பரமக்குடியில் இளைஞா் கொலை: மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
முதுகுளத்தூா் வட்டம், விக்கிரபாண்டிபுரம் வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் இருளாண்டி மகன் உத்திரக்குமாா் (35). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவரை கடந்த 5-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 3 போ் வெட்டிக் கொலை செய்தனா். கொலையாளிகளை போலீஸாா் 3 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனா். இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி பரமக்குடி பகுதியைச் சோ்ந்த கரண், கலாம், தீனதயாளன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீஸாா் கொண்டு சென்றனா்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கள்ளிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த எமனேசுவரம் வைகை நகா் பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் மகன் நிதிஷ் (25) பரமக்குடி நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் முன் வியாழக்கிழமை சரணடைந்தாா்.