கும்பகோணம்: `மக்கள் புறக்கணித்ததால் இனி அங்கு அமரப் போவதில்லை' - திமுக துணை மேயர...
பசிபிக்கில் தொடங்கிய பேராபத்து; ஒருபுறம் வறட்சி மறுபுறம் கனமழை.. உலகை அச்சுறுத்தும் சூப்பர் எல் நினோ
பசிபிக் பெருங்கடலின் ஆழத்திலிருந்து பூமிக்கு ஒரு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து நாசாவின் செயற்கைக்கோள் அனுப்பியுள்ள ஒரு புகைப்படம், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'சூப்பர் எல் நினோ'வின் கோர முகத்தை உறுதி செய்துள்ளது. ஒருபுறம் வரலாறு காணாத வறட்சியையும், மறுபுறம் கட்டுக்கடங்காத கனமழையையும் கொண்டுவரவிருக்கும் இந்த காலநிலை நிகழ்வு, அடுத்த சில மாதங்களுக்கு மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல்-6 மைக்கேல் ஃப்ரீலிச் செயற்கைக்கோள் அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்த நாசா, பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் மட்டம் கணிசமாக உயர்ந்திருப்பதை உறுதி செய்துள்ளது. இது சாதாரண நிகழ்வல்ல. கடல் நீர் அதீதமாக வெப்பமடையும்போது, அது விரிவடைந்து கடல் மட்டத்தை உயர்த்துகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ஒரு சக்திவாய்ந்த 'சூப்பர் எல் நினோ' உருவாகிவிட்டதற்கான மறுக்க முடியாத சான்றாகும். ஜூன் 8 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், சராசரியை விட அதிக கடல் மட்டம் உள்ள பகுதிகள் சிவப்பு நிறத்திலும், இயல்பான பகுதிகள் வெள்ளை நிறத்திலும், குறைந்த மட்டம் உள்ள பகுதிகள் நீல நிறத்திலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னோட்டமாக, 'கெல்வின் அலைகள்' எனப்படும் ராட்சத வெப்ப நீரோட்டங்கள் பசிபிக்கின் மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நகர்ந்ததையும் இதே செயற்கைக்கோள் பதிவு செய்திருந்தது.
இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் துணை விஞ்ஞானியான டாக்டர் செவெரின் ஃபோர்னியர், இது குறித்து ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். "ஜூன் 8 அன்று பசிபிக்கில் காணப்பட்ட சூழல்கள், 1997-ல் ஏற்பட்ட மிகக் கடுமையான எல் நினோவின்போது காணப்பட்டதை ஒத்திருக்கின்றன," என்று அவர் கூறியுள்ளார். 1997-ல் ஏற்பட்ட எல் நினோ உலகெங்கிலும் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) ஜூன் 11 அன்று எல் நினோ தொடங்கிவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், நாசாவின் இந்த செயற்கைக்கோள் தரவுகள் அந்த அறிவிப்புக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
இந்த பேராபத்தால் இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்?
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மிக மோசமான எல் நினோவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டி வாட்டி வதைக்கிறது. சுமார் இரண்டு வாரங்களாக முடங்கியிருந்த தென்மேற்குப் பருவமழை, தற்போதுதான் மெல்ல புத்துயிர் பெற்றுள்ளது. இந்தியாவின் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், இந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையையே பெரிதும் நம்பியுள்ளது. பருவமழை பொய்த்தால், அது விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

ஹீட் டோம்
இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையுமே இந்த சூப்பர் எல் நினோ குறிவைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் என்றும், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஐரோப்பாவை 'ஹீட் டோம்' எனப்படும் வெப்பக் குவிப்பு தாக்கி வருகிறது. இதன் காரணமாக, இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வெறும் வானிலை மாற்றம் அல்ல; மாறாக, பூமி எதிர்கொள்ளும் ஒரு பெரும் காலநிலை பேரிடரின் தொடக்கம் என்பதே விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது.
















