டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கு...
'பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்' - இளம்பெண்ணின் வீடியோ; தற்கொலை செய்த நபர்
கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார். பைய்யன்னூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது, பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் தீபக்கை வீடியோ எடுத்து, அவர் தவறான நோக்கத்துடன் தன்னை தொட முயன்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார். அந்த இளம்பெண் வெளியிட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர்.
வீடியோ வேகமாக பரவிய நிலையில், சனிக்கிழமை இரவு அறையில் தூங்குவதற்காக சென்ற தீபக் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவை திறக்கவில்லை. இதை அடுத்து பெற்றோர் ஜோயி, கன்யகா ஆகியோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது, இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தார் தீபக்.
இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெடிக்கல் காலேஜ் காவல்நிலைய போலீஸார் அங்குசென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீபக் பயணம் செய்த பேருந்து ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மைக்கு புறம்பாக இளம் பெண் வீடியோ வெளியிட்டதாக தீபக்கின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வீடியோ வெளியிட்ட இளம் பெண் மீது போலீஸில் புகார் அளிக்க உள்ளதாகவும் தீபக்கின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. தீபக் அந்த நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவருவதாகவும், அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை எனவும் அதன் உரிமையாளர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிரான வீடியோ குறித்து தனது நண்பர்களிடம் வருத்தத்துடன் தீபக் பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே சமயம் இந்த சம்பவம் குறித்து வடகரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக இளம் பெண் வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி ஒரு புகார் தங்களிடம் வரவில்லை என்று வடகரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே வீடியோ வெளியிட்ட பெண் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், `பைய்யனூரில் ரத்த தானம் செய்வதற்காக சென்றபோது, பைய்யனூரில் வைத்து இந்த சம்பவம் நடந்தது. மற்றொரு பெண்ணிடம் அவர் மோசமாக நடந்துகொண்டார். தன்னிடம் நெருங்கி வந்து, அதுபோன்று நடந்துகொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்தே வீடியோ எடுத்தேன்" என அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், 'என்ன சகோதரா உனது நோக்கம்' எனக் கேட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து நடந்து சென்றதாகவும் இளம் பெண் தெரிவித்துள்ளார். அதே சமயம் அவர் தற்கொலை செய்துகொண்டது துக்ககரமானது எனவும், அதை நான் எதிர்பார்க்கவில்லை எனவும் இளம் பெண் தெரிவித்துள்ளார்.





















