இயக்குநர் இரா. சரவணன் எழுதிய சங்காரம் நூல் அறிமுக விழா | Vikatan | விகடன் பிரசுர...
பரமக்குடி: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த எஸ்.எஸ்.ஐ கைது!
பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று ( சனிக்கிழமை ) முதல்வர் ஸ்டாலின் பரமக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைத்தார். முதல்வரின் பரமக்குடி வருகையினை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பரமக்குடி மணிநகர் பகுதியில் சோதனை சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த பெண் போலீஸார் சிலரும் அங்கு பணியில் இருந்தனர். அப்பெண் காவலர்கள் கழிவறைக்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மூலம் வீடியோ காட்சி பதிவாகியுள்ளன.

இதனை கண்ட பெண் காவலர்கள் அந்த செல்போனை எடுத்து வந்து உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த செல்போன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் முத்துப்பாண்டியின் செல்போன் என தெரியவந்தது. இதையடுத்து முத்துப்பாண்டி மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.ஐ முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். காவல் சோதனை சாவடி கழிவறையில் சார்பு ஆய்வாளர் ஒருவரே செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


















