இந்தியாவில் முதன்முறை: வெங்காய EXPRESS? | Trump வெற்றியைக் கொண்டாடும் Elon Musk ...
மகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அதிருப்தி.. கட்சியை எதிர்த்து 150 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
கடைசி நேரத்தில் குவிந்த மனுத்தாக்கல்...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றோடு முடிவுக்கு வந்தது. கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வந்தன. வேட்பாளர்கள் சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று எதிர்பார்த்து கடைசி நேரத்தில் சீட் கிடைத்த வேட்பாளர்கள் அவசர அவசரமாக ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் 15 தொகுதிகளுக்கு தீர்வு எட்டப்படாமல் இருந்தது.
இதனால் அத்தொகுதியில் சீட் கிடைக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர். இதில் மான்கூர்டு தொகுதியில் அஜித்பவார் கட்சி சார்பாக முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் சார்பாக ஒரு மனுவும், சுயேச்சையாக ஒரு மனு என இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்.
அவரை தேர்தலில் நிறுத்தவேண்டாம் என்று பா.ஜ.க அஜித்பவாரிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதனை கேட்காமல் அத்தொகுதியில் போட்டியிட நவாப் மாலிக்கிற்கு அஜித்பவார் கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதத்தை கொடுத்துவிட்டார். அத்தொகுதியில் ஏற்கெனவே மஹாயுதி கூட்டணி சார்பாக சிவசேனா(ஷிண்டே) கட்சியும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி சார்பாக மொத்தமுள்ள 288 தொகுதியில் 286 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் 103 தொகுதியிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 96 தொகுதியிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதியிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
கட்சியை எதிர்த்து 150 பேர் போட்டி
ஆளும் மஹாயுதி சார்பாக பா.ஜ.க 152 தொகுதியிலும், சிவசேனா(ஷிண்டே) 80 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) 52 தொகுதியிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றன. இக்கூட்டணியில் 5 தொகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சிவசேனா (ஷிண்டே) சார்பாக நாசிக் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய மும்பையில் இருந்து கட்சியின் அதிகாரப்பூர்வ கடிதம் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளும் மஹாயுதி கூட்டணி சார்பாக கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து 80 பேர் போட்டி வேட்பாளர்களாக சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்து இருக்கின்றனர். கட்சியில் சீட் கிடைக்காத நிர்வாகிகள் இம்மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். போரிவலி தொகுதியில் பா.ஜ.க மூத்த தலைவர் கோபால் ஷெட்டி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
நவிமும்பையில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மந்தா மாத்ரேயிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக் மகன் சஞ்ஜீவ் நாயக் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இது தவிர மான்கூர்டில் நவாப் மாலிக், நாசிக் நந்த்காவில் சமீர் புஜ்பால் என மொத்தம் 80 பேர் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இதே போன்று எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியிலும் மும்பை, நாசிக், புனேயில் 70 பேர் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை...
பைகுலா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மது சவான், நாக்பூரில் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திரா, ராம்டெக்கில் காங்கிரஸ் கட்சியின் சந்திரபாலும் சுயேச்சைகளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். பைகுலா தொகுதியை காங்கிரஸ் கட்சி கடைசி வரை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அதனை விட்டுக்கொடுக்க மறுத்து அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் இத்தொகுதியில் நட்பு ரீதியில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இன்று முதல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.
வரும் 4-ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். அதற்குள் அரசியல் கட்சிகள் தங்களது கட்சிகளுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வேட்பு மனுவை திரும்ப பெற வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும். தொகுதி பங்கீடு தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கடைசி நாள் வரை தீர்வு எட்டமுடியாமல் திணறின. இனி அடுத்த ஒரு வாரத்தில் சுயேச்சைகளை திரும்ப பெறவைக்கபோராட வேண்டிய நிலையில் இருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88