டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கு...
குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?
நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல ரெளடி கனகராஜ் தென்காசி மாவட்டம், குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் விடுதியில் தனது கூட்டாளிகள் கார்த்திக், சாபின், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ரெளடிகள் ஒழிப்பு தனிப்பிரிவு போலீஸார் தலைமையில் குழுவாக குற்றாலத்திற்கு விரைந்தனர். உள்ளூர் போலீஸார் உதவியுடன் குற்றாலத்தைச் சுற்றியுள்ள விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாடு ஓட்டல் அருகில் ஒரு வீட்டில் செயல்பட்டு வரும் விடுதியில் கனகராஜ் உள்ளிட்ட நால்வர் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதிகாலை 3 மணியளவில் கனகராஜ் உள்ளிட்டோர் தங்கியிருந்த அறையின் கதவுகளைத் தட்டி துப்பாக்கி முனையில் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை நகலைக் கொடுத்து அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.
சென்னை எண்ணூரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே தனது கணவர் கனகராஜ் உயிருக்கு போலீஸாரால் ஆபத்து இருப்பதாக அவரது மனைவி, இ.மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

”கைது செய்யப்பட்ட கனகராஜ் தனது கூட்டாளிகள் மூலம் மற்றொரு கொலை சம்பவத்தை நடத்த திட்டமிட்டுருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை தீவிரமாக கண்காணித்து வந்தோம். அப்போதுதான் அவர் குற்றாலத்தில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இங்குள்ள விடுதிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் கூட்டாளிகளுடன் அவரை கைது செய்துள்ளோம்.” என்றனர் போலீஸார்.




















