Jana Nayagan Audio Launch: "என்கிட்ட இருக்கிற அத்தனைக்கும் காரணம் அவர்தான்" - கு...
BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?
வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?”
எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம்.
பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 82
‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… / ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!)
பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி.
ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை.
இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம்.
பாருவிடம் தான் உடன்படும் மற்றும் முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி.
பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா?
“ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும் ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார்.

விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம்.
'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’
‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா?
‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?!

இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது.
இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார்.
“மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி
பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி.
விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம்.

தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம்.
‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச்.
“அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார்.

விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு
வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா?
பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது.
“விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு. வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா?
கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா.
“நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம்.

“பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை
ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல்.
“நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான்.
“நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை.
சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு.

‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’
கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல.
“நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது.
பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார்.
“என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

“ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல்.
இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும்.





















