பட்டுக்கோட்டை: ``மன்னர் பெயரில் மிரட்டுவதை ஏற்க முடியாது'' - உண்ணாவிரத போராட்டம் நடத்திய மக்கள்!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் பகுதியில், சுமார் 12,000 வீடுகள் உள்ளன. 30,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் விளை நிலங்களும் உள்ளது. இந்த நிலையில் மன்னர் குடும்பம் என சொல்லப்படுகிற மராட்டிய வசம்சமான காட்கேராவ் சாகேப் குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர், மகாராஜசமுத்திரம், லட்சத்தோப்பு, பெருமாள்கோவில், சிவக்கொல்லை ஆகிய பகுதியில் உள்ள சுமார் 3,000 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது என கூறி வருகிறார். நீதிமன்றத்தின் மூலம் இதற்கான உத்தரவை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், காட்கேராவ் சாகேப் என்கிற ஆனந்தகுமார் அப்பகுதியில் வசிக்கும் மக்களை காலி செய்ய சொல்லி மிரட்டுவதாக கூறி வந்தனர். இதையடுத்து பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள் உள்ளிட்டோர் நேற்று உண்ணாவிரதம் மற்றும் அறந்தாங்கி முக்கம் பகுதியில் கடையடப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக கவுன்சிலர் ஜவஹர்பாபு
இது குறித்து போராட்டத்தை ஒருங்கிணைத்த அதிமுக கவுன்சிலர் ஜவஹர்பாபு கூறுகையில், "மகாராஜசமுத்திரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வீடு கட்டியுள்ளவர்கள் அனைவரிடமும் பட்டா, சிட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் உள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். நகராட்சிக்கு சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்தி வருகின்றனர். 12,000 வீடுகளில் சுமார் 30,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மராட்டிய மன்னர் வம்சத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் சிலரை தன்னுடன் வைத்து கொண்டு இது எங்களுக்கு சொந்தமான இடம் என கூறி மக்களை காலி செய்ய சொல்லி மிரட்டி வருகிறார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது 15 ஆண்டுகளாக அவர் வழக்கை சந்திக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திடீரென மக்களுக்கு இடையூறு செய்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அவரின் செயலை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ, என்.ஆர்.ரெங்கராஜன்
த.மா.கா-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, என்.ஆர்.ரெங்கராஜன் கூறுகையில், "தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்கின்ற கதையாக இது உள்ளது. நாங்கள் இதை முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டும். மன்னர் என்கிற காலாவதியான ராஜா பட்டுக்கோட்டை மக்களை மிரட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளகூடியது இல்லை. நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். அதைவைத்து மக்களை மிரட்டக்கூடாது. இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் ஆனந்தகுமார் வீட்டை முற்றுகையிடுவோம். இது தொடர்பாக நாங்கள் சட்ட ரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம். இந்த விவகாரத்தில் கட்சி சார்பின்றி அனைவரும் ஒன்றாக இணைந்து போராடுகிறோம். இந்த விவகாரத்தில், முதல்வர் தனியாக குழு அமைத்து ஆய்வு செய்து பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேசியதாவது, "தமிழகம் முழுமையிலும் நில நிர்வாக முறைகளில், முரண்பாடுகளால் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. நிலங்களை அபகரிப்பதற்கு மகாராஷ்டிரா மன்னர் குடும்பத்தைச் சார்ந்த ஆனந்தகுமார் என்பவரால் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இரு நீதிபதியைக் கொண்ட அமர்வில், நில உரிமை வழக்கை தள்ளுபடி செய்ததோடு, மேல்முறையீடு செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது என்கிற அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை மூடி மறைத்து தற்போது கீழ் நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் விட்டு மக்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. தமிழக முதல்வர் இவர்களை அழைத்து பேசி தீர்வு காண முன்வர வேண்டும்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
