Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு...
நீதிபதிகள் நியமனம்: `5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஒரு சமூகம்.!' - முன்னாள் CJI பி.ஆர்.கவாய் கடிதம்
நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் பன்முகத்தன்மை தகுதி ஆகியவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,
``அண்மைய கொலீஜியம் பரிந்துரைகள் விளிம்புநிலை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்துத் தரப்பினரும் இணைந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட வேண்டும்.
நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஒரு சமூகம், அண்மைக் காலங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது. கொலீஜியம் அமைப்பில் நான் அங்கம் வகித்த காலத்தில், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கும்போது பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர் என அனைத்துத் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்தேன்.
ஆனால், அண்மைக்கால நிகழ்வுகள் தகுதி மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகிய கோட்பாடுகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது வருத்தமளிக்கிறது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைத் திருப்திப்படுத்தவும், அவர்களுக்குச் சலுகை வழங்கவும் மட்டுமே பரிந்துரைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தோன்றுகிறது.
இதனால் விளிம்புநிலை சமூகங்கள், பெண்கள் மற்றும் அந்தக் குறிப்பிட்ட சமூகத்தைச் சாராத முன்னேறிய வகுப்பினரும்கூடப் புறக்கணிக்கப்படுகின்றனர். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் நான் எதிரானவன் அல்ல. அனைத்துத் தரப்பினருக்கும் இடையே சமநிலையைப் பேணுவதே எமது நோக்கமாக இருந்துள்ளது.

கடந்த 2025 மார்ச் மாதம் மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த புள்ளிவிவரங்களில், 2018-ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 715 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 22 பேர் பட்டியலினத்தவர், 16 பேர் பழங்குடியினர், 89 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 37 பேர் சிறுபான்மையினர் எனத் தெரிவித்துள்ளார். அதாவது, நியமிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கினர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனவரி 2021 முதல் ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் தொகையில் 40 முதல் 50 சதவீதம் வரை உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14 சதவீதத்திற்கும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முதல் நாற்பது ஆண்டுகால செயல்பாடுகள் குறித்துப் பேராசிரியர் ஜார்ஜ் காட்பாய்ஸ் மேற்கொண்ட ஆய்வையும் இங்கு நினைவுகூறவேண்டும்.
1950 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில், மக்கள் தொகையில் பத்தொன்பதில் ஒரு பங்காக இருந்த ஒரு சமூகம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக வகித்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருப்பவர்களின் நட்பு வட்டம், உறவினர்கள் மற்றும் அவர்களுக்குத் தெரிந்த பின்னணியிலிருந்து வருபவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது, 'ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி என்றால் இப்படித்தான் இருப்பார், இந்தப் பின்னணியிலிருந்துதான் வருவார்' என்று காலங்காலமாக மனதில் பதிந்துபோன பழமையான எண்ணம் போன்றவைகளால், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை சமூகங்களிலிருந்து வருபவர்களைத் தகுதியானவர்களாகப் பார்க்கத் தவறுவது போன்றவை இன்றளவும் பெரிய அளவில் மாறவில்லை
அண்மைய நீதிபதிகள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பரிந்துரைகளிலும் தகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இரண்டு குறிப்பிட்ட நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் கொலீஜியத்தில் இருந்தபோதும், பின்னர் தலைமை தாங்கியபோதும் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது, ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தலைமை நீதிபதி ஒருவர், பின்னர் ஒரு முக்கிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார். இதற்காகத் திறமையான மற்றும் கடின உழைப்பாளியான மற்றொரு தலைமை நீதிபதி சிறிய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். நீதித்துறை மாண்பு மற்றும் கட்டுப்பாடு கருதி அதன் பின்னணிக் காரணங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.

மற்றொரு நிகழ்வில், ஒரு வழக்கறிஞர் எந்த மாநில உயர் நீதிமன்றத்தில் முதன்முதலில் நீதிபதியாக நியமிக்கப்படுகிறாரோ, அதுவே அவருடைய 'பெற்றோர் உயர் நீதிமன்றம்' எனப்படும். பொதுவாக, நீதிபதிகள் நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், ஒரு நீதிபதியின் செயல்பாடுகளில் ஏதேனும் புகார், ஒழுங்கீனம் அல்லது சர்ச்சை எழுந்தால், அவரை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுவார்கள். இது வெளிப்படையாகத் தண்டனை என்று சொல்லப்படாவிட்டாலும், நடைமுறையில் ஒரு 'தண்டனை நடவடிக்கையாகவே' பார்க்கப்படும்.
இப்படி தண்டனை அடிப்படையில் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட ஒரு நீதிபதிக்கு, வழக்கமாகப் பெரிய பதவிகள் வழங்கப்படாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு நீதிபதியை, நாட்டின் மிக முக்கியமான மற்றும் பெரிய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்திப் பதவி வழங்கியுள்ளார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2)-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது.

கொலீஜியம் அமைப்பின் பரிந்துரைகள் தீர்க்கமானவையாக இருந்தாலும், அந்த அமைப்பு பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் கடமை குடியரசுத் தலைவருக்கு உள்ளது. நீதித்துறையில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கடிதத்தின் நகல்களை முன்னாள் தலைமை நீதிபதி கவாய் பிரதமர் மோடி மற்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

















