சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல...
மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது.
அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது.

அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன்.
அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.
















