TN Election: புதுமண தம்பதி, குழந்தையுடன் பெற்றோர் முதல் 92 வயது பாட்டி வரை; வாக்...
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: "யாரும் குற்றவாளிகள் இல்லை" - கடைசியாக இருந்த 4 பேரும் விடுதலை
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நான்கு குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்குண்டு வெடிப்பில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையும், அதன் பிறகு சி.பி.ஐ.யும், கடைசியாக 2011ம் ஆண்டு இவ்வழக்கை தேசியப் புலனாய்வு ஏஜென்சியும் விசாரித்தது.
குண்டு வெடிப்பு நடந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஷ் சர்மா, ராஜேந்திர செளதரி உட்பட 4 பேர் மீது சமீபத்தில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தது.
அவர்கள் மீது தீவிரவாதம், குண்டு வெடிப்பு தொடர்பாக 19 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. தலைமறைவாக இருந்த அவர்கள் நான்கு பேரையும் தேசியப் புலனாய்வு எஜென்சி கடந்த 2012ம் ஆண்டு கைது செய்து இருந்தது.

நான்கு பேரும் தாங்கள் தவறு செய்யவில்லை என்றும் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணைக்குக் கடந்த ஆண்டு தடை விதித்தது. தற்போது இவ்வழக்கில் இருந்து 4 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
நான்கு பேர் மீதான குற்றச்சாட்டில் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இக்குண்டு வெடிப்பில் யாரும் குற்றவாளியாக இல்லை. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் துறவியும் பாஜக முன்னாள் எம்.பி-யுமான பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி புரோஹித் உட்பட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
தற்போது விடுதலை செய்யப்பட்டவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். அவர்களை தேசியப் புலனாய்வு ஏஜென்சி கைது செய்து விசாரணையைத் தொடங்கி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் இப்போது இக்குண்டு வெடிப்பில் அனைவருமே விடுவிக்கப்பட்டு விட்டனர்.





















