'தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளும் இணையுமா?' - அஜித் பவார் மனைவியின் மழுப்பல்...
மயிலாடுதுறை கந்த சஷ்டி விழா தொடக்கம்; முருகன் உற்சவர் சிலைக்காக மோதிக் கொண்ட ஆதீன நிர்வாகங்கள்
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை (முருகன்) சன்னதி தனியாக உள்ளது.
தருமபுரம் ஆதீனத்தால் குமரக்கட்டளை சன்னதி நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள முருகன் உற்சவர் சிலை தொடர்பாக திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனங்களுக்கு இடையே பிரச்னைகள் இருந்து வருகின்றன.

தருமபுரம் ஆதீனம் சார்பில் குமரக்கட்டளையில் கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கத்தையொட்டி முருகன் உற்சவர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வீதியுலா நடத்துவதற்கு தருமபுரம் ஆதீன நிர்வாகம் சார்பில் கேட்டுள்ளனர்.
அப்போது, துலா உற்சவம் நடப்பதால் விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா செல்வது ஐதீகம் என்பதால் மாயூரநாதர் சுவாமியுடன் சேர்ந்து வழக்கம்போல் வீதியுலா செல்லும் என்று திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் சார்பில் முருகன் சிலை தருவதற்கு மறுத்துள்ளனர்.
தொடர்ந்து தருமபுர ஆதினத்தின் சார்பில் கேட்கப்பட்டும் மறுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். இதையடுத்து திருவாவடுதுறை நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுப்ரமணியதம்பிரான் சுவாமிகள் செய்தியாளர்களிடம், ''கந்தசஷ்டி விழாவிற்கு முருகர் உற்சவ சிலையை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் கொடுக்கவில்லை, நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றவில்லை'' எனக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து தம்பிரான் சுவாமி தலைமையில் தருமபுரம் ஆதீன நிர்வாகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சுவாமி அலங்காரம் செய்யப்பட்ட இடத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வந்த போலீஸார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வழக்கம்போல் விழா தடையின்றி நடக்கட்டும். அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம் என்று கூறிய நிலையில் முருகன் சிலை தருமபுரம் ஆதீன நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து முருகன் உற்சவ சிலையை வைத்து கந்தசஷ்டி விழா பூஜைகள் தொடங்கி நடந்தன. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் துலா உற்சவத்தையொட்டி சுவாமி புறப்பாடு நடந்தது. இந்த விவகாரம் ஆன்மீக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது.



















