சேகர் பாபு, மா.சுப்பிரமணியனுக்கே முன்னுரிமை - கொதிப்பில் உதயநிதி! தலைநகர் திமுக-...
மகள்களின் கல்விக் கனவு: `ரூ.3000 பரிசுக்காக ஒரு தாயின் செருப்பில்லா மாரத்தான்' - நெகிழ்ச்சி வீடியோ
குழந்தைகளின் கல்விக்காக ஓடிய தாயின் தீவிரம் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ராமபாய் ரன்வீர் (47). கணவன் விபத்தில் இறந்ததிலிருந்து குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கத் தொடங்கினார். வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் மூலம் வரும் வருமானம் குடும்பத்தைச் சமாளிக்கவே போதவில்லை.
இதற்கிடையில், தன் இரண்டு மகள்களின் கல்விக் கனவை நிறைவேற்ற, தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் அம்பாஜோகாய் நகரில், அம்ருத் தாவூத் மாரத்தான் போட்டி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.
She didn’t run for a medal. She ran for her daughters ❤️@ 47 yr #RamabaiRanveer#Maharashtra secured 1st place. With no running shoes, a marathon in a saree & slippers. When her slippers slowed her down, she took them off & ran barefoot . Received a prize of ₹3,000 winning pic.twitter.com/RUVDIQmUvQ
— sudhakar (@naidusudhakar) September 1, 2026
அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களின் 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உள்ளூர் மாரத்தானில் ராமபாய் கலந்துகொள்வது என முடிவு செய்தார்.
அப்படி கலந்துகொண்டு வெற்றிபெற்றால் ரூ.3000 கிடைக்கும். அது தன் மகள்களின் கல்விக்கு உதவும் என நம்பினார். அதன் அடிப்படையில், நேற்று மாரத்தான் போட்டி தொடங்கியது. காலில் ஷூ, ஓடுவதற்கு வசதியான டி ஷர்ட் - டிராக்குடன் வந்தப் பெண்களில் ராமபாய் மட்டும் தனியே சாதாரண புடவையில் வந்து நின்றார். அவருக்கான உடை அணியக்கூட நேரமில்லாமல் ஓடத் தொடங்கினார்.
போட்டியில் பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் அவரை எளிதாகக் கடந்துச் சென்றனர். ஆனால் ராமபாய் வேகம் மெல்ல அதிகரித்தது. வேகமாக ஓடிய ராமபாய்க்கு, ஒருகட்டத்தில் காலின் செருப்பு வியர்வையால் நனைந்து வழுக்கத் தொடங்கியது. கூர்மையான கற்கள் நிறைந்த சாலை, ஓடும்போது புடவையைச் சரிசெய்து கொள்ள வேண்டிய சூழல் எனப் பல சவால்கள் இருந்தபோதிலும், அவர் இலக்கை அடைவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
இறுதியில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியாளராக உருவெடுத்தார். போட்டியில் வெற்றி பெற்று ரூ. 3,000 ரொக்கப் பரிசை வென்றார். அவரின் ஓட்ட வேகமும், விடாமுயற்சியும் பார்வையாளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தன் மகள்களின் கல்விக்காக ஒரு தாயின் ஓட்டம் சமூக ஊடகங்களில் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
















