Doctor Vikatan: பெயின் கில்லர் இல்லாமல் பீரியட்ஸ் வலியை சமாளிக்க முடியாதா?
சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டி.மணி என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தங்கக் கொள்ளை வழக்கில் சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரள தேவசம் போர்டு முன்னாள் அமைச்சரும், கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.
கடகம்பள்ளி சுரேந்திரனின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து கடகம்பள்ளி சுரேந்திரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை சிறப்பு விசாரணைக்குழு முன்னிலையில் நான் விசாரணைக்கு ஆஜரானேன். ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவில்லை.
திருவனந்தபுரம் டி.ஜி.பி அலுவலகம் அருகே உள்ள கிரைம்பிரன்ச் அலுவலகத்தில் வைத்துதான் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். நான் வழக்கமாகப் பயன்படுத்தும் காரில்தான் விசாரணைக்கு ஆஜரானேன்.
இதெல்லாம் பகல் வெளிச்சத்தில் நடந்த விஷயங்களாகும். சபரிமலை தங்கத்தகடு சம்பந்தப்பட்ட விவாதத்தில் அனைத்து ஆவணங்களும் கோர்ட் விசாரணையில் உள்ளன. அனைத்து மீடியாக்களிடமும் அந்த ஆவணங்களின் நகல்கள் உள்ளன.
உன்னிகிருஷ்ணன் போற்றி அளித்த மனுவைப் பரிசீலித்து அவருக்கு உதவவேண்டும் என நான் எழுதிக் கையொப்பமிட்ட கடிதம் உள்ளதாகச் சிலர் பரப்புகிறார்கள்.
அந்தக் கடிதம் யாரிடமாவது இருந்தால் அதை வெளியிடுங்கள். தங்கத்தகடுகளை உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு வழங்கவேண்டும் என நான் உத்தரவிட்டதாக மற்றொரு குற்றச்சாட்டைக் கூறுகின்றனர். அந்த உத்தரவு இருந்தால் அதையும் வெளியிடுங்கள், மக்கள் பார்க்கட்டும்.

உன்னிகிருஷ்ண போற்றியின் நன்கொடையில் எனது தொகுதியில் பலருக்கும் வீடு கட்டிக் கொடுத்ததாக மற்றொரு குற்றச்சாட்டு கூறுகின்றனர். எனது தொகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவியுடனும், நல்ல மனது உள்ளவர்கள் மூலமும் வீடு கட்டிக்கொடுத்தேன்.
அதில் உன்னிகிருஷ்ணன் போற்றி ஸ்பான்சர் செய்த ஒரு வீடுகூட இல்லை. அப்படி இருந்தால் அந்த வீட்டைச் சுட்டிக்காட்டுங்கள். உண்மைக்கு மாறான பிரசாரம் செய்வது சரியானது அல்ல. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் அவதூறுகளைப் பரப்பி மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.
தங்கம் கொள்ளை வழக்கில் என்மீது குற்றச்சாட்டு கூறி 84 நாட்கள் கடந்தும், கோர்ட்டில் ஒரு சிறிய பேப்பர்கூட எனக்கு எதிராக ஆஜராக்க எதிர்க்கட்சியால் முடியவில்லை" என்றார்.




















