செய்திகள் :

“நூற்கலை முதல் சுவரோவியம் வரை... கைகளே என் மூலதனம்” – சட்டக் கல்லூரி மாணவர் கேசவனின் கலைப் பயணம்!

post image

ஆர்வம், கற்பனை, தொடர் பயிற்சி... இவற்றைத் தனது கைகளோடு இணைத்து ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார் கேசவன்.

சட்டப் படிப்புக்கு மத்தியில் கலைப் பயணத்தையும் தொடர்ந்து வரும் இவரது படைப்புகள், தனிப்பட்ட ஆர்டர்களைக் கடந்து மலேசியா வரை பயணித்திருக்கின்றன.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவைச் சேர்ந்த 23 வயதான கேசவன், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி. படித்து வருகிறார். ஒருபக்கம் சட்டப்படிப்பு, இன்னொருபக்கம் ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார். எந்தவிதமான ஓவியப் பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், ஆர்வம், கற்பனை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தனது திறனை வளர்த்துக்கொண்டுள்ளார்.

கற்பனையில் தொடங்கி... பயிற்சியில் வளர்ந்த திறன்!

சிறுவயதிலேயே வண்ணங்கள் மற்றும் புதிய படைப்புகளை உருவாக்குவதில் கேசவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பப் பள்ளிக் காலங்களிலேயே பள்ளிக் கண்காட்சிகள், போட்டிகள் உள்ளிட்டவற்றில் தனது படைப்புகளை உருவாக்கி பங்கேற்றுள்ளார். ஆனால், ஊரடங்கு காலத்தில்தான் தனது படைப்புத் திறனை முறையாக வளர்த்துக்கொள்ளும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது மனித முகங்களை வரையத் தொடங்கி, பென்சில் மற்றும் பேனாவில் தொடர்ந்து பயிற்சி செய்து தனது திறனை மெருகேற்றியுள்ளார்.

``இதுவரை எவ்வித ஓவிய, நூற்கலைப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. என்னுடைய கற்பனை, ஆர்வம், தொடர்ந்து செய்த பயிற்சி ஆகியவற்றால்தான் என்னை நானே வளர்த்துக்கொண்டேன்.

12-ம் வகுப்பில் எனக்குப் பிடித்த ஆசிரியர் திருநாவுக்கரசு சாருடைய உருவப்படத்தை அவருடைய பிறந்தநாளுக்காக வரைந்து பரிசாகக் கொடுத்தேன். என்னுடைய திறமையைப் பார்த்து அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார். அவரிடம் இருந்து ஆசீர்வாதமும் பெற்றேன். அந்த நாள் என்னுடைய பயணத்தில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது” என்கிறார்.

ஒரு படைப்புக்குப் பின்னால்... பல நாள் உழைப்பு!

ஒரு முகத்தைப் பென்சிலில் வரைய 7 முதல் 8 மணி நேரமும், இரண்டு முகங்கள் என்றால் சுமார் இரண்டு நாள்களும் ஆகும். நூற்கலைக்கு 10 முதல் 15 நாள்களும், சுவரோவியத்துக்கு 3 முதல் 7 நாள்களும் தேவைப்படும். நூற்கலைக்கான பொருள்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையும், சுவரோவியத்துக்கு சுமார் ரூ.4,000 வரையும் செலவாகிறதாம்.

“பொருள் செலவு, நேரம், உழைப்பு ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் விலையை நிர்ணயிப்பேன். பொதுவாக என்னுடைய படைப்புகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை விலை இருக்கும். என்னுடைய படைப்புகளைப் பார்த்துப் பிடித்தவர்கள் தனிப்பட்ட முறையில் ஆர்டர் கொடுப்பார்கள்.

இப்போதைக்கு இதை பெரிய அளவில் தொழிலாகவோ வணிகமாகவோ நடத்தவில்லை. எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தால், இதை ஒரு தொழிலாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்கிறார்.

“முதல் நூற்கலை ஆர்டர்... மலேசியா வரை!”

கேசவனுக்குக் கிடைத்த முதல் நூற்கலை ஆர்டர், ஒரு படைப்பை மலேசியா வரை கொண்டு சென்றிருக்கிறது. சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கு நீதிமன்ற விவாதப் போட்டியின் நடுவராக வந்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் விஜயலட்சுமி, இவருடைய படைப்புகளைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். பின்னர், மலேசியாவில் பணியாற்றும் சட்டப் பேராசிரியருக்குப் பரிசாக வழங்க மனித உருவப்படத்தை நூற்கலையில் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

“அது எனக்குக் கிடைத்த முதல் நூற்கலை ஆர்டர். சுமார் 10 நாள்கள் உழைத்து அந்தப் படைப்பை முடித்தேன். நான் உருவாக்கிய படைப்பு மலேசியா வரை சென்றது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்” என்கிறார்.

சுவரோவியத்தில் சொல்லப்பட்ட சமூகச் செய்தி!

கல்லூரியின் நுழைவுப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக சுவரோவியமும் வரைந்துள்ளார். போதைப்பொருள் ஒருவரை மட்டுமல்லாமல் குடும்பத்தையும் சமூகத்தையும் பாதிக்கும் என்பதை எடுத்துக்காட்டியதுடன், அதில் சட்டக் கருத்துகளையும் திருக்குறளையும் இணைத்துள்ளார்.

படைப்பாற்றல் கற்றுக்கொடுத்த கூர்ந்த கவனம்!

“ஒரு படைப்பில் இருக்கும் சிறிய விஷயங்களைக்கூட கவனிக்க வேண்டும். அதேபோல சட்டத்திலும் ஒரு வழக்கின் சிறிய தகவல்கள், உண்மைகள், முரண்பாடுகள் முக்கியமானவை. குறிப்பாக குற்றவியல் வழக்குகள் மற்றும் எதிர்தரப்பு விசாரணையில் ஒவ்வொரு தகவலையும் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

படைப்புப் பயணம் எனக்குப் பொறுமை, கவனம், கூர்ந்து கவனிக்கும் திறன், தனியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது” என்கிறார்.

கைகளால் உருவாகும் அன்பின் நினைவுகள்!

நெருக்கமான நண்பர்களின் பிறந்தநாள் போன்ற தருணங்களில், அவர்களுக்காகத் தன் கைகளால் உருவாக்கிக் கொடுக்கும் படைப்புகளை கேசவன் மிகவும் சிறப்பானதாகக் கருதுகிறார்.

“அதில் அவர்கள்மீதான என்னுடைய அன்பையும் சேர்த்துக் கொடுக்கிறேன். அது வெறும் பரிசாக இல்லாமல், எங்களுடைய உறவின் நினைவாக மாறுகிறது. ‘என் படைப்பு உங்களிடம் இருந்தால், என் இதயமும் உங்களிடம்!’ என்பதுதான் நான் சொல்லும் வரி” என்கிறார்.

குடும்பம் கொடுத்த உறுதியான பக்கபலம்!

கேசவனின் பயணத்தில் குடும்பத்தின் ஆதரவும் முக்கியப் பங்கு வகித்துள்ளது. “என்னுடைய அம்மா, அண்ணன், அக்காதான் நான் படைப்புகளில் ஆர்வமாக இருப்பதை முதலில் கவனித்தவர்கள். அண்ணன் தேவையான பொருள்களை வாங்குவதில் உதவுவார். நான் நீண்ட நேரம் பயிற்சி செய்தால், ‘முதலில் சாப்பிடு... ஓய்வு எடு’ என்று அம்மா சொல்வார்.

நான் எந்தப் பாதையைத் தேர்வு செய்தாலும் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது” என்கிறார்.

சட்டம் பாதை... படைப்பாற்றல் பயணம்!

கல்லூரியில் தேர்வு மற்றும் அசைன்மென்ட் காலங்களில் சட்டப்படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேசவன், வார இறுதி நாள்கள் மற்றும் செமஸ்டர் விடுமுறைகளில் படைப்புப் பணிகளில் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு படிப்பையும் தனது படைப்பாற்றலையும் சமநிலைப்படுத்தி வருகிறார்.

“சட்டத் துறையை என்னுடைய எதிர்காலப் பாதையாகப் பார்க்கிறேன். அதே நேரத்தில், படைப்பாற்றல் என்னுடைய வாழ்க்கையில் எப்போதும் இருக்கும். எதிர்காலத்தில் மாணவர்களுக்குக் கலை கற்றுக்கொடுக்கவும், ஒரு கட்டத்தில் இதைத் தொழிலாக வளர்த்துக்கொள்ளவும் ஆசை இருக்கிறது.

கேசவன்

உங்களிடம் இருக்கும் எந்தத் திறமையையும் அலட்சியப்படுத்தாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் தரமான பயிற்சியைக் கொடுங்கள். படைப்பாற்றல் பொறுமை, ஒழுக்கம், கவனம், கூர்ந்து கவனிக்கும் திறன் ஆகியவற்றை வளர்க்கும். ‘கலை உருவாக்குவது ஒரு வகையான தியானம்.’

இப்போதைக்கு சட்டம் என் பாதை... ஆனால், என்னுடைய படைப்பாற்றல் பயணம் என்னைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்கிறார் கேசவன்.

தோல் இசைக்கருவிகள்: மதுரையின் நூற்றாண்டு பாரம்பரியத்தை சுமக்கும் ராகுல் இசைக்கருவியகம்!

மதுரை சிம்மக்கல் பகுதியில் இயங்கி வரும் ராகுல் இசைக்கருவியகம், நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியத்துடன் தோல் இசைக்கருவிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தற்போது மூன்று த... மேலும் பார்க்க

வணக்கம் சென்னை கண்காட்சி: பழைய மெட்ராஸின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிய அரிய கண்காட்சி!

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற ‘மெட்ராஸ் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களின் RMRL கண்காட்சி’ நிறைவு பெற்றது.மெட்ராஸ் வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தைய... மேலும் பார்க்க

Velpari Drama: '40 பெண் கலைஞர்கள், ஒரு மாத பயிற்சி, 3 மணிநேர நீளம்'- நாடகவடிவில் மேடை ஏறிய வேள்பாரி!

இது வரையில் எழுத்து வடிவத்தில் புத்தகங்களின் மூலம் வாசிப்பவர்களுக்கு விருந்தளித்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் கலை வடிவில் நாடகமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரங்கேறியது. வீனிக்ஸ் கலைக்குழு மற... மேலும் பார்க்க

VIT: "படைப்பாளியைப் பார்க்காமல் படைப்புகளைப் பாருங்கள்"- ஞானபீடம் வைரமுத்துவுக்கு `ஞானம்பாடி' விருது

ஞானபீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும். இந்த விருதினை கடந்த ஜூலை 13 ஆம் தேதி வைரமுத்து பெற்றிருந்தார். அதற்காக இன்று வேலூர் வி.ஐ.டி தமிழியக்கம் சார்பில் ... மேலும் பார்க்க

தாளத்தில் தடம் பதிக்கும் ஜமாப் இசைக் குழு; கவனம் ஈர்க்கும் மருதமலை இளைஞர்கள்!

மருதமலைக்கு மேலே வசிக்கும் பழங்குடியின இளைஞர்கள் சுமார் 20 பேர் இணைந்து 2013-ஆம் ஆண்டு ஜமாப் இசைக் குழுவைத் தொடங்கினர். தங்களுக்குப் பிடித்த இந்த இசையில் திறமை இருப்பதை உணர்ந்த இளைஞர்கள், தனித்தனியாக ... மேலும் பார்க்க