``மொழிபெயர்ப்பில் உணர்வை கடத்த வேண்டும்.!" - மொழிபெயர்பாளர் அரவிந்தன்
``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.!" - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார்.
அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர்.
அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை.
அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
















