பரபர பக்கோடா ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பக்கோடா' - வீட்டிலேயே செய்யலாமே!
`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, திமுக வந்தது எப்படி?
வைத்திலிங்கம் திமுக-வில் இணையப்போவதாக பேசப்பட்டதை, அவரே உண்மையாக்கியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர் வைத்திலிங்கம் கார் அறிவாலயம் நோக்கி சென்றது.
``அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவது சிறந்ததாக இல்லை, அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இனைந்திருக்கிறேன். தேர்தல் வருவதால் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்ஸை விட்டு விலகி வந்துள்ளேன். எனக்கு தனிப்பட்ட முறையில் அதிமுக-வில் இருந்து அழைப்பு வந்தது. அதை நான் நிராகரித்து விட்டேன். தஞ்சாவூரில் இணைப்பு விழா நடக்க உள்ளது" என முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு தெரிவித்துள்ளார் வைத்திலிங்கம்.

வைத்திலிங்கம் சேர்வது முடிவான பின்னரும், அது அரசியல் களத்தில் பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் திமுக-வில் இணைவதை தாமதப்படுத்தி வந்தனர். இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜகவின் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்திருக்கும் இந்த நாளில், இணைப்பை செய்திருக்கிறார்கள்.
அன்பில் போட்ட ஸ்கெட்ச் ; செந்தில் பாலாஜி அழுத்தம்!
அன்பில் போட்ட ஸ்கெட்ச்சுக்கு, செந்தில் பாலாஜி அழுத்தம் கொடுக்க டெல்டாவின் முகமாக அறியப்பட்ட வைத்திலிஙம் விக்கெட் தற்போது திமுகவிற்குள் விழுந்திருக்கிறது. என்ன நடந்தது, ஏன் வைத்திலிங்கம் தி.மு.க-விற்கு சென்றார் என டெல்டா அரசியலில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து டெல்டா மாவட்டங்களில் அரசியல் தெரிந்த சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் நின்று வந்த வைத்திலிங்கம் கூட்டணியில் சீட் பெற்றும் மாற்று சின்னத்தில் நிற்பதை விரும்பவில்லை.
வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சில காரணங்களால் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், வைத்திலிஙத்திற்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பு நீடித்தது.

அதிருப்தியில் இருக்கும் வைத்திலிங்கத்தை தவெக-வுக்கு இழுப்பதற்கு செங்கோட்டையன் முயன்றார். உங்கள் கண்ட்ரோலில் சில மாவட்டங்களை தருகிறோம் என்றெல்லாம் பேசப்பட்டது. கிட்டதட்ட செங்கோட்டையன் அழைப்பை ஏற்கும் மனநிலையில் வைத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் படப்பிரச்னை, சிபிஐ விசாரணை போன்றவற்றால் விஜயிடமிருந்து சிக்னல் வருவதற்கு தாமதமானது. மறுபக்கம், வைத்திலிங்கமும் அமைச்சர் அன்பில் மகேஸ் மனைவியும் நெருங்கிய உறவினர்கள். நிகழ்ச்சிகளில் வைத்திலிங்கம், அன்பில் மகேஸை பார்த்தால் மாப்பிள்ளை என்று தான் அன்பிலை அழைப்பாராம்.
தீவிர அதிமுக விசுவாசி டு திமுக
இந்த உறவை பாலமாக்கி வைத்தியை திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சியை அன்பில் மகேஸ் மேற்கொண்டார். அதற்கான தேவையும் இருந்ததாக சொல்கிறார்கள்.
தஞ்சாவூரில் குறிப்பாக ஒரத்தநாட்டில் ஆளுமை மிக்க நிர்வாகிகள் திமுகவில் இல்லை என தலைமை கருதியது. வைத்திலிங்கம் மூலம் இதை சரி செய்வதற்கே அவருக்கு வலை விரிக்கப்பட்டதாம். தஞ்சாவூரில் விவசாயிகளை திரட்டி விழா எடுத்த வைத்திலிங்கம், `பொன்னியின் செல்வி' என்ற பட்டத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா விசுவாசியாக இருந்தார்.
ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்தார். அந்த சமயத்தில் பேராவூரணியில் நடந்த கூட்டம் ஒன்றில், வைத்திலிங்கத்திற்கு சவால் விட்டார் ஸ்டாலின். தீவிர அதிமுக விசுவாசியாக இருந்தவர் வைத்தி.

இவை திமுக-வுக்கு சென்றால் தனக்கு சங்கடத்தை உருவாக்கும் என கருதியவர் மனக்குழப்பத்தில் இருந்தார். அப்போது, செந்தில் பாலாஜி, `ஒரு வேளை நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வாகத்தான் இருப்பீர்கள், எங்க பக்கம் வாங்க அமைச்சர் தருகிறோம். முதல்வரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்' என அவர் மனதை கரைத்துள்ளார்.
அதன் பிறகு வைத்திலிங்கத்தை சந்தித்த அன்பில் மகேஸ், போன் மூலம் முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தியை பேச வைத்து தயக்கத்தை போக்கியுள்ளார். அப்போது, ``அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருகிறோம் என்பது தங்களுக்கு தெரியும், நீங்கள் தைரியமாக வாருங்கள், உங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றாராம்.
அதன் பிறகே திமுகவில் இணையும் முடிவை தீர்க்கமாக எடுத்தாராம். கடந்த பத்து நாட்களாக திரைமறைவில் நடந்தவை இன்று பொதுவெளியில் அரங்கேறியுள்ளது. தன் மகன் பிரபு உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவி, ஒரத்தநாடு தொகுதியில் சீட், ஆட்சி அமைத்தால் அமைச்சர் என பல்வேறு டிமாண்ட் வைத்தி தரப்பில் வைக்கப்பட்டதாம்.
இதற்கு திமுக தலைமை ஓகே சொன்னதாம். ஆனாலும் வைத்தி இணைவது முதல்கட்ட நிர்வாகிகள் பலருக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளனர் திமுக தலைமை. நேற்று இரவு தான் முக்கிய நிர்வாகிகளுக்கு சொல்லியுள்ளனர். நல்ல நேரத்திற்குள் இணைய வேண்டும் என விரும்பியதால் காலை குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அறிவாலயம் வந்து விட்டார்களாம்.
ஆனால் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் அறிவாலயம் செல்வதற்கு தாமதமாகி விட்டதாம். ஸ்டாலின் காத்திருக்கிறார் என அவருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அரக்க பரக்க ஓடியவர் ட்ராபிக்கில் சிக்கி கொண்டேன் என தாமதத்திற்கு காரணம் சொன்னாராம் சந்திரசேகரன். இணைப்பு வைபவம் முடிந்ததும் தன் ஆதரவாளர்களை தஞ்சாவூரில் நடைபெறும் இணைப்பு விழாவில் சேர்ப்பதற்கான பணிகளில் மூழ்கி விட்டார் வைத்தி என்கிறார்கள்.
``வைத்தி எடுத்திருக்கும் முடிவால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சொல்லப்போனால் எங்களுக்கு ரூட் கிளியர் என்று தான் சொல்ல வேண்டும்" என்கிறார்கள் அதிமுகவினர்.
வைத்திலிங்கம் திமுக-விற்கு சென்றதை விரும்பாத ஆதரவாளர்களை மீண்டும் அதிமுகவில் இழுப்பதற்கான பணிகள் நடக்கிறது. தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இணைப்பு விழா நடப்பதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் பலரை அதிமுகவில் இணைத்து வைத்திக்கு அதிர்ச்சி தரக்குடிய நிகழ்வை நிகழ்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார் என்கிறார்கள்.!


















