`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வ...
Chennai Book Fair : கருநாக்கு, முள்ளிப்புல்... மிஸ் பண்ணக் கூடாத 5 கவிதைத் தொகுப்புகள்!

கருநாக்கு - முத்துராச குமார்
முத்துராச குமாரின் படைப்பு நிலத்தையும் தொன்மங்களையும் மையமிட்டு எழுந்தாலும், எந்த இடத்திலும் நிலப்பெருமிதம் கொள்ளாமல், நிலத்தின் மீதிருக்கும் முரண்பாடுகளையும், சாதிய, அரசியல் ஒடுக்குமுறைக் கூறுகளையும் எவ்வித சமரசமின்றி எதிர்த்து சமராடக்கூடியது.
வாழ்வின் எதார்த்தங்களை படிமங்களாக்கி இவர் நிகழ்த்தும் அழகியல் தன்மை அற்புதமானவை. இந்த வருடம் வெளிவந்திருக்கும் கருநாக்கு கவிதைத் தொகுப்பும் சாதிய ஆதிக்கத்தன்மையை, இங்கு நிகழ்ந்த ஒடுக்குமுறைச் சம்பவங்களை மண்ணின் சாரத்தோடு நிரம்பியிருப்பவை. அடக்குமுறைக்கெதிராக எழும்பும் இவருடைய கவிதைகள் கொண்டாடப்பட வேண்டியவை..
விலை ரூபாய் 110
சால்ட் பதிப்பகம்
ஸ்டால் எண் : 422, 423

நிலவில் உதித்த கார்முகில் - தேவதேவன்
தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான மூத்த கவிஞராக அறியப்படுபவர் தேவதேவன். இயற்கையின் வழியாக கண்டடைந்த நிலையை மையமிட்டு எழுதும் இவரின் 'நிலவில் உதித்த கார்முகில்' புத்தகம் இந்த வருட புத்தக கண்காட்சியில் வெளியாகியிருக்கிறது. அந்தப்புத்தகத்தின் அட்டைப்படமே நம்மை ஈர்க்கிறது. தன்னுடைய கவிதை பற்றி தேவதேவன் இவ்வாறு சொல்கிறார் “கவிதை, ஒரு சொல் விளையாட்டோ, வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல; அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது.
முதலில் அது அவன் வாழ்வில் ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கி விடுகிறது. பின்னர் அதன் அழகியல், புனைவின்றியே ஒளிரத்தக்க பெருங்காட்சியாகவும் கண்கூடான ஒரு செயல்பாடாகவும் திகழ்கிறது. முதலில் கவிதையில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டோமானால், நாம் நமது என் ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மையறிதலன்றி வேறில்லை என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும்"என்கிறார் .
விலை ரூபாய் 500
வான்கோ பதிப்பகம்
ஸ்டால் எண் : 224

நவீன கவிஞர்களின் முதல் தொகுப்பு - வேரல் பதிப்பகம்
இந்த வருட புத்தக கண்காட்சியில் வேரல் பதிப்பகத்தின் மூலம் தமிழின் முன்னோடி கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. எந்தவொரு படைப்பாளனுக்கும் தன்னுடைய முதல் படைப்பு ஸ்பெசலாகவே இருக்கும். காலம் கடந்தும் வரும் தலைமுறையினரால் முதல் படைப்பு அங்கீகரிக்கப்படுவது முக்கியமானது. அதனை செவ்வனே செய்ய முற்பட்டிருக்கும் வேரலுக்கு பாராட்டுக்கள்…வாங்க மறந்திடாதீங்க…
வேரல் பதிப்பகம்
ஸ்டால் எண் : 609

முள்ளிப்புல் - ச.துரை
தன் கடல் சார்ந்த வாழ்நிலத்திலிருந்து குறியீடுகளையும் படிமங்களையும் தோண்டி எடுக்கும் ச.துரை நவீன கவிஞராக அறியப்படுபவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதியான ‘மத்தி’ தொகுப்பின் வழி கவனம் பெற்றவர். ச.துரையின் கவிதைகளின் மொழி ஒருவித சந்தத் தன்மையுடனும், அமைதியும் ஒழுங்கும் கூடியதாகவும் உள்ளது. அவை நவீனத்துவத்தின் பூரணமான கவித்துவ தொனியை எட்டியிருக்கிறது.’ என கவிஞர் கண்டாரத்தின் ச.துரையின் கவிதைகளை மதிப்பிடுகிறார். மற்றைய கவிதைத் தொகுதியைப் போல ‘முள்ளிப்புல்’ தொகுப்பும் நிச்சயம் சதமடிக்கும்..
விலை ரூபாய் 150
எதிர் வெளியீடு
ஸ்டால் எண் : F 10

கூட்டமாகச் சிரிக்கும் வயலின்கள் - சோ.விஜயகுமார்
இந்தக் காலச்சூழலில் தொடர்ந்து கவிதைக்குள்ளே இயங்கிவரும் கவிஞர்களில் முக்கியமானவராக சோ. விஜயகுமாரைச் சொல்லலாம். மனித உணர்வின் ஊடாட்டங்களை மொழிக்கருவியைக்கொண்டு இவர் தீட்டும் கவிதைகள் அபூர்வமானவை. சில நேரங்களில் நம்மை சிலிர்க்க வைப்பவை. மொழியின் வழியும் உணர்வின் வழியும் தீவிரப்படுத்தி எழுதக்கூடிய இவருடைய கவிதைகள் நம்மை அங்கே நிறுத்தக்கூடியவை. கவிதை வாசிப்பின் வழி பலரை ஆட்கொண்டே இவரின் கூட்டமாகச் சிரிக்கும் வயலின்கள் நூலும் உங்களை ஆட்கொள்ளும்..
விலை ரூபாய் 150
உயிர்மை பதிப்பகம்
ஸ்டால் எண் : F46


















