங்கப்படுவதாக நம்பப்பட்டது. அரசியல் வேறுபாடுகள் தீவிரமாக இருந்த காலங்களிலும், வானொலியில் ஒலித்த உரைகளை, தலைவர்களின் உண்மை கருத்தாகவே மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். அந்த நம்பகத்தன்மையே, கட்சிகள் அல்லது தலைவர்கள் மீதான பொதுமக்களின் கருத்துருவாக்கத்தில் வானொலிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது. 

இத்தகைய சூழ்நிலையில்தான் 1980களின் இறுதி மற்றும் 1990களில், தொலைக்காட்சி தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மை ஊடகமாக மாறத் தொடங்கியது. காட்சிகள், பேரணிகள், சுருக்கமான காட்சி ஒளிப்பதிவுகள் ஆகியவை முன்னிலை பெற்றன. பின்னர், டிஜிட்டல் தளங்கள் கவனத்தை இன்னும் சிதறடித்தன.

இன்றும்  வானொலி மறைந்துவிடவில்லை. ஆனால், அதற்கான முக்கியத்துவம் கணிசமாக குறைந்துபோனது. அந்தக் காலத்தில் அமைதியாக கவனத்துடன் கேட்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக இருந்தது. அந்தக் குரல்கள் அனுமதி இல்லாமலே வீடுகளுக்குள் நுழைந்தன. கேள்விகளை எழுப்பின. வாக்குறுதிகளை அளித்தன. மக்களின் கருத்துகளை வடிவமைத்தன. கேட்பதையே ஒரு குடிமகனின் கடமையாக மாற்றின. ஆனால், அந்தப் பொறுமையும் அமைதியும் இன்றைய ஜென் Z தலைமுறையினரிடத்தில் காணாமல் போய்விட்டது.

வானொலி பிரசாரம்
வானொலி பிரசாரம்

இன்று கைப்பேசிகளும் திரைகளும் பிரசாரங்களால் நிரம்பியுள்ள சூழலில், வானொலிக் கால தேர்தல்கள் ஒரு மெல்லிய, சிந்தனைமிக்க அரசியல் பண்பாட்டை நினைவூட்டுகின்றன. மூத்த தலைமுறையினருக்கு, தேர்தல் காலங்களில் வானொலியைச் சுற்றி அமர்ந்து கேட்ட நினைவுகள் இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளாகவே உள்ளன. அதுவெறும்  பசுமையான நினைவுகள் மட்டுமல்ல — பொறுமையுடன், ஒலியின் வழியே, ஜனநாயகத்தை அனுபவித்த ஒரு காலத்தின் சாட்சி!

(தொடரும்)

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்.தந்தை - மகன் மோதலால் பா... மேலும் பார்க்க

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடுNDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர்.ஆளுநரின் அராஜகம் எப்ப... மேலும் பார்க்க

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணை... மேலும் பார்க்க

`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரு... மேலும் பார்க்க

"ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப்... மேலும் பார்க்க