செய்திகள் :

'பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா?'- ஆளுநரின் `வைகை' பேச்சுக்கு அமைச்சர் வன்னிஅரசு கண்டனம்

post image

நேற்று (ஜூலை.2) மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர் வைகை ஆற்றை பற்றி பேசியதும், ஆலோசனை கூட்டம் நடத்தியதும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் அமைச்சர் வன்னிஅரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று பேசியுள்ளார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர்.

கேரளாவின் ஆளுநராக உள்ள அர்லேகர், கடந்த மார்ச் 12ஆம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார். பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா? என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தி திணிப்பு, தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குலக்கல்வியான சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால் தான், ஒருங்கிணைந்த கல்வி' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று ஒன்றிய அரசு சொல்லி வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு ஆளுநர் இது குறித்து வாய் திறப்பாரா?

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு சொல்லி வருகிறது.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, இந்திய ஒன்றிய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு ஆளுநர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத ஆளுநர் அர்லேகர் அவர்கள், அவருக்கு முன்பு இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தான் தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் அர்லேகர் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ஏதேனும் கோரிக்கை வைத்தாரா?அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என 'ஆலோசனை' பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது.

2014ல் ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது.

இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். எமது முதல்வர் அவர்கள் அதற்கான திட்டங்களை உத்திகளை மேற்கொள்வார்.

ஆளுநர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.

தமிழ் வளர்த்த மதுரையில் 'வசுதைவ குடும்பகம்' என்று தமிழர்களுக்கு பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர். புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை.

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார்.

தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் - நிர்வாகத்துக்குள் ஆளுநர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று ஆளுநருக்கு வன்னியரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க