குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளை...
`3 பங்களா, 3 ஆட்டோ, கார், கந்துவட்டி' - இந்தூரில் யாசகம் எடுத்து ராஜவாழ்க்கை வாழ்ந்த மாற்றுத்திறனாளி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் யாசகம் எடுத்து வாழ்ப்வர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து நகர் முழுவதும் யாசகம் எடுப்பவர்களை பிடித்து சென்று முகாம்களில் அடைத்தது. அங்குள்ள சரபா பஜார் பகுதியில் ஒரு ஓரத்தில் மாற்றுத்திறனாளியான மங்கிலால் என்பவர் அமர்ந்திருந்தார். அவரால் நடக்க முடியாது. தனது கையில் செருப்பை மாட்டிக்கொண்டு ஒரு சிறிய வண்டி போன்ற ஒன்றில் அமர்ந்து கொண்டு கையால் அந்த வண்டியை தள்ளிக்கொண்டே செல்வார்.
அவர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறார். அவர் யாரிடமும் யாசகம் கேட்பதில்லை. ஆனாலும் அவரின் நிலையை பார்த்து அந்த வழியாக செல்பவர்கள் தங்களால் முடிந்த பணத்தை அவருக்கு யாசகமாக கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

இதில் அவருக்கு தினமும் ரூ.500 முதல் 1000 ரூபாய் கிடைத்து வந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அவரை பிடித்து சென்றனர்.
அவர் தன்னை முகாம்களில் அடைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மங்கிலால் தன்னை பிடித்த அதிகாரி தினேஷ் மிஸ்ராவிடம், தனக்கு பகத் சிங் நகரில் மூன்று மாடி வீடும், ஷிவ் நகரில் 600 சதுர அடி வீடும், அல்வாசாவில் ஒரு படுக்கையறை ஃப்ளாட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார். PMAY திட்டத்தின் இதில் ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். அதோடு அவருக்கு சொந்தமாக மூன்று ஆட்டோ ரிக்ஷாக்களையும் வைத்துள்ளார், அவை அனைத்தையும் அவர் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். மேலும் ஒரு ஸ்விஃப்ட் டிசையர் காரையும், அதனை ஓட்டுவதற்கு சம்பளத்தில் ஒரு டிரைவரை சம்பளத்தில் வேலைக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வியாபாரிகளுக்கு கந்து வட்டிக்கு பணம்
மங்கிலால், சரபா பஜாரில் உள்ள சிறு நகை வணிகர்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அதிலும் கணிசமாக சம்பாதித்து வந்துள்ளார். அவர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து தினசரி அல்லது வாராந்திர வட்டி வசூலித்து வந்துள்ளார். இது குறித்து அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகையில்,'' மங்கிலால் தனக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அவரிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற விபரத்தை இன்னும் கணக்கிடவில்லை. அவருடைய வருமானம் மற்றும் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்," என்று கூறினார்.
அவரது சொத்துக்களை சரிபார்ப்பதற்காக மங்கிலாலின் வங்கிக் கணக்குகள் மற்றும் பிற பண இருப்புகளின் பட்டியலை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். சொந்தமாக வீடு இருந்தும் PMAY திட்டத்தில் வீடு பெற்றதற்கு பதில் அளிக்க அவர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட திட்ட அதிகாரி ரஜ்னிஷ் சின்ஹா இது குறித்து கூறுகையில், "மங்கிலால் குறிப்பிடத்தக்க அளவு சொந்தமாக சொத்து வைத்திருப்பதை உறுதி செய்து இருக்கிறோம். அவர் கந்துவட்டியிலும் ஈடுபட்டுள்ளார், இது ஒரு குற்றம். யாசகம் பெறுவதை ஊக்குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்."என்று தெரிவித்தார்.
மங்கிலால் தற்போது அல்வாசா குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது சகோதரர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தூரின் தெருக்களில் யாசகம் எடுப்பவர்களை அகற்றுவதற்கான பிரச்சாரம் பிப்ரவரி 2024 இல் தொடங்கியது. இதில் பல்வேறு ஏஜென்சி மூலம் இரண்டு ஆண்டுகளில் 6,500 யாசகர்களை அடையாளம் கண்டு, அவர்களில் 4,500 பேருக்கு அரசு நடத்தும் முயற்சிகள் மூலம் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளனர். 1600 பேர் உஜ்ஜைனில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.





















