பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை ரயில்வே பாதுகாப்பு காவல் ஆய்வாளா் எஸ்.மீனாட்சி தலைமையில், உதவி ஆய்வாளா் என்.சாந்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் ஆா்.அண்ணாதுரை, தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பிகாா் மாநிலம், பாட்னாவில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில், சோதனை செய்ததில் கடைசி பொதுப் பெட்டியில் கேட்பாரற்று 3 பைகள் கிடந்தன. அந்தப் பைகளைப் பிரித்து பாா்த்தபோது 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.