மகாராஷ்டிரா: 5-ம் தேதி பாஜக தலைமையில் அரசு பதவியேற்பு: அமைச்சரவையில் பங்கேற்க ஷிண்டே சம்மதம்
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றதால் இம்முறை முதல்வர் பதவியை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பின்னர் பா.ஜ.க தலைமைக்கு ஒப்புக்கொண்டார். ஆனாலும் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் 2ம் தேதி புதிய அரசு பதவியேற்பதாக இருந்தது. டெல்லியில் மஹாயுதி தலைவர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். சொந்த ஊரில் ஏக்நாத் ஷிண்டே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு வரும் 5ம் தேதி பதவியேற்கும் என்று பா.ஜ.க வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே இது தொடர்பாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய அரசு 5ம் தேதி பதவியேற்கும் என்றும், அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். புதிய அமைச்சரவையில் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பதவி ஏற்பு குறித்து துணைமுதல்வர் அஜித்பவார் கூறுகையில், ''டெல்லியில் நடந்த மஹாயுதி கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பா.ஜ.க தலைமையில் புதிய அரசு பதவியேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்வர் பதவி பா.ஜ.கவிற்கும், துணை முதல்வர் பதவி மற்ற இரு கட்சிகளுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது''என்றார். ஏன் பதவியேற்பு தாமதமாகிறது என்று கேட்டதற்கு,'' சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்த பிறகு அமைச்சரவை பதவியேற்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு 1999ம் ஆண்டு ஒரு மாதம் கழித்த பிறகு அமைச்சரவை பதவியேற்றது''என்றார்.
டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், தான் அமைச்சரவையில் சேரவேண்டுமானால் தனக்கு துணை முதல்வர் பதவியுடன் உள்துறை இலாகாவும் கொடுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு இப்போது அமைச்சரவையில் இருக்கும் தனது கட்சியை சேர்ந்த 9 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவசேனா எம்.எல்.ஏ.சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில்,''பா.ஜ.கவிற்கு துணை முதல்வர் பதவி இருந்தபோது அவர்களிடம் உள்துறை இலாகா இருந்தது.
அதே போன்று இப்போது எங்களிடம் துணை முதல்வர் பதவி இருக்கும் போது உள்துறை இலாகா கேட்கிறோம். இதில் நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்''என்றார். புதிய அரசு பதவியேற்பு ஆசாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வர் என்பதை பா.ஜ.க இன்னும் உறுதிபடுத்தவில்லை. பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்பில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள செய்தியில், 2019ம் ஆண்டு அமைச்சரவை பதவியேற்க தாமதம் ஏற்பட்ட போது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிந்ததால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார்கள். இப்போது ஏன் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருபுறம் சட்டமன்ற தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.