"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக...
Share Market: டெலிகிராமில் 'டீச்சர்' விரித்த மோசடி வலை; நெல்லை இளைஞர் ரூ.30 லட்சத்தை இழந்தது எப்படி?
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டு எண் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில், ’ஷேர் மார்க்கெட்டிங்’ மூலம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய அந்த இளைஞர், ஆர்வத்துடன் அந்த லிங்கினை க்ளிக் செய்து அதில் இணைந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து டெலிகிராம் மூலமாக தர்ஷினி ஆனந்த் என்ற பெண் அறிமுகமாகி, அஸ்வின் என்ற நபரை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் அந்த இளைஞரை ’குளோஸ் பிரண்ட்ஸ்’ மற்றும் ’ஹாட் பேங்க் பைனான்சியல்’ ஆகிய குரூப்களில் இணைத்துள்ளனர்.

அங்கு ‘டீச்சர்’ என்று அழைக்கப்படும் நபர் ஒருவர் கூறும் ஆலோசனையின்படி பணத்தை முதலீடு செய்தால் பணம் இரண்டு, மூன்று மடங்காகும் என மூளைச்சலவை செய்துள்ளனர்.
முதல்கட்டமாக ரூ.6 ஆயிரம் முதலீடு செய்ய இரு மடங்கு லாபம் கிடைத்தது போல நம்ப வைத்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய அவர், அந்தக் கும்பல் சொன்ன பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சிறுகச் சிறுக பணத்தை அனுப்பினார்.
அவரது ஆன்லைன் வேலட் கணக்கில் ரூ.1 கோடியே 45 லட்சம் லாபம் இருப்பது போல போலியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், மேலும் பணம் கட்ட வேண்டும் அத்துடன் ‘லார்ஜ் சேனல் அக்கவுண்ட்’ திறக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் மொத்தமாக ரூ.30 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார்.
மேலும் ரூ.18 லட்சம் வரியாக கட்டினால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் எனக் கூறியதால்தான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர், இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிவு செய்த சைபர் போலீஸார் விசாரணை நடத்தி வருவதுடன் தர்ஷினி ஆனந்த், அஸ்வின் மற்றும் டீச்சர் என அழைக்கப்பட்ட அந்த நபரைத் தேடி வருகின்றனர்.
”ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப் எண்களுக்கு வரும் தேவையற்ற லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். முகம் தெரியாத நபர்களிடம் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்” என சைபர் கிரைம் போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


















