பரபர பக்கோடா ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பக்கோடா' - வீட்டிலேயே செய்யலாமே!
`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது
கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப்பிய கணவனின் நாக்கை மனைவி கடித்து துப்பி இருக்கிறார்.
காசியாபாத் என்ற இடத்தில் உள்ள சஞ்சய்புரி என்ற இடத்தில் வசித்து வருபவர் விபின். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு விபினுக்கு இஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது.
விபின் வீடு சிறியதாக இருந்ததால் ஏற்கனவே இருந்த வீட்டிற்கு மேலே ஒரு மாடி கட்டி அதில் விபின் தனது மனைவியோடு வசித்து வந்தார். இது குறித்து விபின் தாயார் கீதா கூறுகையில், ''திருமணமான சில நாட்களில் இஷா தனது விருப்பப்படிதான் இருப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அவருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினாலும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதோடு ரகசியமாக மது அருந்துவது மற்றும் சிகரெட் புகைப்பது போன்ற காரியத்தில் ஈடுபட்டு வந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். இதற்கு எனது மகன் எதிர்ப்பு தெரிவித்தபோது வீட்டை விட்டு சென்றுவிடுவதாக மிரட்டினார்''என்றார்.
முட்டை கறி குறித்து கேள்வி எழுப்பிய கணவன்
சம்பவத்தன்று இரவு விபின் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்து சாப்பிட அமர்ந்தபோது முட்டை குழம்பு இருந்தது. தினமும் முட்டை குழம்புதானா என்று விபின் தனது மனைவியிடம் கேள்வி எழுப்பினார். அதோடு தினமும் முட்டை குழம்பு சாப்பிட்டு வெறுத்துவிட்டது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இஷாவின் மது குடிக்கும் பழக்கம் குறித்து விபின் பேசினார். பிரச்னைக்கு தீர்வு காண சிக்கன் குழம்பு ஆர்டர் பண்ணி சாப்பிடலாமா என்று இஷா தெரிவித்தார்.
அதோடு தனது படுக்கையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை இஷா வெளியில் எடுத்தார். அதற்கு விபின் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்குள் நடந்து வந்த வாக்குவாதம் இரவு 11 மணி வரை நீடித்தது. இறுதியில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
கணவன் நாக்கை கடித்த மனைவி
இந்த சண்டை இரண்டு மணி நேரம் நீடித்தது. இதில் பல முறை இஷா தனது கணவனை அடித்தார். விபின் தனது மனைவியை அமைதிப்படுத்த முயன்றார். இதில் சமாதானம் ஆவது போன்று நடந்து கொண்ட இஷா திடீரென தனது கணவனின் நாக்கை தனது பற்களால் கடித்தார். இதில் அதிக பலத்துடன் கடித்ததில் விபின் நாக்கின் ஒரு பகுதி துண்டாக வந்து விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த விபின் துண்டான தனது நாக்கை கையில் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழே வந்தார்.
அதற்குள் விபின் பெற்றோர் எழுந்தனர். அவர்கள் விபினிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அவரால் பேச முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களும் கூடினர். அவர்கள் இஷாவை கீழே அழைத்து அடித்து உதைத்து என்ன நடந்தது என்று கேட்டனர்.
பேச்சை இழந்த கணவன்
இதில் தனது கணவனின் நாக்கை கடித்ததை இஷா ஒப்புக்கொண்டார். விபின் துண்டான தனது நாக்குடன் மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் துண்டான நாக்கை பொருத்த முடியாது என்று கூறிவிட்டனர். இனி விபினால் வாழ்நாள் முழுக்க பேச முடியாது என்றும் கூறிவிட்டனர். இது குறித்து விபின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இஷாவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் இஷா மிகவும் ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார். அதேசமயம் தனது கணவரின் நாக்கை கடித்ததை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.





















