``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
`புதுச்சேரி பாஜக-வில் நீண்டகால தலைவர்’ - தவெகவில் தஞ்சமடைய என்ன காரணம்? யார் இந்த சாமிநாதன்?
யார் இந்த சாமிநாதன் ?
த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அவரின் பனையூர் அலுவலகத்தில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று அக்கட்சியில் இணைந்தார். அதேபோல அந்த விழாவில் புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசனா இருவரும், விஜய் முன்பு அக்கட்சியில் இணைந்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன், கடந்த 2015 முதல் 2023 வரை பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்தவர். புதுச்சேரி பா.ஜ.க-வில் நீண்டகாலம் தலைவராக நீடித்தவர். 2017-ல் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் கடுமையான அதிகார மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம் அது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொள்ளலாம் என்பது விதி. மாநில அரசுதான் அதை எப்போதும் நியமித்துக் கொள்ளும். அதன்படி அப்போது அதற்கான முயற்சியை மேற்கொண்டார் முதல்வர் நாராயணசாமி.

ஆனால் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக, பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேருக்கு ரகசியமாக நியமன எம்.எல்.ஏ-வாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் கிரண்பேடி. அதில் ஒருவர்தான் இந்த சாமிநாதன்.
தற்போது ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் செல்வகணபதி, மறைந்த அக்கட்சியின் முன்னாள் பொருளாளர் சங்கர் போன்றவர்களும் அந்த ரகசிய பதவிப் பிராணத்தின் மூலம் எம்.எல்.ஏ ஆனவர்கள்.
அதுவரை எந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெறாத மூவரும், புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்தனர். அதன்பிறகு 2021-ல் ராஜ்யசபா எம்.பி-யாக நியமிக்கப்பட்ட செல்வகணபதியை, 2023-ல் புதுச்சேரி மாநிலத் தலைவராக அறிவித்தது பா.ஜ.க தலைமை.
பாஜக-வில் ஓரம் கட்டப்பட்ட சாமிநாதன்
அவர் தலைவர் பதவிக்கு வந்ததும் முதலில் செய்தது முன்னாள் தலைவர் சாமிநாதனை டம்மியாக்கியதுதான். எட்டு ஆண்டுகள் சாமிநாதனால் பொறுப்புகள் பெறப்பட்டவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளைப் பறித்து ஓரம் கட்டினார் செல்வகணபதி.
அதேபோல கட்சி தொடர்பான எந்தக் கூட்டங்களுக்கும் சாமிநாதனுக்கு தகவலாகக் கூட சொல்லாமல், அவரை புறக்கணித்தார் செல்வகணபதி. கட்சியைப் பொறுத்தவரை `ஆக்டிவ்’ தலைவராக வலம் வந்த சாமிநாதன், தலைவர் பதவி பறிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டதால் வெறுத்துப் போனார்.
அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். அதனால் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்ததால், சாமிநாதனை அமைதியாக இருக்கும்படி கட்டளையிட்டது பா.ஜ.க தலைமை.
அதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ என்ற பெயரில், அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு த.வெ.க தலைவர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து கட்சியில் இணைந்தார் சாமிநாதன்.
ஆனால் அது தொடர்பான புகைப்படங்களோ, அதிகாரப்பூர்வ அறிக்கையோ த.வெ.க-வில் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் இன்று பனையூரில் நடைபெற்ற விழாவில் விஜய் முன்பு கட்சியில் இணைந்திருக்கிறார். அவருடன் சென்ற மற்றொருவர் காரைக்கால் தெற்கு தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ அசனா.
கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக, புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது அ.தி.மு.க. இனிமேலும் அந்தக் கட்சியில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அசனா, த.வெ.க வண்டியில் ஏறிவிட்டார்.!
















