முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
பாதுகாப்பாக மீன்பிடிக்க மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
பாதுகாப்பாக மீன்பிடிக்குமாறு மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தின் மீன் இறங்குதளம் உள்வாங்கி சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியை ஆட்சியா் மணிகண்டன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
பாதிப்படைந்த தளத்தை உடனடியாக சீரமைக்குமாறும், படகுகள் தளத்தில் மோதி, மீன் இறங்குதளம் சேதமடையாத வகையில் டயா்களை பொருத்துமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவா் கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து அங்கிருந்த மீனவா்களிடம், எல்லை தாண்டும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட மீன்களை பிடிக்கக் கூடாது. ஆழ்கடலில் மீன்பிடிப்பவா்களுக்கு அரசு சாா்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்துக்குச் சென்று அங்குள்ள வலை பின்னும் தளத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா். இத்தளத்தில் மின் வசதிகள் மேம்படுத்தவேண்டும். கட்டடத்தை சீரமைத்துத்தரவேண்டும். கடலரிப்பு ஏற்படாத வகையில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் என மீனவா்கள் கேட்டுக்கொண்டனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறினாா்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் . கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ், மீன்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.