தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' - புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் ...
யாசினி.. கேள்.. சொல் - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
கீழக்குயில்குடியின் குளக்கரையில் அமர்ந்திருந்த பூவிழி நீருக்குள் தெரியும் தன் உயிர்த் தோழி யாசினியின் முகத்தில் தன்னைப் பற்றிய அவள் எண்ணங்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.
யாசினியின் முகம் அலையும் நீருக்கடியில் கூடத் தெளிவாகவும் மிக அழகாகவும் இருந்தது. வேகமாகத் தன் கைப்பையில் இருந்து சிறிய கண்ணாடியை எடுத்து அதில் தன் முகத்தைப் பார்த்தாள் பூவிழி. தெளிவான அந்தக் கண்ணாடியில் கூட அவள் முகம் அலைந்து கொண்டே இருந்தது.
தண்ணீருக்கு அடியில் கிடக்கும் அந்த முகத்தில் மீண்டும் தன்னைத் தேடிய பூவிழியைப் பார்த்துப் புன்னகையைப் படரவிட்ட யாசினியின் முகம் மெல்ல மேலே எழுந்து வந்தது.
இருவரும் சற்றே சிவந்த நிறம், திருத்தமான முக அழகு என்று இருந்தாலும் யாசினியிடம் இருக்கும் ஏதோ ஒன்று தன்னிடம் இல்லை என்பதைக் கல்லூரியில் காலடி வைத்த நாளிலிருந்து பூவிழியின் மனம் தினமும் சொல்லிக் கொண்டே இருந்தது.

"யாசினி தாமரைப் பூவை மனசுக்குள் நினைக்கிறாய் தானே?" என்று கேட்ட பூவிழியைப் பார்த்துத் தண்ணீருக்குள் இருந்த யாசினி அல்லிப் பூவாகச் சிரித்தாள்.
"நீ நினைத்ததை மட்டுமே நான் சொல்லுவேனென இன்னும் எப்படி நம்புகிறாய் பூவிழி?" யாசினியின் மனக் குரல் பூவிழியின் செவிகளை எட்டவில்லை.
"நீ மட்டுமே என்னுள் புதைந்து கிடக்கிறாய் யாசினி. நமக்குள் எத்தனை வருட நட்பு? என் அளவுக்கு ஆழமாக நமது நட்பு உன் மனசுக்குள்ளும் வேர் விட்டிருக்கிறதா என எனக்குத் தெரிய வேண்டும்?" என்ற பூவிழியை நோக்கித் தனது இரு கரங்களையும் தண்ணீருக்கு வெளியே நீட்டினாள் யாசினி. யாசினியின் கரங்களைப் புறந்தள்ளி விட்டுப் படக்கென எழுந்த பூவிழி மீண்டும் அதே இடத்தில் மௌனமாக உட்கார்ந்தாள்.
எப்போதிலிருந்து யாசினியின் உள் மனசுக்குள் போக நினைத்தோமென யோசிக்க யோசிக்க அவள் தேகம் எங்கும் நடுக்கம் பரவியது. எதற்கு யாசினியின் மனதை வாசிக்க நினைத்தோமென்ற தவிப்போடு தோழியை அன்போடு பார்த்து மனம் கசிந்தாள் பூவிழி.
மெஸ்மரிஸம் பற்றிய ஒரு புத்தகத்தை வாசித்த பின்னரே யாசினியின் உள் மனதை அவளறியாமல் தான் ஆராய நினைத்தை நினைவு கூர்ந்தாள் அவள். படிப்படியாக அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தபடி தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியதை நினைத்து இப்போது கலங்கி நிற்கிறாள்.
தரையில் ஒரு புள்ளி வைத்து அதைச் சுற்றிலும் வட்ட வட்டமாக மிகப் பெரும் வட்டம் வரையிலும் வரைந்தாள் பூவிழி. தான் எழுதும் பென்சிலின் நுனியில் நீண்ட ட்வைன் நூலைக் கட்டி மற்றொரு முனையில் வட்ட வடிவ இரும்பு வளையத்தைக் கட்டித் தொங்க விட்டாள். தன் முழங்கையை வட்டத்துக்கு வெளியே தரையில் ஊன்றி பென்சிலின் ஒரு நுனியைப் பிடித்தவாறு நடுவில் இருக்கும் புள்ளிக்கு நேராக எதிர்நுனி நூலில் தொங்கிய வளையத்தை அசையாமல் நிறுத்தினாள்.
"வட்டத்தின் மேல் இவ்வளையம் நான் கையசைக்காமல் தானாகவே சுழலப் போகிறது" என்று சொல்லிக் கொண்டே இருந்த பூவிழி ஒரு வாரத்தில் தன் பார்வையால் அதைச் சுழல வைத்தாள். இப்போதெல்லாம் அதில் உட்கார்ந்து விட்டால் வளையம் அவள் வரைந்த வட்டத்திற்கு மேலே விர்ரெனச் சுழல்கிறது.
அரைகுறைப் படிப்பு மிகவும் ஆபத்தானது என்பதை உணராத பூவிழி மீண்டும் அப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து வாசித்து அடுத்ததற்கு முயற்சி செய்தாள். சுண்ணாம்பு அடித்த வெண் சுவரில் ஒரு கரும் புள்ளியை வைத்தாள்.
"எனக்குச் சுவர் தெரியவில்லை. இந்தக் கரும்புள்ளி மட்டுமே தெரிகிறது" என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு அதுவும் வசப்பட்டது. அடுத்ததாகத் தோழியின் மனதிற்குள் நுழைய நினைத்தாள் பூவிழி.

யாசினியுடன் கீழக்குயில்குடியின் மரக்கூட்டத்தில் நுழைந்து அடித்தண்டில் இடைவெளியுடன் இருந்த பெரிய அரசமரத்தின் அடியில் அமர்ந்தாள் அவள். தனது மனதால் தோழியின் கண்களையே உறுத்துப் பார்த்தாள். பூவிழியின் மனதுடன் இணைந்து அவள் விழிகளிலும் எந்த அசைவும் இல்லை.
"புதுசாக என்னைப் பார்ப்பது போல ஏன் இப்படி உத்து உத்துப் பார்க்கிறாய்?" என்று கேட்ட யாசினி சிரித்தவாறு தன் விழிகளை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
பதிலே பேசாத பூவிழி "யாசினி என்னைப் பார்! என் கண்களைப் பார்! நீ என்னைத் தவிர எங்கும் பார்க்கக் கூடாது!" என்று தன் மனதின் வழியாக யாசினியின் மனதை நோக்கி மௌன மொழியில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.
பூவிழியின் மனநிலை அறியாத யாசினி கன்னத்தில் கை வைத்து அங்கிருந்த மரங்கள் கதை பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். மண்ணோடும் விண்ணோடும் இந்த மரங்களால் அல்லவா கதை பேசி உறவாட முடிகிறதென யோசித்த யாசினியின் தலைக்குள் பூவிழியின் விழிகளின் கூர்த்த வேகம் விர்ரென உள்ளே பாய்ந்து நுழையத் துடித்தது.
அப்போது சற்று தூரத்தில் இருந்த ஏழிலைப்பாலை மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்து அவர்களை நோக்கிப் பறந்து வந்தது. அவர்கள் அருகே சிறிய சுழல் காற்று காய்ந்த சருகுகளை தங்களுக்குள் இழுத்துக் கொண்டு விர்ரெனச் சுழன்றது. அச்சத்துடன் அவ்விடத்தில் இருந்து எழுந்த யாசினி பூவிழியைத் திரும்பிப் பார்த்துத் திகைத்துப் போனாள்.
அதிதீவிரமாகத் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூவிழி முகத்தின் முன்னால் தனது கைகளை வலதும் இடதுமாக யாசினி அசைத்தாள். பூவிழியின் விழிகளில் எந்த அசைவும் இல்லை. ஏதோ ஒன்று யாசினிக்குள் சத்தமில்லாமல் நுழைந்து அவளை அசைத்துப் பார்த்த கணம் அவள் மனம் விழித்துக் கொண்டது.
தோழியின் தோள்களைப் பிடித்து உலுக்கி எடுத்த யாசினியை ஓங்கி அறைந்தாள் பூவிழி.
"பூ.. பூவிழி. உனக்கு என்ன ஆச்சு? பேய் பிடிச்சிருச்சா?" என்ற யாசினியின் சத்தமான கேள்வியில் திருதிருவென விழித்தாள் பூவிழி.
"என்னிடம் பேயெல்லாய் இல்லை யாசினி. எனக்குள் என்ன நடந்தது என்றே தெரியலை? பயமாக இருக்குது" என்ற தோழியின் பயத்தில் உருகிப் போனாள் யாசினி.
"நீ அடிச்சது வலிக்குது பூவிழி. ரெண்டு வாரமாக நீ எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கிறாய்? உன் முகத்தில் தெளிர்ச்சியே இல்லை. டாக்டரிடம் போகலாமா?" என்று கேட்ட யாசினியை நிமிர்ந்து பார்க்காமல் தலையைக் குனிந்தாள் பூவிழி.
"யாசினியை நம் வசப்படுத்த இப்போது தானே முயற்சி செய்கிறோம். ஒரு வாரத்தில் அவளை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்" என்று தனக்குத் தானே பேசிக் கொண்ட பூவிழி குதித்து எழுந்தாள். தன்னைப் பற்றிய யாசினியின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளும் நாள் பக்கத்தில் வந்து விட்டதென நினைக்கும் போதே பூவிழியின் உள்ளம் குதூகலத்தில் துள்ளியது.
மறுநாள் யாசினியை அழைத்துக் கொண்டு சமணர் படுகைக்குச் சென்ற பூவிழி யாருமற்ற தனிமையில் இருக்கும் அந்த நேரத்தில் தன் கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு அதைப் பிரிக்க முடியவில்லையென தன் மனதிற்குள் உருவேற்றிக் கொண்டே இருந்தாள்.
திடீரென "யாசினி, என் கைகளை என்னால் பிரிக்க முடியவில்லை. என் விரல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு விட்டது" என்ற தோழியின் குரலில் சற்றே பயந்த யாசினி பூவிழியின் விரல்களைப் பிரிக்க முயற்சி செய்தாள்.
"யாசினி உன் விரல்களும் என் விரல்களைப் போல் ஒன்றையொன்று கோர்க்கத் தொடங்குகிறது பாரேன். இப்போது இறுக்கமாகக் கோர்த்துக் கொண்டது. உன்னாலும் பிரிக்க முடியவில்லை" என்று பூவிழி சொல்லச் சொல்ல யாசினியின் கரங்கள் அவள் கட்டுப்பாட்டை மீறி ஒன்றையொன்று கவ்விப் பிடித்துக் கொண்டது.
"நாம நேத்து ஏழிலைப்பாலை மரத்துக்கு அடியில் உட்கார்ந்தது தப்பு பூவிழி. அதில் ஆவிகள் நிறைய இருக்கும்" என்ற யாசினி கத்தி அழ ஆரம்பித்தாள்.
"யாசினி, அழாதே. இதோ நம்மால் நம் விரல்களைப் பிரிக்க முடிகிறது பார். நம் விரல்கள் ஒன்றை விட்டு ஒன்று வலிக்காமல் விலகுகிறது" என்று பூவிழி சொல்ல சொல்ல இருவரின் விரல்களும் விடுபட ஆரம்பித்தது. இப்போது யாசினியின் மனதில் பூவிழியின் மேல் சின்ன சந்தேகம் வந்து ஒட்டிக் கொண்டது.

பூவிழி ஏதோ தவறு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தது யாசினியின் மனம். பயத்தில் யாசினி எதுவும் பேசவே இல்லை. பூவிழியைத் திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென அங்கிருந்து இறங்கி ஓடத் தொடங்கினாள். யாசினியின் பின்னால் அவள் மனதுடன் பேசியவாறு நிதானமாக நடந்தாள் பூவிழி. யாசினி தன் வீட்டுக்குள் நுழைந்து வேகமாகக் கதவைத் தாழிட்டு அப்படியே கீழே மடிந்து உட்கார்ந்து அழத் தொடங்கினாள்.
இரவு வரும் வரையிலும் தன் வீட்டுக்குள் அமைதியாகக் காத்திருந்த பூவிழி தன் அறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டுக் கதவைத் தாழிட்டாள். ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கண்ணாடியின் முன் வைத்து அதன் முன்னால் தானும் உட்கார்ந்தாள். எந்தச் சலனமும் அவளிடம் இல்லை.
மெழுகுவத்தியின் ஒளியை யாசினியாக நினைத்து அவளுடன் உரையாடத் தொடங்கினாள் பூவிழி. "யாசினி நீ உண்மை பேசுகிறாயா என்பதை என்னிடம் உண்மையாகச் சொல்ல வேண்டும். உன் மனதை நான் வசப்படுத்தப் போகிறேன். நீளமான உறக்கத்தில் உன் மனம் அமிழட்டும். நீ உன் மனதில் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்பதைக் காட்டி விடு. என்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதை நீ சொல்லாமலே நான் தெரிந்து கொள்ள வேண்டும்." இப்படியே இரவும் முழுவதும் பூஜையில் ஆழ்ந்து கிடந்தாள் அவள்.
காலையில் யாசினியுடன் பேசி தன்னைப் பற்றிய அவள் எண்ணமதை அறிய அவள் வீட்டுக்கு விரைந்தாள் பூவிழி. வீட்டின் வெளிப்புறம் பெரிய பூட்டு தொங்கியது.
செய்வதறியாது தயங்கி நின்ற அவளை நோக்கி வந்த பக்கத்து வீட்டுப் பெண் "ராத்திரி உங்க வீட்டுக்கு வந்து திரும்பிய யாசினி பேய் பிசாசு பிடிச்ச மாதிரி புலம்பிக் கொண்டே இருந்தாள். டாக்டரிடம் போகனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள். விடிந்ததும் அவளை அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாங்க. அவங்க மனோதத்துவ டாக்டரிடம் போகச் சொன்னதால அங்கே போயிருக்காங்க. நீயும் அவளும் ரெம்ப நெருக்கமாச்சே. படிக்கிற இடத்தில் ஏதாவது பிரச்சனையா? நீ வந்தால் உன்னிடம் விபரம் சொல்லச் சொன்னாங்க யாசினியின் அம்மா" என்றாள்.
"எந்த பிரச்சனையும் இல்லை ம்மா. நேத்து கூட என்னோடு நல்லாத்தானே பேசினாள்! நான் போய்ப் பார்க்கிறேன்" என்று சொன்ன பூவிழி தன்னைப் பற்றி யாசினி தெரிந்து கொண்டதை உணர்ந்தாள். தான் உணர்ந்ததை வேறு யாரிடமாவது யாசினி சொல்லி விட்டால் என்ன செய்வதென யோசித்தபடியே மருத்துவமனைக்கு விரைந்தோடினாள் அவள்.
அங்கே படுக்கையில் கிழிந்த பழந்துணிபோல் நைந்து கிடந்த யாசினியைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டு சத்தமில்லாமல் அழுத பூவிழியைச் சமாதானப் படுத்தினாள் யாசினியின் அம்மா.
அந்நேரம் உள்ளே வந்த டாக்டர் "தூக்கம் இல்லாமல் இருப்பதால் கஷ்டப்படுறாங்க. தூக்கத்துக்கு முதலில் மருந்து கொடுப்போம். இதை வாங்கிட்டு வாங்க" என்று மருந்துச் சீட்டை யாசினியின் அம்மா கையில் கொடுத்தவர் பூவிழியை யோசனையுடன் பார்த்தார்.
"நான் யாசினியின் தோழி பூவிழி. மெஸ்மரின் புத்தகத்தை அவள் புத்தகப் பையில் வச்சிருந்ததைப் பார்த்தேன் டாக்டர்." பூவிழி சொல்ல வந்தது புரியாமல் மகளைப் பார்த்துக் கலங்கி நின்றாள் அவள் அம்மா.
"அப்படியா? அந்தப் புத்தகத்தை எடுத்து வாங்க. நான் பார்க்கனும்?" என்று டாக்டர் சொல்லவும் பூவிழி தன் மனதிற்குள் நொடியில் திட்டங்களை வகுத்தாள்.
"எதையோ பார்த்துப் பயத்துட்டதா டாக்டர் சொன்னாங்க? அது அந்தப் புத்தகமாக இருக்குமோ?" என்று அழுத அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்த யாசினி பூவிழியை நோக்கிக் கைகளை நீட்டியவாறு புரியாத வார்த்தைகளில் கத்தினாள்.
"என்னிடம் மருந்துச் சீட்டைக் கொடுங்க ம்மா. நான் வாங்கிட்டு வாறேன்" என்ற பூவிழியை யாசினியின் அருகே இருக்கச் சொல்லிய அம்மா மருந்துச் சீட்டுடன் வெளியேறினாள். யாசினியை நெருங்கிக் குனிந்து கண்ணடித்துச் சிரித்த பூவிழி யாசினியின் கன்னங்களில் முத்தமிட்டாள்.
"சீ.. நடிக்காதே பூவிழி. நேற்று உன் வீட்டுக்குள் வந்து மெஸ்மரிசம் பற்றி நீ படிச்ச புத்தகத்தை நானும் பார்த்தேன். அதில் என்னவெல்லாம் எழுதி இருக்கோ அதையெல்லாம் நீ எனக்கு செஞ்சதையும் தெரிஞ்சுக்கிட்டேன். இரவு இருட்டு அறைக்குள் பைத்தியம் போல் நீ உட்கார்ந்து இருந்ததையும் பார்த்தேன். என் மூளை தீப்பிடிச்சு எரியுது. உன் மேல நான் வச்சிருந்த உண்மையான நட்புக்காக உன் பேரைச் சொல்லாமல் டாக்டரிடம் போகணும்னு அடம் பிடிச்சு இங்க வந்தேன். என்னை நான் சரி பண்ணிக்கனும். உன்னிடம் இருந்து விலகனும். இனிமே என் முகத்தில் விழிக்காதே! போயிடு!" வெறுப்புடன் பேசினாள் யாசினி.
"மெஸ்மரிஸம் பற்றிய புத்தகம், அதுக்கு நான் செய்த செய்முறை பயிற்சி எல்லாம் இரண்டு இரண்டாகச் செய்து ஒன்றை உன் புத்தக அலமாரியிலும் வச்சுட்டேன் யாசினி. இப்போது அது உன்னிடம் மட்டுமே இருக்குது. என்னோடதை எடுத்து நாம உட்கார்ந்து பேசும் குளத்தில் விட்டெறிஞ்சுட்டேன்." பூவிழியின் பேச்சைக் கேட்ட யாசினி பயத்தில் மயங்கினாள்.
யாசினியின் அம்மா மெஸ்மரிசம் பற்றிய புத்தகத்தையும் பயிற்சிக்கான வட்டங்கள் வரைந்த அட்டை மற்றும் பென்சிலில் வளையத்துடன் கட்டிய கயிறு என அனைத்தையும் எடுத்து வந்து டாக்டரிடம் காட்டினாள்.

புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த டாக்டர் "இது சாதாரணமான புத்தகம். சிறு குழந்தைகள் இதை அரிதாக நினைச்சு விளையாட்டுத் தனமாக இந்த மாதிரி நடந்துக்கிறாங்க" என்று சொல்லவும் யாசினியின் அம்மா நிம்மதியான பெருமூச்சு விட்டாள்.
"இந்தப் புத்தகம் படிக்கிறது தப்பா டாக்டர்?"
"ஒளிச்சு வச்சு எதைப் படிச்சாலும் தப்பு ம்மா. இது ஒரு ஜாலியான அறிவியல் சார்ந்த புத்தகம் தான். நல்லதும் கெட்டதும் ஒரு புள்ளியில் இருந்து பிரியுது. நாம சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கனும்" என்று டாக்டர் சொல்லவும் நிம்மதியானாள் யாசினியின் அம்மா.
மாலையில் அவளை டாக்டர் வீட்டுக்கு அனுப்பும் போது "தேவையில்லாத எதையும் மனசுக்குள் வச்சுக்காதே யாசினி. நன்றாகத் தூங்கி ஓய்வெடு" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வரவும் யாசினியின் அம்மா அந்தப் புத்தகத்தைக் கிழித்துக் குப்பையில் விட்டெறிந்தாள். சுவரின் நடுவில் இருந்த கண்மைப் பொட்டையும் துடைத்து அழித்தாள். யாசினி அம்மாவிடம் எதுவுமே பேசவில்லை. ஒரு வாரம் நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தாள்.
இப்போது கல்லூரியில் யாசினி பூவிழியைப் பார்ப்பதையும் அவளுடன் பேசுவதையும் தவிர்த்து விலகினாள். பூவிழி மனதிற்குள் நகைத்தாள். "உன்னை விட மாட்டேன் யாசினி. உன் நட்பு எனக்கு மட்டுமே சொந்தம். என் அருகில் வா யாசினி" என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவள் வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாள் பூவிழி.
குளத்தில் பூவிழி ஒளித்து வைத்திருக்கும் புத்தகத்துடன் கூடிய அடையாளங்களை எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து அவள் செய்த தவறைக் காட்டிக் கொடுக்க நினைத்துச் சரியான காலத்திற்காகக் காத்திருந்தாள் யாசினி.
இன்று கல்லூரியில் ஆண்டுவிழா. கலைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தாள் பூவிழி. அவள் எங்கும் செல்ல முடியாத அந்த நேரத்தில் கீழக்குயில்குடி வந்த யாசினி குளக்கரையில் பூவிழி ஒளித்து வைத்திருக்கும் புத்தகத்தைத் தேடி தாங்கள் வழக்கமாக அமரும் இடத்திற்கு விரைந்தாள்.
தாமரைப் பூக்களும் அல்லிக் கொடிகளும் படர்ந்து கிடக்கும் குளத்திற்குள் மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. தாமரை இலைகளின் மேல் இருந்த அந்தப் புத்தகமும் யாசினியைப் பார்த்துச் சிரித்தது.
நீளமான மரக்கொம்பை எடுத்து தொரட்டி கட்டி நீருக்குள் விட்டு கரையை நோக்கிப் புத்தகத்தின் அடியில் இருந்த கொடியைத் தன்னை நோக்கி இழுத்தாள் யாசினி.
ஐயோ! அவள் பின்னால் இருந்து அதே கம்பைப் பிடித்து இழுத்து யாசினியைக் குளத்துக்குள் தள்ளியது யார்? இவள் எப்படி இங்கே வந்தாள்? குளத்து நீரைக் குடித்து மல்லாந்து கிடந்த நீச்சல் தெரியாத யாசினியின் உடம்பின் மேல் அந்த புத்தகம் நீந்தி வந்து உட்காந்து கொண்டது. யாசினியின் கடைசி மூச்சில் அவள் விழிகளில் நின்று சிரித்தாள் பூவிழி.
தண்ணீருக்கும் மேல் எழுந்த யாசினியின் கரங்கள் காப்பாற்ற யாரும் இல்லாமல் அப்படியே தண்ணீருக்குள் விழுந்தது.
"யாசினி இனிமேல் உன் மனசுக்குள் நான் இருக்க முடியாது! நீ என்னை பற்றி எதுவும் நினைக்கவே முடியாது! இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன்!" பூவிழியின் குரல் குளத்து நீரில் புகுந்து யாசினியின் செவிகளைத் தழுவி அகன்றது.
-கலைமதி சுப்பையா
பேரையூர்
இராமநாதபுரம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


















