எம்.ஜி.ஆருக்கு ’புரட்சித் தலைவர்’ பட்டம் சூட்டிய கே.ஏ கிருஷ்ணசாமி மகன் அதிமுக-வி...
மிதமான வெள்ள அளவை நிர்வகித்தல்; 1932ல் நாள் ஒன்றுக்கு சுமார் 400 அழைப்புகள் | மேட்டூர் அணை ஓசை 32
காவிரி போன்ற வற்றாத பெரிய ஆற்றின் குறுக்கே, பிரமாண்ட அளவிலான நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட அணை கட்டப்பட்டால், பெருவெள்ளம் ஏற்படும்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாகவே இருக்கும். அதனால் கீழே உள்ள ஆற்றில் அதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இயல்பு.
மிக அதிகமான வெள்ளம் பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே திடீரென்று ஏற்படும். அத்தகைய வெள்ளத்தின் உச்ச காலகட்டத்தில் ஆற்றின் கரைகள் நிரம்பி வழிந்து அல்லது வெள்ளம் கரையை உடைத்து கணிசமான அளவு சேதங்களை உருவாக்கலாம்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தை பொறுத்தவரை "இந்த அணை" எந்த அளவுக்கு வெள்ளத்தை சீர் செய்து தரும் என்பதை ஆராய வேண்டும். இந்த நிகழ்வு நீர்த்தேக்கத்தில் உள்ள நீர்மட்டத்தை பொறுத்து அமையும். தேவையான அளவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, அதிக வெள்ளத்தின் தீவிரம் மற்றும் கால அளவு குறித்த போதிய எச்சரிக்கைகளும் முன்னதாக விடப்பட வேண்டும். மேலும் உயர்மட்ட மதகுகள் மற்றும் உபரி நீர் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றத்தை அதிகரித்து நீர்த்தேக்கத்தில் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கலாம். இதனால் வெள்ளத்தின் பெரும் பகுதி நீர்த்தேக்கத்தை அடையும் போது அதை கட்டுப்படுத்த இயலும். சீரான மற்றும் மிதமான நீரோட்டத்தை கட்டுப்பாட்டில் வைக்க இயலும்.

நீர்த்தேக்கத்தில் நீர் ஏற்கனவே நிரம்பி இருக்கும் நேரத்தில் மிக அதிக வெள்ளம் ஆற்றில் வரும்போது மிக மோசமான நிலை ஏற்படுகிறது. ஆற்றில் வரும் நீரின் அளவு குறித்து எச்சரிக்கை போதுமானதாக இல்லாமல் இருந்தாலோ நீர்த்தேக்கத்தின் அளவை குறைக்க இயலாத வகையில் குறைந்த அளவு காலம் மட்டுமே கிட்டுகிறது என்ற அபாய நேரத்தில் உபரி நீரின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும். வெள்ள அளவை நிர்வகிப்பதில் முக்கியமான விஷயங்களே மேற்கண்டவை!
1924 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண வெள்ளத்திற்கு சமமான தீவிரம் மற்றும் கால அளவு கொண்ட வெள்ளம் எந்த அளவுக்கு நீர் தேக்கத்தால் மிதப் படுத்த முடியும் என்பதை கண்டறிய மிக கவனமாக கணக்கிட்டு ஆராயப்பட்டது. மேலும் சாதகமற்ற நிலைமைகள் நிலவும் போது எந்த அளவுக்கு நீர்த்தேக்கத்தின் இயல்பு இருக்க வேண்டும் என்பதை யோசித்து பொறியாளர்கள் கணக்கிட்டார்கள். இந்த முக்கியமான விஷயம் முழுவதும் பொறியியல் கணித சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டது. இவை அனைத்தும், காவிரி ஆற்றில் எவ்வளவு வெள்ளம் கரைபுரண்டு வருகிறது என்பதை ஆதார அளவாக வைத்து கணக்கிட வேண்டிய ஒன்று.
1924-ம் ஆண்டு வெள்ளத்தின் போது, மேட்டூரில் அல்லது அதற்கு அருகிலோ, ஆற்றில் எந்த ஊரிலும், எந்த நீர் அளவீட்டு நிலையமும் இல்லை.
காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும், கபினியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையிலும் உள்ள நீர் வெளியேற்றம் குறித்து அப்போது தெரிந்து கொள்ள முடியும். அடுத்து மேட்டூரில் இருந்து 26 மேல் கீழே பவானி பாலத்திலும் அதற்கும் கீழே 9 மைல் தூரத்தில் உள்ள ஈரோடு பாலத்தில் மட்டுமே தண்ணீரின் அளவை கணக்கிட மானிகள் இருந்தன.
ஆற்றில் அதிக அளவிலான வெளியேற்றம் குறித்து மேலே குறிப்பிட்ட இடங்களில் மற்றும் வழி நெடுகிலும் துல்லியமாக கணக்கிட இயலாத சூழ்நிலையும் அதை தோராயமாகவே கணக்கிடும் வாய்ப்பும் கிட்டியது. இதன்படி அணைக்கு மேல் உள்ள மைசூரில் இரண்டு அணைகளின் வெளியேற்றம் மற்றும் பவானி பாலத்தில் கிடைக்கும் தரவு இவற்றை வைத்து கணக்கிடும் போது, மேட்டூரில் அப்போது (1924-ல்) விநாடிக்கு 4,56,000 கன அடி நீர் வெளியேற்றம் நடந்துள்ளன என்பதை கணிக்க முடிந்தது.
மேட்டூர் அணையின் ஒவ்வொரு அடி ஆழத்திற்கும் அதன் கொள்ளளவு துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு முறையில் வெள்ளத்தின் அளவு நீர்த்தேக்கத்தை விநாடிக்கு 4,56,000 கன அடி என்ற அளவில் வந்தால், நீர் வெளியேற்றம் அதிலிருந்து 15 சதம் குறைத்து 3,87,600 கன அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கணித சமன்பாடுகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
1924 -ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் போல ஏற்படும் போது, காலநிலை மற்றும் வெள்ள அளவுகள் அதிகமாகும் போது நீர்த்தேக்கம் நிரம்பி இருக்கும் வகையில் அணையின் பொறுப்பு அதிகாரி நீர் வெளியேற்றத்தை தேவைக்கு ஏற்றவாறு ஒழுங்கு படுத்துவார் என்பது அவரது முக்கிய கடமை!
நீர் தேக்கத்திலிருந்து வெள்ளம் வெளியேற்றப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்கு வரையப்பட்ட விதிகள் ஒவ்வொரு வெள்ள காலங்களிலும் பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேற்குறிப்பிட்ட அளவு வெள்ள வெளியேற்றும் எதிர்காலத்தில் ஏற்படுமா என்ற சாத்தியம் குறித்து எதுவும் கூற இயலாது என்றாலும் 1924 இல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படா வண்ணம் மிதமான நீர் வெளியேற்றம், நீர்த்தேக்கத்திலிருந்து கடைபிடிக்கும் போது நீண்ட காலத்திற்கு அது தொடரும் போது அதற்கான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால் இத்தகைய வெள்ளம் ஏற்பட்டாலும் பெரும் அழிவை ஏற்படுத்தாது என்பதாக உறுதியாக நம்பலாம் என்று அதற்குண்டான செயல் வடிவத்தை பொறியாளர்கள் வகுத்தனர்.
பின்னாளில், மேட்டூரில் இதற்காக வெள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தி இன்றளவும் ஒவ்வொரு நாளும், மணி நேரமும் நீர்வரத்து துல்லியமாக அளவிட்டு, குறிப்பாக மழைக்காலங்களில் கவனித்து பொறியாளர்கள் நீர் வெளியேற்றத்தை நிர்வகிக்கிறார்கள். தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை ஒகேனக்கல் அருவிக்கு மேலே, தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் உள்ள “பிலிகுண்டலு” என்ற இடத்தில் அளவுமானிகளை பொருத்தி அளந்து கணக்கிட்டு தேவையான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார்கள். இதற்காக உதவி பொறியாளர் அலுவலகம் ஒன்று அங்கே செயல்பட்டு வருகிறது. அதேபோல், மேட்டூர் அணை பூங்கா அருகே ஒரு தனி உதவி பொறியாளர் அலுவலகத்தின் கீழ் இந்தப் பணிகளும், பூங்கா பராமரிப்பும் செயல் படுத்தப் படுகிறது.
மேட்டூர் திட்டத்தின் அலுவலகங்கள் மற்றும் பணிகளின் அனைத்து பகுதிகளுக்கும் இடையேயான தகவல் தொடர்புகளை எளிதாக்க, திட்ட தலைமைப் பகுதி மேட்டூரில் ஒரு தொலைபேசி அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு ரூபாய் 18000 செலவில் அமைக்கப்பட்டது.
மொத்தம் 40 முதல் 50 மைல் நீளம் உள்ள தொலைபேசி கம்பிகள் நிறுவப்பட்டு, 38 துணை நிலையங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதை யாவும் மையமாக ஒரு எக்ஸ்சேஞ்ச் மூலம் நிர்வகிக்கப்பட்டது. இரவு பகலாக தொடர் தொலைபேசி சேவை பராமரிக்கப்பட்டது. தந்தித் துறை மூலம் பவானி, கொடிவேரி, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் வரை டெல்டாவில் உள்ள நிலையங்களுடன் இணைப்பு பராமரிக்கப்பட்டது.
அலுவலகம் மற்றும் பணியாளர்களால் இந்த தொலைபேசி சேவை முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடிதப் பரிமாற்றம் குறைக்கப்பட்டு அதனால் ஏற்படும் கால தாமதங்கள் பெருமளவு குறைக்கப்பட்டன. தொலைபேசி அமைப்பு நிறுவப்பட்டு பராமரிப்பு மற்றும் இதர செலவுகளுக்கு வருடம் சராசரியாக ரூபாய் 2350 செலவானது. இதில் ஊழியர்களின் சம்பளமும் அடங்கும். இந்தத் தொலைபேசி அமைப்பை அணை திட்டத்தின் கீழ் செய்து முடித்ததால் சுமார் 50 சதவீத செலவு மீதமானது!
அதாவது இந்த அமைப்பு இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்தால் வருடாந்திர கட்டணம், அமைப்புச் செலவு, நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிக் கட்டணம் (மொத்தம் 38 நிலையங்கள்) என செலவு அதிகம் பிடித்திருக்கும்.
நவம்பர் 1929 -ல் இந்த தொலைபேசி அமைப்பு செயல்படுத்த தொடங்கியது. 1932-ம் ஆண்டு வரை நாள் ஒன்றுக்கு பயன்படுத்தப்படும் அழைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த நேரத்தில் (1932) நாள் ஒன்றுக்கு சுமார் 400 அழைப்புகள் பயன்படுத்தப்பட்டன. இந்த திட்ட வேலைகள் முடிவுறும் காலங்களில் நாளொன்றுக்கு சுமார் 250 அழைப்புகள் பயன்படுத்தப்பட்டன.
பணியின் ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையே உள்ள பெரும் தூரத்தை கருத்தில் கொண்டால், பணியிடம், அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களாக்கள் வெவ்வேறு தூரங்களில் இருந்ததை கணக்கில் கொண்டால் இலவசமாக இந்த தொலைபேசி பயன்படுத்தல் மூலம் அதிக நேரம் சேமிக்கப்பட்டது. செலவு மிகவும் குறைந்தது.
பெரு வெள்ளக் காலங்களில் மேட்டூருக்கும், மைசூரிலுள்ள சிவசமுத்திரம் மின் நிலையம் இடையே அமைக்கப்பட்ட தொலைபேசி மூலம் மதிப்பிலடங்கா நன்மைகள் பெறப்பட்டன. மைசூர் அரசின் மின்சாரத் துறையின் சொத்தாக இந்த தொலைபேசி இணைப்பு மூலம் ஆற்றில் நிகழும் வெள்ள அளவுகளின் தரவுகள் மிகுந்த பயனை அளித்தன. இதனை கருத்தில் கொண்டு எப்போது வெள்ளம் மேட்டூரை வந்தடையும் என்பதை கணக்கிட்டு மேட்டூரில் வெள்ள பாதிப்புகள் ஏற்படா வண்ணம் இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி சேதங்களை மிகவும் குறைக்க முடிந்தது. குறுகிய நேர கால அளவில், சிவ சமுத்திரத்தில் இருந்து தகவல்களை பெற முடிந்தது. தொலைபேசி, இப்பணித்திட்டத்தில் முக்கிய அங்கம் வகித்தது!

மைசூர்- மெட்ராஸ் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட மின்சார பகிர்வு குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த போது, சிவ சமுத்திரத்திலிருந்து இணைக்கப்பட்ட தொலைபேசி வசதி அகற்றப்பட்டது. இதற்குப் பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் வருவது குறித்த தகவல்கள் அங்கிருந்து தந்தி மூலம் பெறப்பட்டது. அதே சமயம் அணை கட்டுமான பணியும் முடிவுக்கு வந்ததால் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தொலைபேசி மூலம் மேட்டூரில் உள்ள உதவி பொறியாளருக்கு தேவைகள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன. தண்ணீர் மேட்டூரில் இருந்து கல்லணை சென்றடைய சுமார் இரண்டிலிருந்து நான்கு நாட்கள் நேரம் பிடிக்கும் என்பதால் அந்தத் தேவை உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. நடைமுறையில் டெல்டா அமைப்பு முழுவதும் தஞ்சை வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளரின் தலைமையகத்துடன் தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பகுதி தேவைகள் அனைத்தும் உடனடியாக தெரிவிக்கப்பட்டு விரைவாக விநியோகிக்கப்பட்டன.
இன்றைய தேதியில் தொலைபேசி, அலைபேசி வசதிகள் தகவல் பரிமாற்றத்தில் பெரும் மாற்றம் கண்டு இவை பொறியாளர்களின் செயல்பாடுகளை சுலபமாகவும், விரைவாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மாற்றியிருக்கிறது என்பதும் கால மாற்றத்தால் வந்த நன்மை!
நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி இருக்கும் போது, அணையின் மேல் பகுதியின் சுவர், நீரின் அழுத்தத்தால் ஏதேனும் இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகுமா? இந்தக் கேள்வி குறித்து காலம் சென்ற ஒரு தலைமைப் பொறியாளர் சந்தேகம் எழுப்பி அது குறித்த ஆராய்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் அந்த சமயத்தில் பல அங்குலங்கள் அணையின் மேல் பகுதியில் இடப்பெயர்ச்சி இருக்கும் என்று கணக்கெட்டு தெரிவித்தார். அதாவது, அணையின் மேற்சுவர் சிறிது வளைந்து கொடுக்கும் என்பது அவரின் கணிப்பாக இருந்தது. மேலும் முடிக்கப்பட்ட அணையின் உண்மையான கண்காணிப்பின் மூலம் அவரது கோட்பாடு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.
அதன்படி, 1934 ஆம் ஆண்டு வறண்ட வானிலை இருந்தபோது நீர்த்தேக்கத்தில் நீர் மிகவும் குறைவாக இருந்தது. அப்போது அணையின் மேல் புறத்தில் அமைந்திருந்த சாலையின் மையத்தில் 500 அடி இடைவெளியில் "பித்தளை வட்டுக்கள்" கான்கிரீட் தளத்தில் பதிக்கப்பட்டன. அணையின் இரண்டு ஓரங்களிலும் இரண்டு நிரந்தர "தியோடலைட்" கருவிகள் மூலம் ஒவ்வொரு வட்டுக்களின் மையக் கோடுகள் கண்டறியப்பட்டு அதன் மேல் கோடுகள் வரையப்பட்டன. ஒளிவிலகல் காரணமாக பிழைகள் ஏற்படாதிருக்க இந்த வேலை இரவு நேரத்தில் செய்யப்பட்டது.
அந்த ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம், உச்சத்தை எட்டியது. அப்போது வட்டுகளில் வரையப்பட்ட மையக்கோடுகளை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மிகவும் கவனமாக கையாண்ட பரிசோதனை முயற்சி இது!
ஆனால், மையக்கோடுகளில் சிறிதளவு விலகல் கூட ஏற்படவில்லை. இதனால் மேலே குறிப்பிட்ட கோட்பாடு தவறான தரவுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். எனவே, அணையின் ஏரி முழுவதும் நிரம்பி உச்சமட்டத்தில் இருந்தாலும் மேல்புறத்தில் உள்ள நீர் அழுத்தத்தின் காரணமாக அணையின் மேல் புறத்தில் மையக்கோட்டில் எந்த விலகலும் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறலாம் என்று பொறியாளர்கள் அப்போதே முடிவை அறிவித்தனர்.
அதனால், இந்த சந்தேகம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு எழுந்தது.
மேட்டூரில் வானிலை ஆய்வுகள்
மேட்டூர் கிராமத்தை அணைத் திட்ட ஊழியர்கள் ஆக்கிரமித்ததற்கு முன் வானிலை ஆய்வு மையம் எதுவும் அங்கே இருக்கவில்லை. அந்த இடத்தில் மழைப்பொழிவு அளவுகள் போன்ற எந்தவொரு தரவுகளும் கிடைக்கவில்லை.

1927 -ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு மழைமானி நிறுவப்பட்டது. மேலும் 1928-ல் விரிவான சாதனங்கள் பொருத்தப்பட்டு வேறு அளவுகளை பதியும் பணி துவக்கப்பட்டது. மேட்டூரின் புவியியல் அமைப்பு கடுமையான சூறாவளி, புயல்களுக்கு உட்பட்ட இடமாக இருந்ததால், காற்றின் வேகத்தை பதிவு செய்வது அவசியம் என்று கருதப்பட்டது.
இத்தகைய காற்றின் வேகம் அணை கட்டுமான பகுதியில் நிறுவப்படும் இரும்பினால் ஆன கான்கிரீட் கோபுரங்களை (நாம் முன்பு கண்ட கறுப்பு, சிகப்பு கோபுரங்கள்) நிர்மாணிப்பதில் உறுதுணையாக இருக்கும் என்று உணரப்பட்டது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பற்றிய பதிவுகளும் தேவைப்பட்டன. ஏரியில் நீர் ஆவியாவது குறித்த கணக்கீடுகள், ஆவியாதலினால் ஏற்படும் இழப்புகள் இவற்றை கணக்கிடுதல் முக்கியத் தேவையாக இருந்தது.
அணையின் ஏரியில் நீர் ஆவியாதல் ஆண்டுக்கு சுமார் 9 அடி அளவுக்கு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. அணையின் கொள்ளளவு, மழை மற்றும் நீர் ஆவியாதல் என்ற இரண்டையும் பொறுத்து மாறும் தன்மை உடையது.
மேட்டூர் வானிலை மையம், "சைமன்ஸ்" மழைமானி, வெப்பமானிகள் மற்றும் ஈரப்பதத்தை அளக்கும் கருவி, காற்றின் வேகத்தை அளக்கும் கருவிகள், நீர் ஆவியாதலை அளக்கும் உலோக தட்டு போன்ற கருவிகளை நிர்மாணித்து பயன்பாட்டுக்கு வந்தது. இவை அனைத்தையும் கம்பி வேலியிட்ட 25 அடி சதுர இடத்தில் அமைக்கப்பட்டது.
ஒரு சமயத்தில் காற்றை அளக்கும் "அனிமா மீட்டர்" கருவி ஒன்று கான்கிரீட் கோபுரம் ஒன்றின் மேல் புறத்தில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் காற்றின் வேகத்தை அளக்க பொருத்தப்பட்டது. அமெரிக்கன் வெதர் பீரோ (American weather Bureau) நிறுவனத்தின் விவரக் குறிப்புகள் படி, 4 அடி விட்டம், 10 அங்குல ஆழம் கொண்ட நீர் ஆவியாதலை அளக்கும் தட்டு நிறுவப்பட்டது. இதில் நீரின் அளவுகள் காலை மணி 8 மற்றும் மாலை மணி 4 என்ற இரு வேளைகளில் குறிக்கப்பட்டு, அணைப்பகுதியில் நீர் ஆவியாகும் அளவு குறித்து தரவுகள் சேகரிக்கப்பட்டன.
1928-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் 1934 வரை அதை கவனிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 1936-ல் இந்தக் கருவிகள் அணையின் வலது கரையில் துவக்க விழாவுக்கு அமைத்த ஸ்தூபி அருகில் அமைக்கப்பட்டது.
இந்த இடம் அணையின் உயரத்தை விட, அதிக உயரத்தில் இருந்ததால் காற்றின் வேகம், நீர் ஆவியாதல் போன்ற அளவுகள் மிகத் துல்லியமாக கிடைத்தது எனலாம்.
சுமார் 60 சதுர மைல் அளவுக்கு மேட்டூர் அணையில் நீர் தேங்கி நிற்கும் போது குறிப்பிடத்தக்க அளவில் காலநிலை மாற்றம் மேட்டூரில் ஏற்படும் எனவும், அங்கு நிலவும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்குமெனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் அணைக்கு தென்புறம் உள்ள பெரும் பள்ளத்தாக்கு வழியாக தெற்கிலிருந்து காற்று தொடர்ந்து வீசும் என்பதால் சமன் ஏற்பட்டு மேட்டூரில் மிகப்பெரிய அளவில் வெப்ப மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் கணிக்கப்பட்டது.
1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடித்த பிறகு மிகக் குறைந்த அளவில் தென்மேற்கு பருவமழை இருந்தது. அந்த வருடம் இது சராசரிக்கும் கீழே இருந்து. எனவே, உள்ளூரில் பெய்யும் மழை அளவு இதனால் பெரிய அளவில் பாதிப்பு அடையுமா என்பதை அறுதியிட்டு கூற இயலவில்லை.
1927- லிருந்து 1932 -ம் ஆண்டு வரை மேட்டூரில் பொழிந்த மழை அளவு, மழை பெய்த மொத்த நாட்கள் போன்ற விபரங்கள் ஒவ்வொரு மாதமும் பதிவு செய்யப்பட்டன. மேலும் நீர் ஆவியாகும் அளவும் கணக்கிடப்பட்டது.

1929 - 1934 ஆண்டு கால அளவில் 12.5 அங்குலம் நீர் ஆவியானது பதிவாகியுள்ளது.
சாதாரணமாக மேட்டூரில் பதிவான வெப்பநிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களுக்கிடையில் நிறைய வித்தியாசம் பதிவானது. பகலில் அதிக வெப்பநிலையும் இரவில் 30 டிகிரியும் ஓரளவுக்கு வருடம் முழுவதும் சீராக இருந்தது ஓர் சிறப்பு. அப்போது இரவில் அதிக சூடு என்பது மேட்டூரில் இல்லவே இல்லை. கோடைக்காலங்களில் வெப்பநிலை பகலில் அதிகமாக இருந்தாலும் இரவில் அதை சமன் செய்யும் விதமாக குளிர்ச்சியான இரவாக மேட்டூரில் நிலவி வந்தது. அதனால் மனிதர்கள் வாழ்வதற்கு மகிழ்ச்சியான இடமாக மேட்டூர் திகழ்ந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகவும் சூடான பகல் பொழுதாகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வறண்ட வானிலை நிலவும் காலமாகவும் இங்கு இருந்து வந்திருக்கிறது. மேலும் ஏப்ரல் - மே மாதங்களில் தீவிரமான இடியுடன் கூடிய மழை பெய்யும் காலம் இங்கு! மிக கனமழை பெய்வதும் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்வதும் இங்கு வாடிக்கை! அணை கட்டப்பட்ட காலத்திற்கு முன்பாக, சில வருடங்களாக மேட்டூரில் நிலநடுக்கத்தின் அதிர்ச்சி குறைந்த அளவில் உணரப்பட்டதாக செவிவழிச் செய்தி உண்டு. ஆனால், அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் இல்லை. இருப்பினும், அப்போது அருகில் உள்ள கிராமங்களில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக கூறினார்கள்!
அணை கட்டி முடித்த பிறகு இங்கு நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அணை கட்டுவதற்கு முன்பாகவே மேட்டூர் பகுதிகளில் நிலநடுக்க அதிர்ச்சி உணரப்பட்டது என்று கூறப்படும் செய்திகளால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பது வெறும் கற்பனையே. நில அதிர்ச்சியின் தீவிரம் மிகக் குறைந்த அளவுடையதாக இருந்திருப்பதால் உறுதித்தன்மைக்கு எதிர்காலத்திலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்ற பரிபூரண நம்பிக்கை திட்டப் பொறியாளர்களிடம் உறுதியாக இருந்தது.
ஆனால், பார்பரின் குறிப்புகளுக்கு நேர்மாறாக அரசின் Administrative Report for the year 1936-1937, PART II, நீர்ப்பாசன துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஓரிடத்தில் ஒரு சிறிய குறிப்பை நம்மால் கண்டெடுக்க முடிந்தது. அதில் நிலநடுக்கம் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட குறிப்பு காணப்படுகிறது.
“1936-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் ஒரு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் கண்காணிப்பாளர் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்பகுதியை பார்வையிட்டு, அணை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று அறிக்கை அளித்தார்”. லேசான அதிர்வு ஏற்பட்டு இருந்தாலும் அது அணையை பாதிக்கும் அளவு இல்லை என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், அணை கட்டி முடித்து 93 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில், அதற்குப் பிறகு அப்படி ஒரு அதிர்வு இதுவரை உணரப்படவில்லை என்பதும் உண்மை! எல்லாம் இறைவன் செயல்!
நல்லதே நினைப்போம். தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு

















