புதுச்சேரி: `அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சம்பளம் கிடைக்குமா?'- `பட்ஜெட்’ பொத...
'நிறைய பேருக்கு நீரிழிவு நோய்; எனவே சர்க்கரை விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது' - பீகார் அமைச்சர்
நாட்டில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை விலை 65 ரூபாயை தாண்டிவிட்டது. இதனால் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து வரி இல்லாமல் சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. நாட்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சர்க்கரை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்க்கரை விலை உயர்வு குறித்து பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்ராவன் குமார் தெரிவித்து இருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சர்க்கரை விலை உயர்வு குறித்து அவர் அளித்த பேட்டியில்,''நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சர்க்கரை எடுத்துக்கொள்வது குறைவாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சர்க்கரை விலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எனவே சர்க்கரை விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை''என்றார்.

அமைச்சரின் இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் கருத்து வைரலாகி இருக்கிறது. அமைச்சரின் கருத்து குறித்து பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் கூறுகையில், ``சர்க்கரை விலை உயர்வு குறித்த அமைச்சரின் வினோதமான விளக்கம் கண்டிக்கத்தக்கது.
எவ்வளவு நெய் ஊற்றினாலும் மாட்டுச் சாணமே ருசியாக இருக்கும். இப்படிப்பட்ட அமைச்சரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? காஸ், தக்காளி விலை ஏறியபோது ஸ்மிருதி இரானி உட்பட பல முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று சர்க்கரை விலை உயரும்போது சர்க்கரை நோய் என்று பேசுகிறார்கள். மிகப்பெரிய சர்க்கரை நோய் அரசுதான்" என்று தெரிவித்தார்.
விலை உயர்வு மகிழ்ச்சியளிக்கிறது
பீகார் அமைச்சர் விஜய் குமார் சின்ஹாவும் விலை உயர்வை ஆதரித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``விவசாயிகளின் உற்பத்தி விலை உயரும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். சர்க்கரை விலையில் கணிசமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, இதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும். சர்க்கரை உற்பத்திக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இது குறித்து அவரிடம் தகவல் கேட்போம். விவசாயிகளின் விளைபொருட்களின் விலை உயரும்போது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.



















