பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!
மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.
ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனால் என்ற இளம்பெண் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வேறுவொரு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணத்தின் மூலம் அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது பெற்றோரை சந்திப்பதற்காக குழந்தையுடன் ஷேனாஸ் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். வேறொரு மதத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதினால் விரக்தியிலிருந்த அவரது பெற்றோர் அந்த இளம் பெண்ணை திரும்பச் செல்ல அனுமதிக்காமல் அவர்களது வீட்டில் சங்கிலியில் கட்டி சிறை வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!
அந்த பெண்ணை மீட்டு வர அவரது கணவர் பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அந்த இளைஞரை வீட்டிற்குள் அனுமதிக்காததினால், அவர் பாம்பே உயர் நீதிமன்ற கிளையான அவுரங்காபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஷேனாஸின் பெற்றோரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு சிறை வைக்கப்பட்டிருந்த அந்த இளம் பெண்ணையும் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவரது குழந்தையையும் மீட்டுள்ளனர். பின்னர், அவர்கள் இருவரும் அரசு வழக்கறிஞர் மூலம் அவரது கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, ஷேனாஸின் பெற்றோரின் மீது தற்போது வரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், அந்த பெண் புகாரளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.