ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வ...
"என் மகள் கட்டாயப்படுத்தினார்" - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!
மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார்.
ஆமீர் கான், இரா கான், கிரண் ராவ், ஆஷாத் ஆகியோர் 5.9 கிலோமீட்டர் பிரிவில் ஓடினர். ஜுனைத் கான் 10 கிலோமீட்டர் பிரிவில் பங்கேற்றார். மருமகன் நுபூர் முழு மராத்தானில் பங்கேற்றார்.

இதில் பேசிய ஆமீர் கான், ''மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மராத்தானில் கலந்து கொண்டதைப் பார்க்கும்போது ஏற்பட்ட உற்சாகம் ஒவ்வொரு வருடமும் என்னை இங்கு வரவழைக்கிறது. மும்பை மக்களிடம் ஒரு வித வேகம் இருக்கிறது''என்றார்.
'ஏன் மராத்தான் போட்டியில் பங்கேற்றீர்கள்' என்று கேட்டதற்கு, ''எனக்கு மராத்தான் போட்டியில் பங்கேற்பது குறித்து ஐடியா இல்லை. எனது மகள்தான் என்னைக் கட்டாயப்படுத்தினார். எனவேதான் இதில் நான் பங்கேற்றேன்'' என்றார்.
உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதன் ரகசியம் குறித்து ஆமீர் கானிடம் கேட்டதற்கு, ''உணவுமுறை மிகவும் முக்கியமானது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். 8 மணி நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம், அதன் பிறகு உடற்பயிற்சி அவசியம்'' என்று தெரிவித்தார்.
ஆமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பானி பவுண்டேஷன் மற்றும் அகஸ்தியா அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக டாடா மும்பை மராத்தான் 2026 இல் பங்கேற்றனர்.

அவர்கள் தங்கள் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிக்குமாறு சமூக ஊடகங்களில் மக்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
ரூ.45 லட்சம் வென்ற எதியோப்பிய வீரர்
டாடா மும்பை மராத்தான் போட்டியில் எத்தியோப்பியாவின் ஓட்டப்பந்தய வீரரான தாடு அபேட் டெம், ஆடவர் பிரிவில் முதலிடம் வந்து ₹45 லட்சம் பரிசு வென்றுள்ளார்.
மகளிர் பிரிவில் எத்தியோப்பியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை யெஷி கலயு செகோல் முதலிடம் வந்து ரூ.45 லட்சம் பரிசை வென்றார்.
அதிகாலையில் மராத்தான் போட்டி நடந்ததால் மும்பையில் அதிகாலையில் போட்டியாளர்கள் வர வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த மராத்தான் போட்டியை மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகர் தொடங்கி வைத்தார்.





















