Hezbollah: 70 ஆண்டுகாலப் பகை; போர் நிறுத்த நாடகம்; லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்; ப...
மேற்கு வங்கம்:``பாஜக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பொது சிவில் சட்டம்" - அமித் ஷா அதிரடி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம், தலைவர்களின் சுற்றுப்பயணம், தேர்தல் வாக்குறுதி என தூள்பறக்கிறது தேர்தல் களம். இந்தமுறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில் பா.ஜ.க-வும், தொடர்ந்து அரியணையில் அமர்ந்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் எனவும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப பத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, ``மதம், சாதி வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் ஆகிய விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கமாகும். ஏற்கெனவே பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க பெங்காலிலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும். மேற்கு வங்க மாநில எல்லைகள் வழியாக நடைபெறும் சட்டவிரோத ஊடுருவல்களை முற்றிலும் தடுப்போம். ஊடுருவல்காரர்களுக்கு எதிராக முழுமையாக சீல் வைக்கப்படும். அதுமட்டுமின்றி, பெங்கால் வழியாக ஒரு பசு கூட இந்தியாவுக்கு வெளியே கடத்தப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும். கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து அரசியல் வன்முறைகளும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க மூன்று 'வெள்ளை அறிக்கைகள்' தாக்கல் செய்யப்படும். மூன்று முறை முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அது நடக்கும்" என்றார்.
















