"அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார்!" - இயக்...
`போதிய தொகை இல்லை; உள்அரங்கில் இடம் கிடைப்பதில்லை; ஆனா.!" - சாலையோர புத்தக கடைகள் ரவுண்ட்அப்
49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய புத்தக வெளியீடுகளும், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் பாலமாக, தினம் ஒரு பேச்சாளரின் பேச்சுக்களோடும், புத்தகக் காட்சி காணும் இடமெல்லாம் ஜனத்திரளுடன் காட்சியளிக்கிறது. இதற்கென நந்தனம் மெட்ரோவில் இருந்து பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து, புத்தக காட்சி நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தின் நுழைவு வாயில் வரை சாலையோர புத்தகக் கடைகள் வழக்கம்போல் முளைத்திருக்கின்றன. சாலையோர பகுதியில் புத்தக வியாபாரிகள் குறைந்த விலையில் புத்தகங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் சாலையோரத்தில் புத்தகங்களை விற்பதால் ஏற்படும் அசெளகரியங்களையும் வாசகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் கேட்டறிய நாம் அவர்களை சந்தித்து பேசினோம்.

பெயர் குறிப்பிட விரும்பாத வியாபாரிகள் நம்மிடம் பேசுகையில், ``எங்களிடம் போதிய தொகை இல்லாததால் புத்தகக் காட்சி உள்அரங்கில் எங்களால் புத்தக அரங்கு அமைக்க முடியாத சூழல் உள்ளது.
வருடா வருடம் நாங்கள் இந்த சாலையை தான் நம்பி இங்கே புத்தகக் கடையை விரிக்கிறோம். உள்ளே கிடைப்பதை விட பத்து ரூபாய், 20 ரூபாய் குறைந்த விலையிலேயே, புதிய புத்தகங்களும், பழைய புத்தகங்களும் நாங்கள் விற்பனை செய்கிறோம். வாசகர்களும் எங்களை நம்பி புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இங்கே புத்தகக் கடையை விரிப்பதற்கு போலீஸாரும் பல கெடுபிடிகளை விதித்தனர். ஆனால் நாங்கள் மேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடை அமைத்திருக்கிறோம்.
எங்களுக்கென்று புத்தகக் காட்சியின் அரங்கின் வெளிப்புறத்தில் ஆவது அடுத்த முறை இடம் ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். பழைய ஆங்கில புத்தகங்களும், அரிய மூலிகை மற்றும் சித்தர்களின் குறிப்பேடுகளும் இங்கே கிடைக்கின்றன.

மொத்தத்தில் எங்களது நோக்கம் வாசிப்பை மக்களிடையே கடத்த வேண்டும் அதற்கு புத்தக அரங்கில் இருந்து புத்தகங்கள் விற்றால் என்ன.? சாலை ஓரத்தில் இருந்து மக்கள் புத்தகங்களை வாங்கி சென்றால் என்ன.?" என நம்பிக்கையாக பேசுகிறார்.
மற்றொரு புத்தக விற்பனையாளரிடம் பேசியபோது, ``எங்களால் அவர்கள் கேட்ட தொகையை கட்ட முடியாததால் தான் சாலை ஓரத்திலேயே கடையை விரித்து இருக்கிறோம். வாசகர்களின் வரவேற்பும் எங்களுக்கு நன்றாகவே இருக்கிறது. போலீஸார் தான் சற்று இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். உள்ளே இருக்கும் ஆங்கில புத்தகங்களுக்கு இணையாக எங்களிடமும் புத்தகங்கள் இருக்கின்றன. நாங்கள் அதை சற்று குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்." என்றார்.
தி.நகரைச் சேர்ந்த பிரபு என்ற வாசகர் நம்மிடம் பேசுகையில், ``நான் இப்போதுதான் புத்தகக் காட்சிக்கு வருகிறேன். நான் எதிர்பார்த்த புத்தகங்கள் உள்ளே செல்வதை விட இங்கேயே குறைந்த விலையில் கிடைக்கிறது. சென்னையில் பழைய புத்தகக் கடைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இது போன்ற சாலையோர புத்தக வியாபாரிகளிடம் பல அரிதான புத்தகங்கள் கிடைக்கவே செய்கின்றன." என்றார்
பெயர் குறிப்பிட விரும்பாத மயிலாப்பூரைச் சேர்ந்த பெண்மணி புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தில் இருந்து திரும்பி வரும்போது நம்மிடம் பேசுகையில், ``உள்ளே கிடைக்காத சில புத்தகங்களும் இங்கே கிடைக்க செய்கின்றன எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ." என்றார்,








மக்கள் பலர் சாலையோரத்தில் இருக்கும் புத்தக கடையில் புத்தகத்தை வாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள். திருவல்லிக்கேணியில் இது போன்று பல சாலையோர புத்தக வியாபாரிகள் உள்ளன. இவர்களுக்கும் உள் அரங்கில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
வெளிநாடுகளிலும் பெருவாரியான மக்கள் இதுபோன்று பேருந்து நிறுத்தங்களிலும் ரயில் நிலையங்களிலும் புத்தகத்தை வாங்குவதும், இது போன்ற புத்தக கடைகள் சாலை ஓரத்தில் அமைத்து இருப்பதையும் நீங்கள் காண முடியும். இவர்களையும் அதிகாரிகள் சற்று கவனிக்க வேண்டும்.




















