புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ...
மதுரை: 'தல தோனி' முழக்கம்.... தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை!
இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். தனது தலைமையில் 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்தவர்.
குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த வெற்றிக்கான சிக்ஸர் இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் உள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி, மதுரை கூடல்புதூர் பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா ஆலயத்தில் சிறப்புப் பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
இதற்காக ஆலயத்தில் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டதுடன், கிரிக்கெட் விளையாட்டின் அடையாளமாக கிரிக்கெட் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
தோனியின் கிரிக்கெட் பயணத்தையும், அவரது சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாட்டில், தோனி தொடர்ந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டும் என்றும் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்களால் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும், இந்தியக் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்திற்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அங்கு கூடியிருந்த தோனியின் ரசிகர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் உற்சாகத்துடன் “தல தோனி” என முழக்கமிட்டு தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். கிரிக்கெட் மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தாலும், அமைதியான தலைமைப் பண்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனிக்காக மதுரையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு வழிபாடு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.



















