கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மே...
பேரும் புகழும் காதலியும் தந்த ஜப்பானில் செட்டில் ஆகிட்டேன்!- 'போடா போடா புண்ணாக்கு' பாடிய நீலகண்டன்
தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ஒரு படம் 'என் ராசாவின் மனசிலே'. ராஜ்கிரண் தயாரித்து நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்தார் மீனா. படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா. நடிகர் வடிவேலுவின் அறிமுகப் படம். படத்தில் வடிவேலுவுடன் நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து 'போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு' என்ற பாட்டைப் பாடுவார்கள். ராஜ்கிரண் வந்ததும் அதில் ஒருவன் அழுதபடியே ட்ரவுசரில் ஒண்ணுக்குப் போய் விடுவான்.
நீலகண்டன் என்ற அந்த சிறுவன் இப்போது ஜப்பானியக் குடிமகன்.
சென்னையில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துவிட்டு அப்படியே சொந்த ஊரான திருநெல்வேலியையும் ஒரு எட்டுப் பார்த்து விட்டுப் போய்விடலாமென சில தினங்களுக்கு இந்தியா வந்திருந்த நீலகண்டனிடம் பேசினோம்.

''எங்க பூர்வீகம் திருநெல்வேலி அருகேயுள்ள கொக்கிரகுளம். ஆனா குடும்பம் எனக்கு விபரம் தெரியறதுக்கு முன்னாடியே சென்னைக்கு வந்திடுச்சு. சினிமா மோகத்துல சின்ன வயசுலயே 'புதிய பூமி' நாடக் குழுவில் சேர்ந்துட்டேன். அதன் மூலமா குழந்தையா இருக்கிறப்பவே சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்குச்சு. தமிழ் மட்டுமில்லாம மலையாளம் உள்ளிட்ட சில மத்த மொழிப் படங்கள்லயும் நடிச்சுட்டேன்.
தமிழில் முகம் நல்லா தெரிஞ்ச படம்னா 'என் ராசாவின் மனசிலே', 'சின்னக் கவுன்டர்' படங்களைச் சொல்லலாம். சின்னக் கவுண்டர்ல ' சுகன்யா தொப்புள்ல விஜயகாந்த் சார் பம்பரம் விடுகிற 'சுட்டி சுட்டி உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி' பாட்டுல வந்தேன். அதேபோல 'ருத்ரா' படத்தில் வந்தேன். மலையாளத்துல மம்முட்டி சார் படத்துல வந்திருக்கேன்.
குழந்தை நட்சத்திரமாகவே நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்ல நடிசிருப்பேன்.
பிறகு ஒருகட்டத்துல கோரியோகிராஃப் பக்கம் போனேன். சோபி மாஸ்டர்கிட்ட அசிஸ்டன்டா 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' உள்ளிட்ட சில படங்கள்ல ஒர்க் பண்ணினேன். பிரபுதேவா மாஸ்டர்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். அதெல்லாம் பசுமையான ஒரு காலம் சார்' என்றவரிடம், ஜப்பான் குடிமகனானது குறித்துக் கேட்டோம்.

'சினிமாவுல இருந்ததால் கலைநிகழ்ச்சிகள் மூலமா வெளிநாட்டு தொடர்பு கிடைச்சது. இங்க மானாட மயிலாட'னு வந்ததில்லையா, அதே மாதிரி ஜப்பான்ல ஒரு டிவி நிகழ்ச்சி. அதுக்கு ஜட்ஜா கூப்பிட்டாங்க. மூணு மாசத்துல திரும்பிடலாம்னு போனவந்தான். அந்த ஷோ முடிஞ்சதும் அங்கேயே சில பசங்க டான்ஸ் கத்துக்கச் சொல்லி வந்து கேட்டாங்க.
சிலருக்கு சொல்லித்தர ஆரம்பிச்சது ஒருகட்டத்துல டோக்கியோவுல 'நீலா டான்ஸ் ஸ்கூல்'ங்கிற அகாடமி தொடங்குற வரை போயிடுச்சு. ஆயிரக் கணக்குல பசங்க அகாடமியில சேர்ந்து படிச்சு வெளியேறி இருக்காங்க. கூடவே விளம்பரம் ஆக்டிங்னு அந்த வாய்ப்பும் வர அப்படியே கன்டினியூ பண்ணிட்டேன். எல்லாம் ஜப்பானிய மொழியிலதான்.
கொஞ்ச காலம் கழிச்சு ஃபுமியின் நட்பு கிடைச்சது. தொழில்நிமித்தம் எனக்கு அறிமுகமான தோழி. நட்பு ஒரு லெவலுக்கு மேல காதலாகிடுச்சு. அவங்க ஸ்கைங்கிற ஜப்பான் ஏர்லைன்ஸ்ல எம்.டியாக பெரிய பொறுப்புல இருக்காங்க.
காதலைக் கூட ஏத்துக்கிடுறோம், அந்தப் பொண்ணைக் கூப்பிட்டுட்டு ஊருக்கு வந்திடுனு ஆரம்பத்துல என் வீட்டுல கெஞ்சிக் கூடப் பார்த்தாங்க. ஆனா பேர், புகழ், ஃபுமி, நல்ல வாழ்க்கைனு எல்லாத்தையும் கொடுத்த ஜப்பானை விட்டுட்டு வர மனசில்லை.

அதனால என் அம்மாவையும் சகோதரர்களையும் ஒருவழியா சமாதானப் படுத்திட்டு ஃபுமியைக் கல்யாணம் செய்துகிட்டு இங்கேயே குடியுரிமை வாங்கி செட்டில் ஆகிட்டேன். சில நேரம் சொந்த நாட்டை விட்டு வந்துட்டோமேனு நினைச்சிருக்கேன். ஆனா 'ஊரைப் பார்க்கணுமா, 12 மணி நேரம்தானே'னு நினைச்சா அந்த நினைப்பு பறந்து போயிடும். எப்படியோ இங்க வந்து 25 வருஷம் ஓடிடுச்சு'' என்கிறார்.
ஜப்பானில் செட்ட்டில் ஆகிவிட்ட போதும், பழைய சினிமா தொடர்புகள் சிலவற்றை விடவில்லை நீலகண்டன்.
''தமிழ்நாட்டுல இருந்து சினிமா தொடர்பான ஆட்கள் யார் ஜப்பான் வந்தாலும் நம்ம அகாடமி வராமப் போக மாட்டாங்க. தொழில்முறை தாண்டி நல்ல தொடர்புல இருக்கறதுன்னா ராஜ்கிரண் சார். அவர்கூட அப்பப்ப பேசிட்டுதான் இருக்கேன்'' என்கிறார்.

















