காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!
`பிழைப்பு தேடிவந்தோம்; பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்' - வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள்
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் வளைகுடா நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனியாளாக நின்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வேலை, படிப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளனர். ஆனால் போர் இப்போது ஈரானோடு நிற்காமல் துபாய், அபுதாபி, பஹ்ரைன், தோஹா, ஜோர்டான் போன்ற நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதனால் அந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்களை பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். துபாயை சேர்ந்த ஒரு இந்தியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''நாங்கள் பிழைப்புக்காக இங்கு வந்தோம்.

இப்போது குண்டுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம். மோடிஜியும், இந்திய அரசும் எங்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
90 லட்சம் இந்தியர்கள்
துபாய், அபுதாபியில் ஆயிரக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவம் மற்றும் எம்.பி.ஏ.படிக்கும் இந்திய மாணவர்கள் மத்திய அரசு தங்களை மீட்க வேண்டும் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர உதவி எண்களை அறிவித்து இருக்கிறது. துபாய் போன்ற உலகின் முன்னணி சுற்றுலா தலங்களில் கூட ஏவுகணைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் எந்நேரமும் தெருக்களில் சைரன்கள் ஒலிப்பதால் வெளிநாட்டினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மட்டும் 2 ஆயிரம் பேர் ஈரானில் படிக்கின்றனர். வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், உள்ளூர் நிர்வாகம் சொல்கின்றபடி நடந்துகொள்ளும்படியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தற்போது வளைகுடா நாடுகளில் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதால் தற்போது அங்குள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் மட்டும் 10 ஆயிரம் இந்தியர்கள் இருக்கின்றனர்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர். இதுதவிர புனேயை சேர்ந்த 90 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவிற்கு சென்றனர். அவர்கள் புனே திரும்ப முடியாமல் துபாயில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இப்போது ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளில் தங்கி இருக்கும் இந்தியர்கள் நிலை குறித்து மத்திய விமானபோக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியர்களை வளைகுடா நாடுகளில் இருந்து அழைத்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு தக்கபடி தயார் நிலையில் இருக்கும்படி இந்திய விமான நிலையங்களை கேட்டுக்கொண்டார்.
3 நாளில் 550 பேர் பலி?
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரில் 3 நாட்களில் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ஈரானில் உள்ள அணு ஆயுத தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனை ஈரான் உறுதிபடுத்தி இருக்கிறது.
சவுதி அரேபியாவில் உள்ள உலகில் மிகப்பெரிய எண்ணெய் கிணற்றின் மீதும் ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம், ட்ரோன்களால் தாக்கப்பட்டதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டு, தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சவுதி அரம்கோவால் இயக்கப்படும் இந்த சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















