`எல்லா வயதினருக்கும் ஒரே உற்சாகம்' - ஜல்லிக்கட்டு களத்தை சுற்றி நடந்த சுவாரஸ்ய ச...
நெல்லை: தங்கை முறையில் வரும் பெண் மீது காதல்; எதிர்த்த சித்தப்பா வெட்டிக் கொலை; என்ன நடந்தது?
நெல்லை மாவட்டம், முக்கூடலை அடுத்த அடைச்சாணியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலையில் அடைச்சாணி அருகேயுள்ள பாலத்திற்குச் செல்லும் வழியில் சரவணன் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். அவரது உடல் அருகில் அரிவாள் ஒன்று கிடந்துள்ளது.

அப்பகுதி மக்கள் பாப்பாக்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். அரிவாளைக் கைப்பற்றிய போலீஸார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த அரிவாள் யாருடையது என விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் சரவணனின் மனைவியின் அக்கா மகன் பாலமுருகன் என்பவருடையது என போலீஸார் கண்டுபிடித்தனர். சந்தேகத்தின் பேரில் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும், அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சரவணனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸாரின் விசாரணையில், ”தனக்கு தங்கை முறை வரும் சித்தப்பா சரவணனின் மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்தேன்.

சித்தப்பா மகளை எனக்கு திருமணம் முடித்துத் தருமாறு அவரிடம் கேட்டேன். இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மீண்டும் பெண் கேட்டேன். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்தேன்'' என்று பாலமுருகன் கூறி போலீஸாரையே அதிர வைத்துள்ளார்.


















