ஈரோடு: மேயர் அறையில் முதல்வர் விஜய் படம் வைக்க எதிர்ப்பு; மாநகராட்சியில் சலசலப்ப...
`பள்ளிக்கூடமா... பாலியல் நரகமா?' - பிரான்ஸை உலுக்கும் பள்ளிக் குழந்தைகளின் கதறல்! |என்ன நடக்கிறது?
பிரான்ஸ் நாட்டு அரசு நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மூன்று வயதுக் குழந்தைகள் உட்படப் பல சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கும், உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பது பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் அரசு பிரீஸ்கூல் உள்ளிட்ட பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கண்காணிப்பாளர்களால் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மதிய உணவு இடைவேளை, குழந்தைகள் தூங்கும் நேரம், பள்ளி முடிந்த பிறகான செயல்பாடுகளின்போது இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாரிஸ் நகரத்தின் தலைமை அரசு வழக்கறிஞரான லாரே பெக்குவா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தற்போது 84 ப்ரீஸ்கூல், 20 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 10 குழந்தைகள் காப்பகங்கள் எனப் பல இடங்களில் இந்தக் கொடூரங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது குறித்துத் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஐந்து பேருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது." என்றார்.
இதற்கிடையில், கடந்த 2024-ம் ஆண்டில், 10 வயதுடைய மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒன்பது சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும் 47 வயது கண்காணிப்பாளர் ஒருவர் மீது முதன்முதலில் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அந்த நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுடன் பணிபுரிய அவருக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பு தற்போது கோரியுள்ளது.
அதேப் போல, மேற்கு பாரிஸில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமி ஒரு கண்காணிப்பாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வன்முறைப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைப் பணிநீக்கம் செய்யாமல் வேறொரு பள்ளிக்கு மாற்றியுள்ளது. ஆனால், புதிய பள்ளிக்குச் சென்ற பிறகும், அங்கிருந்த மற்றொரு மூன்று வயது சிறுவனையும் அதே கண்காணிப்பாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த இரண்டு கொடூர வழக்குகள் தொடர்பாகவும் வழக்கறிஞர் லூயிஸ் கெய்லீஸ் கடந்த பிப்ரவரி மாதம் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாரிஸ் நகர மேயர் இம்மானுவேல் கிரிகோயர் ``பிரான்ஸ் நாட்டு அரசுப் பள்ளிகளில் இடைவேளை மற்றும் ஓய்வு நேரங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக உள்ளூர் அதிகாரிகளால் இந்தத் தற்காலிகக் கண்காணிப்பாளர்கள் (Monitors) நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான முறையான கல்வித் தகுதியோ, தொழில்முறைப் பயிற்சியோ இருப்பதில்லை என்றும், இவர்கள் மணிநேர அடிப்படையிலேயே தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த லட்சணத்தால்தான் இத்தகைய கொடூரங்கள் தடையின்றி நடந்துள்ளன.

பள்ளிக் காலத்தில் ஒரு நீச்சல் பயிற்சியின் போது இதே போன்ற பாலியல் வன்கொடுமை எனக்கு நடந்திருக்கிறது. எனவே, தற்போது குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளேன். இனிவரும் காலங்களில் கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கான பின்னணி சரிபார்ப்பை தீவிரப்படுத்தவும், குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை எவ்வாறு அதிகாரிகளுக்குப் புகாரளிப்பது என்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த மாபெரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து #MeTooEcoles என்ற கூட்டு அமைப்பை உருவாக்கியுள்ளனர். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த புகார்களைப் பள்ளி நிர்வாகமும் நகர அதிகாரிகளும் நீண்ட காலமாகப் புறக்கணித்து மூடி மறைக்க முயன்றுள்ளதாக இந்த அமைப்பின் இணை நிறுவனர் பர்கா செருவாலி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியபோது, ``இது ஆரம்பம் தான் என்று நாங்கள் பயப்படுகிறோம், ஏனென்றால் அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்தப் பதிலும் வராத பல பாதிக்கப்பட்ட குடும்பங்களை எங்களுக்குத் தெரியும். நாங்கள் வெறும் கோபத்தில் இல்லை, ஆத்திரத்தின் உச்சியில் இருக்கிறோம். நாங்கள் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் அனைத்தும் காற்றில் கரைந்தது போன்ற உணர்வே ஏற்படுகிறது" என்றார் வேதனையுடன்.
பள்ளிகள் பாதுகாப்பான இடமாக இல்லை என்ற கசப்பான உண்மையை பிரெஞ்சு சமூகம் இப்போதுதான் உணர்ந்து வருகிறது. காலையில் குழந்தையைப் பள்ளியில் விடும்போது, அங்குள்ள நிர்வாகக் குறைபாடுகளால் குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. வாய்மொழி வசைபாடுதல், தலைமுடியைப் பிடித்து இழுப்பது, வாந்தி எடுக்கும் வரை உணவைத் திணிப்பது முதல் பாலியல் வன்கொடுமை வரை அனைத்து வகையான வன்முறைகளையும் குழந்தைகள் எதிர்கொள்வது அதிர்ச்சியளிப்பதாகப் பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.













